வரலட்சுமியின் – எச்சரிக்கை

வரலட்சுமி நடித்துள்ள ‘எச்சரிக்கை – இது மனிதர்கள் நடமாடும் இடம்’ படத்தின் நான்கு நிமிடக் காட்சி வெளியாகியுள்ளது.

குறும்படங்கள் மூலம் கவனம் ஈர்த்த சர்ஜுன் இயக்குநராக அறிமுகமாகும் படம் எச்சரிக்கை. இளம்பெண் கடத்தலை மையமாகக்கொண்டு படம் உருவாகியுள்ளதை ஏற்கெனவே வெளியாகியிருந்த ட்ரெய்லர் மூலம் யூகிக்க முடிந்தது.

   தற்போது படத்தின் முக்கிய காட்சிகளில் ஒன்றான ஆள் கடத்தல் காட்சியைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

படத்தின் புரொமோஷனுக்காக டீசர், ட்ரெய்லர் ஆகியவற்றை வெளியிடுவதைப் போல ‘ஸ்னீக் பீக் வீடியோ’ எனப்படும் சில நிமிடக் காட்சிகளை முழுவதுமாக வெளியிடுவது தற்போது ட்ரெண்டாகி வருகிறது.

   இதன் மூலம் காட்சிகளை இயக்குநர் எவ்வாறு கையாள்கிறார் என்பதைப் பார்வையாளர்கள் முன்கூட்டியே அறிய முடிகிறது.

தற்போது வெளியாகியுள்ள இந்தக் காட்சியில் கிஷோர் வரலட்சுமியை கார் பார்கிங்கில் வைத்து திருட்டு கார் ஒன்றின் மூலம் கடத்துகிறார். அங்கிருந்து பாழடைந்த சர்ச் ஒன்றுக்குக் கொண்டு செல்லப்படுகிறார்.

   இவரைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல்துறை அதிகாரியான சத்யராஜ் ஈடுபடுகிறார். முறையாக வழக்கு பதிவு செய்யாமல் தேடல் தொடர்கிறது.

   வரலட்சுமியை சத்யராஜ் உள்ளிட்ட குழுவினர் மீட்டார்களா என்ற எதிர்பார்ப்பு உருவாக, காட்சி விறுவிறுப்பாக நகர்கிறது.

க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு சுதர்ஷன் ஸ்ரீனிவாஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சுந்தரமூர்த்தி கே.எஸ் இசையமைக்க, கார்த்திக் ஜோகேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார்.

   கிளாப் போர்டு நிறுவனம் படத்தை வாங்கியுள்ள நிலையில் ஆகஸ்ட் 24ஆம் தேதி வெளியிடுவதாக அறிவித்துள்ளது.