2016 – 107 படங்களில் டாப் 10 வசூல் படங்கள்

2016 ம் ஆண்டில் இந்த 6 மாத காலத்தில் தமிழ்த் திரையுலகம் 107 திரைப்படங்களை ரீலீஸ் செய்து சாதனை புரிந்திருக்கிறது. ஆண்டு இறுதிக்குள்200 படங்கள் வந்து விட வாய்ப்பிருக்கிறது

ஆறு மாத காலத்தில் வெளியான 107 தமிழ்ப் படங்களில் தயாரிப்பாளர்கள் செய்த முதலீடு தோராயமாக 325 கோடிகள்.

இந்த முதலீட்டை தமிழ்நாடு திரையரங்குகளில் படங்களை ரீலிஸ் செய்வதன் மூலம் குறைந்த பட்சம் ஐம்பது சதவீத முதலீடு வசூல் மூலம் கிடைக்க வேண்டும்.

கேரளா, கர்னாடகா, வட இந்திய உரிமைகள், தொலைகாட்சி, வெளிநாட்டு (FMS) உரிமைகள் விற்பனை மூலம் பாக்கி ஐம்பது சதவீத முதலீடு கிடைக்க வேண்டும்.

முப்பது ஆண்டுகளுக்கு முன் மொத்த முதலீடும் தமிழ்நாட்டில் ரீலீஸ் செய்வதன் மூலம் லாபத்துடன் கிடைக்கும் சூழல் இருந்தது.

கடந்த 30 ஆண்டுகளாக தமிழ்ப் படங்களின் வியாபார எல்லை விரிவடைந்த பின்னரும் பட முதலீட்டை மீட்டெடுக்க மூச்சு திணற வேண்டிய சூழல் நீடிக்கும் நிலை மாறவில்லை.

படம் எடுத்து நஷ்டப்பட்ட எண்ணிக்கை அதிகம், ஆனால், வெற்றியடைந்தவர்கள் குறைவாகவே உள்ளார்கள். இந்த நிலை மாற இன்று வரை எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை என்பது கவலைக்குரிய விஷயம்.

ஆனாலும் சினிமா மோகத்தில் படத்தயாரிப்புக்கு புதியவர்கள் வந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

2016ல் ஜனவரி 1 முதல் ஜுன் 30 வரை வெளியான 107 படங்களில் பத்து சதவீத படங்களே திரையரங்கு – வினியோகஸ்தர்கள் – தயாரிப்பாளர்கள் என மூன்று பிரிவினருக்கும் லாபத்தைக் கொடுத்த படங்களாக உள்ளது. தயாரிப்பாளர்களுக்கு மட்டும் லாபம் கிடைத்த படங்களும் அதில் உண்டு.

குறைவான பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெற்றி பெற்று கோடிக்கணக்கில் வசூலான படமும் ( பிச்சைக்காரன்) உண்டு.

தமிழ் திரைப்படத் துறையில் சமச்சீராக அனைத்து தரப்பினருக்கும் லாபம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் இங்கு யாரும் நடப்பது இல்லை.

இந்த 6 மாத காலத்தில் அனைவருக்கும் லாபம் கிடைத்த படங்கள்:

1. தெறி
2. ரஜினி முருகன்
3. பிச்சைக்காரன்
4. அரண்மனை – 2
5. மிருதன்
6. காதலும் கடந்து போகும்
7. இது நம்ம ஆளு
8. முத்தின கத்தரிக்கா
9. வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்
10. இறுதிச் சுற்று

மேற்குறிப்பிட்டுள்ள 10 படங்களின் பட்ஜெட், வியாபாரம், தியேட்டர் வசூல் அடிப்படையில் பட்டியலிடப்பட்டுள்ளது.

இப்படங்களின் தயாரிப்பாளர்கள் வேறு படங்களினால் ஏற்பட்ட கடன் மேற்குறிப்பிட்ட படங்கள் ரீலீசின் போது பஞ்சாயத்து நடந்திருக்கும், அதனை கணக்கில் எடுத்து கொள்ளக் கூடாது.

107 படங்களில் 10 படங்கள்தான் லாபம் என்பது வேதனைப்பட வேண்டிய விஷயம். அடுத்த ஆறு மாத காலமாவது நன்றாக இருக்கட்டும்.