தமிழ் மன்னனாக சிவகார்த்திகேயன்

சீம ராஜா’ ட்ரெய்லரைப் பார்த்து ‘பாகுபலி’ மாதிரி இருக்குனு சொன்னாங்க என்று தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன்.

சிவகார்த்திகேயன் – சமந்தா ஜோடியாக நடித்துள்ள படம் ‘சீம ராஜா’. ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ மற்றும் ‘ரஜினி முருகன்’ படங்களை இயக்கிய பொன்ராம், இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

24 ஏஎம் ஸ்டுடியோ சார்பில் ஆர்.டி.ராஜா தயாரித்துள்ள இந்தப் படத்தில், சூரி, சிம்ரன், நெப்போலியன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ளார்.

சீம ராஜா’ ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய சிவகார்த்திகேயன், “இந்த ட்ரெய்லரின் கடைசி மூன்று ஷாட் பார்த்துவிட்டு, ‘பாகுபலி’ மாதிரி இருக்கு என சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிகின்றன.

படத்தில் நான் தமிழ் மன்னராக நடித்திருக்கிறேன். அது எனக்குக் கிடைத்த பெருமை. ‘ரஜினி முருகன்’ படத்தின்போதே இந்த ஐடியா பற்றி நானும் பொன்ராமும் பேசினோம்.

இந்தப் படத்தில் இடம்பெறும் ஆக்‌ஷன் காட்சிகளைக் குழந்தைகளும் பார்க்கும் வண்ணம் வன்முறை இல்லாமல் வடிவமைத்திருக்கிறோம். இதிலும் காமெடி நிறையவே இருக்கிறது.

நான் யாரையும் போட்டியாக நினைப்பதில்லை. யாரைப் பார்த்தும் பயப்படுவதில்லை. யாரைப் பார்த்தும் பொறாமை கிடையாது. என் அடுத்த கட்டத்தை நோக்கியே பயணிக்கிறேன்” என்றார்.