ரஜினியை பாராட்டும் இயக்குனர் சேரன்

‘மிகச்சிறந்த மனிதநேயம் கொண்டவர் சூப்பர்ஸ்டார்’ என்று குறிப்பிட்டு இயக்குநர் சேரன் நடிகர் ரஜினிகாந்த் குறித்த நினைவலைகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

கொரோனா அச்சம் மற்றும் லாக் டவுன் காரணமாக தமிழ் சினிமா படப்பிடிப்புகள் முடங்கியுள்ளது.  இந்த ஓய்வு நேரத்தில் திரைத்துறையினரில் பலரும் சமூக வலைதளங்களில் மும்முரமாக இயங்கி வருகின்றனர். இயக்குநர் சேரன் தற்போது ட்விட்டர் தளத்தில் தொடர்ந்து கருத்துப் பதிவிட்டு வருகிறார். மக்கள் சந்தித்து வரும் சிக்கல்களைக் குறிப்பிட்டு கருத்து தெரிவித்து வந்த அவர், தனது வாழ்க்கையின் மறக்க முடியாத நினைவுகளையும் அவ்வப்போது பகிர்ந்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த்தின் நல்லுள்ளம் குறித்து அவர் தனது நினைவுகளை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். ரசிகர் ஒருவர், “அருணாச்சலம்(1997) படத்தின் 202வது நாள் வெற்றிவிழா மேடையில் இயக்குநர் சேரனை பொற்காலம் (1997) படம் கொடுத்ததற்காக மேடையில் அழைத்து தங்கச்சங்கிலி பரிசாக அணிவித்து அவரை கவுரவித்து பேசினார் சூப்பர் ஸ்டார் ரஜினி” என்று பதிவிட்டு அது தொடர்பான புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தார்.

அந்த நினைவுகளைப் பகிர்ந்த இயக்குநர் சேரன், “மறக்க முடியாத நெகிழ்வான தருணம். இன்றுவரை அதே ப்ரியம் வைத்து பேசும் மிகச்சிறந்த மனிதநேயம் கொண்டவர் சூப்பர்ஸ்டார். நல்லவற்றை தேடிப்பிடித்து பாராட்டுவதில் அவருக்கு நிகர் அவரே. C2H முதல் டிவிடி வெளியிட்ட போதும் முதலில் மனமாற பாராட்டியதும் அவரே. உழைப்பின் வலி உணர்ந்தவர். லவ்யூ சார்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும். “அவரோடு இணைந்து படம் எடுக்க முடியவில்லையே தவிர, நேற்றும் இன்றும் என்றும் அவருடனான நட்பும் மரியாதையும் அப்படியேதான் இருக்கிறது. சிங்கப்பூரில் அவர் சிகிச்சைக்காக இருந்த போது மீண்டும் நல்ல ஆரோக்கியத்துடன் வரவேண்டும் என என்னையறியாமல் என்னுள்ளம் வேண்டியது. காரணம் அந்த மனிதத்தன்மை” எனவும் அவர் தனது பதிவில் கூறியுள்ளார்.