சர்க்கார் படம் எப்படியிருக்கும்

சர்கார் பட புரொமோக்களால் சர்கார் படம் குறித்த புது விவாதங்கள் தற்போது எழுந்துள்ளன.

விஜய், ஏ.ஆர். முருகதாஸ்  காம்போவில் துப்பாக்கி, கத்தி என இரண்டு படங்கள் இதுவரை தீபாவளி வெளியீடாகக் களத்தில் குதித்து வசூலில் சக்கைபோடு போட்டுள்ளன.

இந்த நிலையில் இந்தக் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகியுள்ள சர்காரும் தற்போது அதே தீபாவளி வெளியீடாகக் களத்தில் குதித்துள்ளது.
பல பெரிய படங்கள்  போட்டியிலிருந்து விலகியுள்ளதால் இம்முறை தனிக்காட்டு ராஜாவாக வலம்வரவுள்ளது இந்த சர்கார்.

இந்தப் படத்தின் புரொமோக்கள் டிவி மற்றும் இணையங்களில் கலக்கிவருகின்றன.

இந்த நிலையில் அதில் வெளியாகியுள்ள ஒரு காட்சியில் கழுத்தில் கையை வைத்து நெட்டி முறிப்பது போல செய்கை காட்டுகிறார் விஜய்.
முதலில் துப்பாக்கி பட க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சியில் இதுபோலவே செய்திருந்தார் விஜய்.

அடுத்து வந்த கத்தி பட க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சியிலும் இதுபோலவே செய்கை காட்டி நடித்திருந்தார் விஜய்.

இந்த நிலையில் ட்ரேடு மார்க்காக மாறியுள்ள இந்த ஸ்டைலை தற்போது இதிலும் செய்திருப்பதால் இக்காட்சி சர்கார் படத்தின் க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சியாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விஷயம் போலவே இன்னொரு விஷயமும் பொதுவாக அமைந்துள்ளது. அதாவது துப்பாக்கியில் ‘கூகுள் கூகுள்’ எனத் தொடங்கும் ‘டெக்கி’யான பாடலை டூயட் பாடலாக வைத்திருந்தனர்.

அதன் பின்னர் வந்த கத்தியிலும் ‘செல்ஃபி புள்ள’ என டெக்கி வரிகளிலேயே டூயட் பாடல் அமைந்து இருந்தது.

சர்காரிலும் முழுக்க முழுக்க டெக்கி வரிகளால் ஆன ‘ஓஎம்ஜி பொண்ணு’ எனும் பாட்டுக்கு விஜய்யும் கீர்த்தி சுரேஷும் டூயட் ஆடுவதுபோல புரொமோக்களில் காட்டப்படுகின்றன.

பாடல்களைப் பொறுத்தவரை தனது முந்தைய படங்களின் வடிவமைப்பை முருகதாஸ் அப்படியே தொடர்வதாகவே இதன் வாயிலாக அறிய முடிகிறது.

சண்டைக் காட்சி, டூயட் பாடல்கள் போன்றவற்றுக்கே இப்படியான ட்ரேடு மார்க் பார்க்கும் முருகதாஸ் துப்பாக்கி, கத்தி பட இடைவேளைக் காட்சிகளில் விஜய் பேசுவதாக அமைக்கப்பட்டிருந்த ‘ஐ ஆம் வெயிட்டிங்’ எனும் பாப்புலர் வசனத்தை நிச்சயம் சர்கார் படத்திலும் வைத்திருப்பார் என எதிர்பார்க்க ஆரம்பித்துள்ளனர் பல ரசிகர்கள்.