இயக்குனர் ராஜமௌலி குடும்பத்தாருக்கு கொரானா தொற்று உறுதியானது

இந்தியாவில் கொரோனா பரவல் நகர்புறங்களில் இருந்து கிராமங்கள் வரை  நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. பொதுமக்களை கடந்து, அமைச்சர்கள்,அரசியல் பிரபலங்கள், எம்.எல்.ஏக்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்டோரும் தொடர்ச்சியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுவருகின்றனர்.
இந்தநிலையில், இன்று தெலுங்கு பட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியும் அவரது குடும்பத்தினரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து அவருடைய ட்விட்டர் பதிவில், ‘கடந்த சில தினங்களுக்கு முன்னர் எனக்கும் என்னுடைய குடும்பத்தினருக்கும் லேசாக காய்ச்சல் வந்தது. அந்த காய்ச்சல் தானாகவே குணமடைந்தாலும், நாங்கள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டோம். அந்த சோதனை முடிவில் எங்களுக்கு லேசான அளவில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்கள் ஆலோசனையின்படி, நாங்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து அவர், ‘எந்த அறிகுறியும் இல்லாமல் நாங்கள் நலமாக உள்ளோம். ஆனால், நாங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், வழிமுறைகளையும் பின்பற்றுகிறோம். நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்தெடுக்க காத்துக்கொண்டிருக்கிறோம். அப்போதுதான் ப்ளாஸ்மா செல்களை தானம் செய்ய முடியும்’என்று குறிப்பிட்டுள்ளார்

கொரானாவில் இருந்து மீண்டு வருவது மட்டுமல்ல அதன் பின்னர் கொரானாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ப்ளாஸ்மா செல்களை தானம் செய்ய போவதை பற்றி ராஜமெளலி குறிப்பிட்டிருப்பது சமூக வலைதளத்தில் மிகப் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.