பூனைக்கு மணி கட்டிய – சுசி கணேஷன்

மீ டூ விவகாரத்தால் இயக்குநர் சுசி கணேசன், லீனா மணிமேகலை இடையேயான மோதல் வலுத்து வருகிறது. இருவரும் மாறி மாறித் தங்கள் தரப்பு விளக்கங்களைக் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் சுசி கணேசன் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் லீனா மணிமேகலைக்கு எதிராக அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், “என் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் எந்த ஓர் அடிப்படை ஆதாரமுமின்றி பொய்யான புகாரை லீனா மணிமேகலை பதிவிட்டுள்ளார்.

இதனால் நான் மிகப் பெரிய மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். சுய விளம்பரத்திற்காக லீனா மணிமேகலை இது போல ஒரு தகவலைப் பரப்பியுள்ளதால் இந்திய தண்டனைச் சட்டம் அவதூறு பிரிவின் கீழ் அவருக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும்” என்று மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

இவ்விவகராம் குறித்து நேற்று (அக்டோபர் 16) சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார் லீனா மணிமேகலை.

 
அப்போது, “சட்ட ரீதியாக இதை நிரூபித்து, சம்பந்தப்பட்டவர்களை ஜெயிலுக்கு அனுப்புவது என்பது எவ்வளவு கஷ்டமான விஷயம் என்பது எல்லோருக்கும் தெரியும். ஏனென்றால் ஆதாரங்கள் இருந்தே பாலியல் தொடர்பான வழக்குகளில் இங்கு எவ்வளவு பேருக்கு நீதி கிடைக்கிறது என்பது அறிந்த ஒன்று.
இப்படி இருந்தாலும் ஒரு பெண் தனக்கு நடந்த விஷயத்தை வெளியில் சொல்கிறாள் என்றால், தனக்கு நடந்தது இன்னொரு பெண்ணுக்கு நடக்கக் கூடாது என்பதால்தான்.

ஒரு பெண் தன்னுடைய கனவுகளை ஒரு ஆணின் துஷ்பிரயோகத்துக்காகப் பலிகொடுக்க வேண்டும் என ஏன் இந்தச் சமூகம் நினைக்கிறது என்பதைத்தான் இந்த மீடூ மூவ்மெண்ட் கேள்வியாக வைக்கிறது.

மலையாள நடிகை ஒருவருக்கு காரில் நடந்த துயர சம்பவத்தை படித்தபோது, எனக்கும் அந்த நிகழ்வு நடந்ததால் அதை ஃபேஸ்புக்கில் பகிர்ந்தேன்.

 அப்போது அந்த நபர் யார் என்று சொல்ல தைரியமில்லை. இப்போது MeToo மூலம் தைரியம் வந்திருக்கிறது.
சுசி கணேசன் மறுக்கிறார் என்றால், மறுக்கட்டும். மனசாட்சியுடன் பேசுங்கள். உன்னை நம்பி காரில் ஏறினேன். ஆனால், நீ அப்படி நடந்து கொண்டாய்.
 
நம்பிக்கையைச் சிதைத்துவிட்டாய். உங்கள் மறுப்பைப் படிக்கும்போது, ஆண் என்ற அதிகாரம்தான் வெளிப்படுகிறது.
அதைப் படிக்கும்போது, ‘இது எல்லாவற்றையும் செய்யக்கூடியவர்தான் நீங்கள்’ என்றுதான் எல்லாருக்கும் தோன்றுகிறது.

மலையாள சினிமாவில் ஒரு நடிகைக்கு பாதிப்பு என்றால் எல்லா நடிகர்களும் ஒன்று கூடுகிறார்கள், நீதி கிடைக்கும் வரை போராடுகிறார்கள். அப்படியொரு நிலை தமிழ் சினிமாவில் வந்தால் சுசி கணேசன் மாதிரியான ஆட்கள் இங்கு துள்ள முடியாது.

இங்கிருக்கும் இயக்குநர்கள் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம் எல்லாமே பாய்ஸ் கிளப்தான். இவர்களின் படைப்புகளில் தொடர்ந்து பெண்களை சிறுமைப்படுத்திக்கொண்டுதான் இருக்கின்றனர்.

சுசி கணேசனைவிட நான் நல்ல படைப்புகளை கொடுத்திருக்கிறேன். அவர் பெண்களின் உடலைக் காட்டி சம்பாதிக்கிறார்.
பொதுவாகத் தமிழ் சினிமாவில் இவர்களின் படைப்புகளில் பெண்களைச் சிறுமைப்படுத்திதான் காண்பிக்கிறார்கள்.

முதலில் உங்கள் படைப்புகளில் பெண்களை சமமாக நடத்திய பிறகு பெண்ணுக்கான நீதி குறித்துக் குரல் கொடுங்கள். வியாபாரத்திற்காகப் பெண்ணை ஒரு படத்தில் எப்படி வேண்டுமானாலும் சித்தரிப்பேன் என்று கொள்கை வைத்திருப்பவர்கள், எந்த விதத்திலும் பெண்ணுக்கான நீதியை பெற்றுத்தர மாட்டார்கள்” என்றார்.

மறுத்த சுசி கணேசன்

இந்த சந்திப்பிற்குப் பின் சுசி கணேசனும் செய்தியாளர்களை சந்தித்துத் தன் தரப்புக் கருத்துகளையும் முன் வைத்தார்

அதில், “லீனா மணிமேகலை விளம்பரத்திற்காக என் மீது பொய்யான புகார் அளித்துள்ளார். 2004ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி என்னுடைய ‘விரும்புகிறேன்’, ‘ஃபைவ் ஸ்டார்’ படங்களுக்கு தமிழக அரசு விருது அறிவித்தது.
இதன் பிறகு லீனா மணிமேகலை என்பவர் வெளிநாட்டுப் பத்திரிகைக்காக என்னிடம் பேட்டி கேட்டு வந்தார்.
நானும் பேட்டி கொடுத்தேன். ஆனால் விலையுயர்ந்த என்னுடைய காரில் வந்ததாகவும் நான் தவறாக நடந்துகொண்டதாகவும் சென்னையில் அரைமணி நேரத்திற்கும் மேலாக அவரை இறக்கிவிடாமல் காரில் சுற்றிக்கொண்டிருந்ததாகவும், என்னை அவர் கத்தியைக் காட்டி மிரட்டியதாகவும் சொல்லியிருக்கிறார்.

இன்று வரை என்னிடம் விலையுயர்ந்த கார் இல்லை. ஆடம்பரக் கார் வைத்துக்கொள்ளும் அளவுக்கு நான் வசதியானவனும் இல்லை. என்னுடைய உதவியாளர்தான் எனக்கு டிரைவர். எப்போதும் என்னுடனேயே இருப்பார்.

இந்தச் சம்பவம் அக்டோபர் மாதம் நடந்ததாகச் சொல்கிறார். இங்கே ஒரு விஷயம்… நவம்பர், டிசம்பர் இரண்டு மாதங்கள் கழித்து ஜனவரி மாதத்தில் என்னுடைய ‘வாக்கப்பட்ட பூமி’ புத்தகம் வெளியீட்டு விழா நடந்தது.

அந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியவரே லீனா மணிமேகலைதான். நான் அப்படியெல்லாம் பாலியல் அத்துமீறல் செய்திருந்தால், அவர் அந்த நிகழ்ச்சியை எப்படித் தொகுத்து வழங்க வந்திருப்பார்?

அவர் அப்படிக் கத்தியைக் காட்டி என்னை மிரட்டியிருந்தால் நான் அவரை எப்படி விழாவைத் தொகுத்து தரச்சொல்லிக் கேட்டிருப்பேன்?

அந்த விழாவில் எடுத்த புகைப்படங்கள்தான் ஆதாரம். அந்த ஆதாரங்களைக் கொண்டு லீனா மணிமேகலை மீது கோர்ட்டில் கேஸ் போடப்போகிறேன்.

கடந்த இரண்டு நாட்களாக, என்னைத் தெருவில் நிறுத்தித் தொங்கவிட்டிருக்கிறார் அவர். இதுவரை கட்டிக்காத்து வந்த, கொஞ்சம் கொஞ்சமாகச் சம்பாதித்து வைத்திருந்த பேரையும் புகழையும் மரியாதையையும் மொத்தமாகச் சின்னாபின்னப்படுத்திவிட்டார்.

அவர் மீது மான நஷ்ட ஈடு வழக்குப் போட்டு ஒரு ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப் போகிறேன். மீ டூ இயக்கத்தால் பாதிக்கப்பட்ட அப்பாவி ஆண்கள் போராட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது” என்றார்.

தொடர்ச்சியாகப் பல்வேறு பாலியல் புகார்கள் மீ டூ மூவ்மெண்ட் மூலம் சமூக வலைதளங்கள் வாயிலாக வெளியில் வந்துள்ளன.

ஆனால் நீதிமன்றத்தை நாடுவது மிகவும் குறைவாகவே நடைபெறுகிறது. பாலிவுட்டைச் சார்ந்தவர்கள் வழக்குகளைத் தொடுத்துவரும் நிலையில் தற்போது சுசி கணேசன் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.