நான் அவனில்லை அஜீத் தன்னிலை விளக்கம்

0
41

நடிகர் அஜித் சமூக வலைத்தளப் பக்கத்தைத் துவங்கியதாக வெளியான அறிக்கைக்கு, அஜித்தின் சட்ட ஆலோசகர்கள் பொது அறிவிப்பு வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளனர்.

திரைப்படங்களின் டீசர், ட்ரெயிலர், போஸ்டர் முதற்கொண்டு அனைத்துவிதமான அப்டேட்களும் தற்போது சமூக வலைத்தளங்கள் வாயிலாகவே வெளியிடப்பட்டு வருகிறது. ரசிகர்களுடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தவும், தனது ரசிகர்களின் எண்ணிக்கையைப் பெருக்கிக் கொள்வதற்கும் பலரும் சமூக வலைத்தளங்களையே ஆயுதமாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் தொடங்கி டிக் டாக் வரையான தளங்களில் பல முன்னணி நடிகர்களும் இயங்கி வருகின்றனர். இத்தகைய செயலிகளைப் பயன்படுத்தாத நடிகர்-நடிகைகள் விரல்விட்டு எண்ணும் அளவில் தான் இருக்கிறார்கள். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் நடிகர் அஜித் குமார்.

டிவிட்டரில் இல்லாத அஜித், பல நேரங்களில் டிவிட்டர் ட்ரெண்டிங்கில் இடம்பிடிப்பதோடு, டிவிட்டர் சண்டைகளுக்கும் காரணமாக மாறிவிடுகிறார். ‘அஜித் சமூக வலைதளங்களை எப்போது பயன்படுத்தப் போகிறார்? அவரது ட்வீட்கள் எப்படியாக இருக்கும்?’ என்பது போன்ற பல கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் நெடுங்காலமாக நிலவி வருகிறது.

தங்கள் திரைப்படங்கள் வெளியாகும் நேரத்தில் புதுப்புது உத்திகளைக் கையாண்டு படத்திற்கான புரொமோஷன் தேடும் நடிகர்களின் மத்தியில், எந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளாமல், எந்த ஊடகத்திற்கும் பேட்டி அளிக்காமல் இலைமறை காயாகவே அஜித் இருந்து வருகிறார்.
தனக்காக இயங்கி வந்த ரசிகர் மன்றங்களையும் கலைத்து ரசிகர்களிடமிருந்து சற்று தொலைவாகவே நிற்கிறார். இந்த நிலையில் பலரது கேள்விக்கும் விடை என்பதாக ‘அஜித் சமூக வலைதளங்களில் இயங்கப் போகிறார்’ என்ற அறிக்கை ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது
அஜித்குமார் என்ற பெயரும், அவரது கையொப்பமும் இடம்பெற்ற அந்த அறிக்கையில், “என்னுடைய ரசிகர்களுக்கான ஓர் அறிக்கை. நான் பல வருடங்களுக்கு முன்னர் அனைத்து சமூகவலைதளங்களில் இருந்தும் ஒதுங்கியிருந்ததுடன் எனக்கான மன்றங்களையும் கலைத்திருந்தேன்.
இதற்கான காரணங்களை பல முறை நான் உங்களிடம் தெரிவித்திருந்தேன். இந்நிலையில், தற்போது மீண்டும் சமூகவலைதளங்களில் இணைய வேண்டிய காலம் வந்துவிட்டது.

அந்த வகையில் இந்த அறிக்கையின் மூலம் இது என்னுடைய உத்தியோகப்பூர்வ முகப்புத்தகம் என்பதனை தெரிவித்துக் கொள்வதுடன் இதன் மூலம் நீங்கள் என்னுடன் இணைந்து கொள்ளலாம் என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இதனை காரணமாக வைத்து சமூக வலைதளங்களில் எனது ரசிகர்கள் எந்தவித தவறான செயல்பாடுகளிலும் ஈடுபடக்கூடாது என கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறப்பட்டிருந்தது.

இந்த அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து அஜித் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருந்தனர்.
ஆனால் இந்த அறிக்கை போலியானது. இத்தகைய அறிக்கையை நாங்கள் வெளியிடவில்லை என்று அஜித் தரப்பில் கூறப்பட்டது. மேலும் இதுவரை வெளியான அஜித்தின் அறிக்கைகள் அனைத்தும் தி. நகரில் உள்ள அலுவகத்தில் இருந்து தான் வெளியிடப்படும்.
இது அஜித்துக்கே அதிர்ச்சியைத் தருவதாக இருக்கிறது எனவும் அவரது வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தத் தகவல்களை மேலும் உறுதிபடுத்தும் விதமாக நடிகர் அஜித்தின் சட்ட ஆலோசகர்கள் சார்பில் பொது அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் “மார்ச் 6, 2020 தேதியில் அஜித்குமார் வெளியிட்டதாக கடிதம் ஒன்று சமூகஊடகங்களில் பரவி வருவது அவரது கவனத்திற்கு வந்துள்ளது. அதில் சமூகஊடகங்களில் மீண்டும் சேர முடிவு செய்துள்ளதாகவும், அதிகாரப்பூர்வ கணக்கு வைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டது போல் உள்ளது. அந்தக் கடிதம் அஜித்குமார் அவர்களின் பெயருடன் போலியான தலைப்பில் அச்சிடப்பட்டு மேலும் அவரது போலி கையொப்பத்தையும் இணைத்திருப்பதைப் பார்க்கும் போது அதிர்ச்சி அளிக்கிறது” என்று குறிப்பிட்டு முந்தைய அறிக்கையை முழுவதுமாக மறுத்துள்ளனர்.

மேலும், “அந்த கடிதம் அஜித்குமார் அவர்களால் வெளியிடப்படவில்லை என்றும் அந்த கடிதத்தில் தெரிவித்த கருத்துக்கள் யாவும் மறுக்கப்படுகின்றன என்றும் திட்டவட்டமாக தெரிவிக்க அவர் தற்போது ஒரு அறிவிப்பை வெளியிட விரும்புகிறார்” என்று குறிப்பிட்டு அஜித் வலியுறுத்த விரும்புவதாக சில தகவல்களையும் இணைத்துள்ளனர். அதில்,

1. அவருக்கு அதிகாரபூர்வ சமூக ஊடக கணக்குகள் எதுவும் இல்லை.

2. அவர் எந்த சமூக ஊடகங்களிலும் இணைய விரும்பவில்லை.

3. சமூக ஊடகங்களின் எந்தவொரு கருத்தையும் மற்றும் எந்தவொரு ரசிகர் பக்கத்தையும் குழுவையும் அவர் ஆதரிக்கவில்லை.

4. மீண்டும் சமூக ஊடங்களில் சேரப்போவதாகக் கூறி வந்த இந்த போலி கடிதத்தை அவர் வெளியிடவில்லை.

என்ற அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தது. இதன் படி அஜித் சமூக வலைதளங்களைப் பயன்படுத்த வாய்ப்பில்லை என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், தவறான அறிவிப்பை வெளியிட்ட மற்றும் அஜித்தின் கையொப்பத்தை மோசடி செய்த குற்றவாளியைக் கண்டுபிடிக்கத் தேவையான சட்ட நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். இந்த அறிக்கை மூலமாக, அஜித் சமூக ஊடங்களில் இணையப் போவதில்லை என்ற உண்மை உறுதிபடுத்தப்பட்டாலும், அந்த உண்மை அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றதையே தந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here