சக்ராபடத்தைவெளியிட நீதிமன்றம் நிபந்தனை

0
126
நடிகர்விஷால் 4 கோடி ரூபாய்க்கான உத்தரவாதத்தை செலுத்தும் பட்சத்தில் அவர் நடித்துள்ள சக்ரா படத்தை வெளியிடலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் விஷால் – தமன்னா நடிப்பில் வெளியான ஆக்‌ஷன் என்ற படத்தை ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் ரவீந்திரன் தயாரித்திருந்தார். படத்தில் நஷ்டம் ஏற்பட்டால் 8 கோடியே 29 லட்சத்து 57 ஆயிரத்து 468 ரூபாயை திருப்பித்தருவதாக கூறி, டிரைடெண்ட் நிறுவனத்தின் ரவீந்திரனுடன் நடிகர் விஷால் உறுதி அளித்து ஒப்பந்தம் செய்திருந்தார்.
ஆனால் ஆக்‌ஷன் படம் நஷ்டம் ஏற்பட்ட நிலையில், விஷால் வாக்குறுதியை நிறைவேற்றாமல் இழுத்தடித்தாக கூறப்படுகிறது. இதற்கிடையே இயக்குனர் ஆனந்தன் என்பவர் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்திற்கு ஒரு கதையை சொல்லி அதை படமாக்க ஒப்பந்தமும் செய்துள்ளார்.தற்போது விஷால் நடிப்பில் “சக்ரா” என்ற படத்தை இயக்குனர் ஆனந்தன் இயக்கி வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. சமீபத்தில் படத்தின் டீசரும் வெளியிடப்பட்டுள்ளது.
தங்கள் நிறுவனத்திடம் கூறிய அதே கதையை இயக்குனர் ஆனந்தன், நடிகர் விஷாலை வைத்து ‘சக்ரா’ என்ற பெயரில் படம் எடுத்துள்ளதாகவும், அந்த படத்தை OTTயில் வெளியிட திட்டமிட்டுள்ளதால், படத்தை வெளியிட தடை விதிக்கக்கோரி ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.இ.ஆஷா, ஆக்சன் படத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில், 8.29 கோடி ரூபாய்கான உத்திரவாதத்தை நடிகர் விஷால் அளிக்க வேண்டும் என்றும் எந்த வகையில் உத்தரவாதம் அளிக்க போகிறார் என்பது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஆஷா முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, விஷால் தரப்பில் ஆக்‌ஷன் படத்தை வெளியிட்டதில் வசூலானதாக கூறும் தொகை தவறானது என்றும், குறைந்தபட்ச உத்தரவாதம் அடிப்படையிலேயே ஒப்பந்தம் போடப்பட்டதாகவும், அதனால் வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என தெரிவிக்கப்பட்டது.
பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், இரண்டு வாரத்தில் 4 கோடி ரூபாய்க்கான உத்தரவாதத்தை விஷால் தாக்கல் செய்ய வேண்டுமெனவும், அவ்வாறு தாக்கல் செய்த பின்னர்தான் சக்ரா படத்தை வெளியிட வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளார்.
படத்தை வெளியிட்ட இரண்டு வாரத்தில் மீதமுள்ள 4 கோடியே 29 லட்சத்து 57 ஆயிரத்து 648 ரூபாய்க்கான உத்தரவாதத்தை தாக்கல் செய்ய வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இந்த விவகாரத்தில் மத்தியஸ்தரை டிசம்பர் 23ஆம் தேதிக்குள் நியமிக்கும் நடவடிக்கைகளை டிரைடெண்ட் ஆர்ட்ஸ் மேற்கொள்ள வேண்டுமெனவும், இந்த விவகாரத்தில் மத்தியஸ்தர் உரிய முறையில் தீர்வு காண வேண்டும் என அறிவுறுத்தி, வழக்கை முடித்து வைத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here