பைரவா – 100 கோடி சாத்தியமா?

ஜனவரி 12 அன்று ரீலீஸ் ஆன “பைரவா ” திரையிட்ட நான்கு நாட்களில் 100 கோடி வசூலை தாண்டிய மாபெரும் வெற்றி படம் என்று தினசரிகளில் விளம்பரம் வெளியிடப்பட்டிருக்கிறது. தமிழ் சினிமாவில் படங்களின் வசூல் விபரங்கள் கேளிக்கை வரி என்ற ஒன்று இருந்தவரை பகிரங்கமாக வெளியிடப்பட்டது. கேளிக்கை வரி ரத்து செய்யப்பட்டவுடன் படங்களின் வசூல் உண்மை தன்மை ஆழ குழி தோண்டி புதைக்கப்பட்டது. படம் வெளியான மூன்றாவது நாள் படம் வெற்றி, என்ற போலியான பிம்பம் உருவாக்கி தயாரிப்பாளர்கள் தங்களை ஏமாற்றிக் கொள்ளும் நடைமுறை தொடர் கதையாகிவிட்டது.

விநியோகஸ்தர்களும், தியேட்டர் உரிமையாளர்களும் “பைரவா ” படத்திற்கு கொடுத்த முதலீடாவது சேதாரம் இல்லாமல் வசூல் ஆகுமா என்ற பதட்டத்தில் பரிதவித்து வருகிறார்கள். புதுப் பணக்காரன் அர்த்த ராத்திரியில் வெயிலுக்கு குடைபிடித்த கதையாக TN உரிமை வாங்கிய கீரீன் புரொடக்க்ஷன் சரவணன் விளம்பரம் கொடுப்பதை பாரம்பர்யம் மிக்க விஜயா புரொடக்க்ஷன் நிறுவனம் எப்படி அனுமதித்தது என்கின்றனர், திரைத்துறையினர். “பைரவா ” படம் தயாரிப்பு செலவுகள் அனைத்தும் வெள்ளையில் கணக்கு காட்டப்பட்டு எடுக்கப்பட்ட படம். வியாபாரமும் அவ்வாறே செய்யப்பட்டது. வசூலையும் அது போன்று ஏரியாவாரியாக பட்டியலிடாமல் மொட்டையாக நான்கு நாட்களில்100 கோடி வசூலை தாண்டியது என விளம்பரப்படுத்த வேண்டிய அவசியம் ஏன்? தமிழ் நாட்டில் முதல் மூன்று பெரிய விநியோக ஏரியாவான கோவை, செங்கல்பட்டு, மதுரை பகுதி வசூல்4 நாட்களில் 15 கோடியை தாண்டாத போது 100 கோடி எப்படி சாத்தியம் என்கின்றனர் திரைப்பட விநியோகஸ்தர்கள். மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்க உரிமை 6 கோடிக்கு வாங்கியவர்களுக்கு 3 கோடி நஷ்டம் என கூறியுள்ளார்கள். கேரள உரிமை 6.75 கோடிக்கு விற்க்கப்பட்டது முதல் நாள் குறைவான தியேட்டர்களில் ரீலீஸ் செய்யப்ட்ட பைரவர மூன்றாவது நாள் தான் 200க்கும் மேற்பட்ட தியேட்டர்களாக அதிகரிக்கப்பட்டது. கர்னாடகா, ஆந்திரா ரீலீஸ் இல்லை. அப்புறம் எப்படி 100 கோடி என கேள்வி எழுப்புகின்றனர் திரைப்பட விமர்சகர்கள். தமிழ்நாட்டில் நான்கு நாட்களில் ரசிகர் மன்ற சிறப்பு காட்சி மூலம் கிடைத்த கூடுதல் கட்டண வசூல் உள்பட வசூலான மொத்த தொகை 42 கோடி மட்டுமே. பிரபல பாரம்பர்யம் மிக்க படத்தயாரிப்பாளர் அமரர் நாகி ரெட்டி கட்டி காப்பாற்றிய நாணயம், நேர்மை”பைரவர”100 ” கோடி வசூலை தாண்டியது விளம்பரத்தை வெளியிட்டதன் ம் மூலம், குழி தோண்டி புதைத்து விட்டார்கள் என்றால் மிகையல்ல.