யதார்த்தத்தை முன்னிறுத்தும் மேற்கு தொடர்ச்சி மலை

திரைப்படத்துக்குள் யதார்த்த களங்களை கொண்டுவரும் அளவுக்கு யதார்த்த மனிதர்களைக் கொண்டுவருவது அரிதாகவே நடைபெறுகிறது. விஜய்சேதுபதி தயாரித்துள்ள மேற்குதொடர்ச்சி மலை அதை நிகழ்த்திக் காட்டியுள்ளது.

லெனின் பாரதி இயக்கியுள்ள மேற்கு தொடர்ச்சி மலை திரைப்படம் கேரள எஸ்டேட்டுகளில் குறைந்த ஊதியத்திற்கு வேலை செய்யும் தமிழர்களின் வலியைப் பேசுகிறது. இந்தப் படத்தின் இரண்டு நிமிட காட்சியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

யதார்த்த திரைப்படங்கள் இயக்கும் இயக்குநர்கள் கதை நடைபெறும் களங்களுக்கு நேரடியாகச் சென்று தத்ரூபமாக காட்சிப்படுத்துகின்றனர். ஆனால் அந்த மண்ணிலிருந்து உருவாகும் கதாபாத்திரங்களாக பிரபலமான நடிகர்கள் நடிப்பார்கள். இதற்கு மாறாக அந்தப் பகுதியின் மக்களையே கதாபாத்திரங்களாக மாற்றும் போது படம் இன்னும் மனதுக்கு நெருக்கமாக மாறுகிறது. அதை இயக்குநர் லெனின் பாரதி செய்து காட்டியுள்ளார்.

மலை உச்சியில் பளு தூக்க கழுதைகளைப் பயன்படுத்தும் மூக்கையாவை அவரது ஊரைச் சேர்ந்தவர்கள் கிண்டல் அடிக்கின்றனர். டீக்கடை முன் நடைபெறும் விவாதத்தில் “நான் அல்லது கழுதை இரண்டில் ஒரு உயிர் போகும் வரை கழுதையோடு தான் வருவேன்” என மூக்கையா கூறுகிறார்.

மலை உச்சியில் உள்ள டீக்கடை, அங்கு வரும் மனிதர்கள் என அந்த இடத்தில் வழக்கமாக நடைபெறும் சம்பவத்தை கேமரா மூலம் அப்படியே திரைக்கு கடத்தியுள்ளார் லெனின் பாரதி.

படத்தின் புரொமோஷனிலும் மலைவாழ் மக்களையே பயன்படுத்தியுள்ளனர். வனகாளி, கிறுக்கு பாட்டி, பொன்னம்மா என அதன் கதாபாத்திரங்களை போஸ்டர்கள் வழியாக அறிமுகம் செய்து வருகின்றனர்.

தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய இளையராஜா இசையமைத்துள்ளார். ஆகஸ்ட் 24ஆம் தேதி படம் வெளியாகிறது.