நம்பலாமா? வேண்டாமா?

கன்சல்ட்டன்சி… என்ற வார்த்தையைக் கேட்டாலே, ‘ஐயய்யோ ஏமாற்றுக் கும்பல்’ என்று பதறி ஓடுபவராக இருந்தால். இன்னும் நீங்கள் விழிப்புணர்வு பெறவில்லை என்பதே பதில்.
ஊரில் ஏதோ ஒரு மருத்துவர் போலி என்பதற்காக மொத்த மருத்துவரையும் குறை சொல்லத்தான் முடியுமா? அல்லது சிகிச்சை பெற முடியாமல்தான் இருக்க முடியுமா?
இதுதான் இங்கிருக்கும் பிரச்சினை. நம் மா நிலத்தில் இயங்கும் ஏதோ சில கன்சல்ட்டன்சிகள் போலியானவையே. அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், கன்சல்ட்டன்சி என்பவை எல்லாமே போலி அல்ல. காமாலை கண்டவனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் என்று சொல்வார்களே அதேபோலத்தான் நாம் பெரும்பாலும் சிந்தனைகளை வளர்த்து வைத்திருக்கிறோம்.
முதலில் கண்ணாடியை கழற்றி வையுங்கள். உண்மையை அலசுங்கள், விழிப்புணர்வைப் பெறுங்கள் நீங்கள் பெற்ற விழிப்புணர்வை மற்றவர்களுக்கும் பகிருங்கள் என்பதே இந்தக் கட்டுரையின் முக்கிய நோக்கம்.
கன்சல்ட்டன்சியை பொறுத்தவரையில் பலவிதங்களில் செயல்படுகிறது. சில கன்சல்ட்டன்சி வெளி நாட்டு வேலைவாய்ப்புகளை மட்டும் பெற்றுத்தரும், சில கன்சல்ட்டன்சி கூலியாட்களை மட்டும் ஏற்பாடு செய்து தரும். சில கன்சல்ட்டன்சி உள்ளூருக்கு மட்டுமே வேலைவாய்ப்பை ஏற்பாடு செய்து தரும். சில கன்சல்ட்டன்சி மாநில அளவிலான வேலைவாய்ப்புகளை பெற்றுத்தரும். சில கன்சல்ட்டன்சிக்கள் தேசிய அளவிலான வேலைவாய்ப்புகளை பெற்றுத்தரும்.
பெரும் எம்.என்.சி. நிறுவனங்கள், ஐ.டி. நிறுவனங்களில் பல தங்கள் நிறுவனங்களுக்கான பணியாளர்களை கன்சல்ட்டன்சி மூலமாகவே பணியமர்த்துகிறதே தவிர, நேரடியாக பணியாட்களை தேர்வு செய்வதில்லை. அம்மாதிரி சூழலில் தாங்கள் பெறும் ஒவ்வொரு பணியாளருக்குமான சேவைக் கட்டணத்தை கன்சல்ட்டன்சிக்களிடமே பெரு நிறுவனங்களே கொடுத்துவிடுகின்றன.
பெரு நகரங்களில் இயங்கும் கன்சல்ட்டன்சி நடைமுறைகள்:
• பொதுவாக கன்சல்ட்டன்சி தாங்கள் பெற்றுத்தரும் சேவைக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்த பிறகு அல்லது நிறுவனத்தின் அப்பாய்ண்ட்மெண்ட் கடிதம் வந்த பிற்பாடு, பரவலாக ஒரு மாத ஊதியமாக பெற்றுக்கொள்கிறது. ஒருவேளை வேலை தேடுனர்கள் பணம் கொடுக்க முடியாத சூழலில் இருக்கும்போது, அசல் சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டு இரண்டு தவணைகளில் தங்கள் கட்டணத்தை வசூல் செய்துகொள்கின்றன.
• சில கன்சல்ட்டன்சிகள் தாங்கள் செய்யும் சேவைக்கு அரை மாத சம்பளம் மட்டுமே பெற்றுக்கொள்கிறார்கள். அதுவும் வேலை கிடைத்தப் பிறகே. இதிலும் வேலை தேடுனர்களால் உடனடியாக பணம் கொடுக்க முடியாத பட்சத்தில் மேற்கண்ட நிபந்தனையே இந்த கன்சல்ட்டன்சிகளும் பின் தொடர்கின்றன.
• சில கன்சல்ட்டன்சிகள் பதிவுக் கட்டணம் ரூ.100 முதல் 500 வரை பெற்றுக்கொண்ட பிறகு, ஒரு மாதத்திலோ அல்லது இரண்டு மாதத்திலோ பணி வாய்ப்பை பெற்றுக்கொடுக்கிறது. ஆனால், எந்தக் காரணத்தைக் கொண்டும் வேலை தேடுனர்களிடம் பணம் பெறுவதில்லை. நேரடியாக நிறுவனங்களிடமே பணம் பெற்றுக்கொள்கிறது.
• இதுதான் வேலைவாய்ப்பை பெற்றுத்தரும் உண்மையான கன்சல்ட்டன்சிகளின் நிலைப்பாடு.
பொதுவாக எல்லா கன்சல்ட்டன்சிகளுமே பதிவுக் கட்டணம் என்ற பெயரில் ஒரு சிறு தொகை வாங்கவே செய்கிறது (ரூ. 100 முதல் 500 வரை).
யாரிடம் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்?
• முதலிலேயே ஒரு மாத சம்பளம் (தோராயமாக ரூ.10,000 முதல் 25,000 வரை) பெறும் கன்சல்ட்டன்சிகளிடம் கொஞ்சம் உஷாராக இருப்பது நல்லது.
• முதலிலேயே அசல் நகலை கொடுத்தால்தான் வேலை பெற்றுத்தருவேன் என்று சொல்லும் கன்சல்ட்டன்சிகளை நம்பாமல் இருப்பதே புத்திசாலித்தனம்.
• வேலை கிடைத்தப் பிறகு இரண்டு மாதம் சம்பளம் கொடுத்தால்தான் பணியானை பெற்றுத்தருவேன் என்று கன்ச்சல்டன்சி நிறுவனங்களையும், புறக்கணிப்பது புத்திசாலித்தனமே.