முருகதாஸ்சை கண்டித்த நீதிமன்றம்

0
89

தர்பார் திரைப்படத்தின் விநியோகஸ்தர்களுக்கு எதிராகக் கொடுக்கப்பட்ட புகாரை திரும்பப் பெறுவதாக இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் தெரிவித்தார். இதற்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

லைக்கா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்த படம் தர்பார். கடந்த ஜனவரி 9-ஆம் தேதி வெளியான இந்தத் திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்தார். இந்த நிலையில் தர்பார் திரைப்படத்தால் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும், அதற்கு உரிய இழப்பீட்டை வழங்கவேண்டும் என்றும் விநியோகஸ்தர்கள் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இழப்பீடு கோரி தயாரிப்பு நிறுவனம், நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோரிடம் முறையிட விநியோகஸ்தர்கள் முற்பட்டும் அதில் பலன் கிடைக்கவில்லை.

இந்தப் பிரச்னை தொடர்ந்து நடைபெற்றுவந்த நிலையில் கடந்த பிப்ரவரி 3-ஆம் தேதி, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் வீடு மற்றும் அலுவலகம் அமைந்துள்ள இடங்களில் விநியோகஸ்தர்கள் சிலர் வந்ததாகவும், முருகதாஸுக்கு எதிராகக் கோஷங்கள் எழுப்பியதாகவும் கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து தனது வசிப்பிடம் மற்றும் அலுவலகம் அமைந்துள்ள இடங்களில் போலீஸ் பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முருகதாஸ் மனு தாக்கல் செய்திருந்தார். மேலும் தர்பார் படத்தில் நஷ்டம் ஏற்பட்டது தொடர்பாக தயாரிப்பு நிறுவனத்தை அணுகாமல், சில விநியோகஸ்தர்கள் தன்னை மிரட்டி வருவதாகவும் குற்றம் சாட்டி இருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ராஜமாணிக்கம் முன்பு நேற்றுபிப்ரவரி 17 மீண்டும் விசாரணைக்கு வந்தது. ஏ.ஆர்.முருகதாஸ் அளித்த புகாரின் அடிப்படையில் 15 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டது.

ஆனால் ஏ.ஆர்.முருகதாஸ் தரப்பு வழக்கறிஞர் காவல்துறையிடம் தாங்கள் கொடுத்த புகார் மீது மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து மிரட்டல்கள் எதுவும் வராது என விநியோகஸ்தர்கள் சங்கத்தில் இருந்து இயக்குநர்கள் சங்கத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதால், தாங்கள் புகாரைத் திரும்பப் பெறுவதாக அவர் கூறினார்.

இதனைக் கேட்ட நீதிபதி, விநியோகஸ்தர்கள் மிரட்டியதாக பாதுகாப்பு கேட்டு வழக்கு தொடர்வதும், பின்னர் சமாதானம் ஏற்பட்டுவிட்டது என்று காவல்துறையில் கொடுத்த புகாரை திரும்ப பெற்றுக்கொள்வதும், வழக்கை முடித்து வைக்க வேண்டும் என தெரிவிப்பதும் கண்டனத்துக்கு உரியது என்று தெரிவித்தார்.

மேலும் உங்கள் விருப்பப்படி சென்னை உயர் நீதிமன்றம் செயல்படவேண்டும் என நினைக்கிறீர்களா? எனவும் ஏ.ஆர்.முருகதாஸுக்கு கேள்வி எழுப்பி வழக்கை முடித்து வைத்தார்.

ஏ.ஆர்.முருகதாஸ் விநியோகஸ்தர்களுக்கு எதிராக அளித்த புகாரை திரும்பப்பெற்றுக்கொண்டதன் உண்மை பின்னணி குறித்து விசாரித்தோம். முருகதாஸ் புகார் அளித்ததைத் தொடர்ந்து அவரது திரைப்படங்களுக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்படலாம் என்று பேச்சு திரையுலகினர் மத்தியில் எழுந்தது.

அதையும் தாண்டி அவர் திரைப்படங்களை இயக்கினாலும், அவற்றை வினியோகிக்க யாரும் முன்வரக் கூடாது என்றும் வினியோகஸ்தர்கள் தரப்பில் பேசப்பட்டது. இந்த எதிர்ப்பு தெலுங்கு திரையுலகம் வரையில் விரியலாம் என்று ஏ.ஆர்.முருகதாஸுக்கு சிலர் எச்சரிக்கை விடுத்தனர். அதனைத் தொடர்ந்தே முருகதாஸ் புகாரை திரும்பப்பெற்றுக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here