தமிழகத்தில் 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள்!

ஒன்றல்ல இரண்டல்ல 50 ஆயிரத்திலிருந்து 1 லட்சம் வேலை காலியிடங்கள் சரியான ஆட்கள் இல்லாததால் திண்டாடிப் போயிருக்கின்றன சென்னையில் இயங்கிவரும் பெரும் நிறுவனங்கள்.
இன்று பெரு நிறுவனங்களுக்கு யோசனை சொல்வதிலோ, உற்பத்தியை பெருக்குவதிலோ பெரும் சவால்கள் இல்லவே இல்லை. ஆனால், அந்த உற்பத்திப் பொருளை எப்படி சந்தைப்படுத்துவது? அதை எப்படி மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பது என்பதில் தவியாய் தவித்துக்கொண்டிருக்கின்றன பெரு நிறுவனங்கள்.
சந்தைப் படுத்துதலில் கை தேர்ந்தவரா நீங்கள்? 50 ஆயிரம் முதல் 1 லட்சம் ரூபாய் சம்பளம் வரை காலியிடங்களுடன் காத்திருக்கிறது தமிழகத்தின் பல்வேறு நிறுவனங்கள்.
மார்க்கெட்டிங் துறை வேலைவாய்ப்புகள்!
ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியைத் தீர்மானிப்பது இரண்டு விஷயங்கள். ஒன்று அந்த நிறுவனத்தின் திட்டக்குழு. இரண்டாவது அந்த நிறுவனத்தின் திறன் வாய்ந்த மார்க்கெட்டிங் குழு. இந்த இரண்டு குழு மட்டும் ஒரு நிறுவனத்தில் மிக உறுதியுடன் இருந்துவிட்டால் போதும் அந்த நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கில் வர்த்தகம் செய்துவிடும்.
ரிலையன்ஸ் நிறுவனமும், மைக்ரோசாஃப்ட் நிறுவனமும், ஃபேஸ்புக் நிறுவனங்களும் இன்று உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இருப்பதற்கு மூலக்காரணம் சிறந்த சந்தைப்படுத்தலும், சிறந்த மார்க்கெட்டிங் பணியாளர்கள் அமைந்ததாலும்தான்.
ஒரு நிறுவனத்தின் முதுகெழும்பே அந்த நிறுவனத்தின் வர்த்தக குழுதான். ஒரு நிறுவனத்தின் மற்ற பிரிவைச் சார்ந்த ஊழியர்களுக்கும் மார்க்கெட்டிங் குழுவைச் சார்ந்த ஊழியர்களுக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் ஒன்று இருக்கிறது. அது என்ன தெரியுமா? ஊதியம்தான்.

ஒரு நிறுவனத்தின் மார்க்கெட்டிங் ஊழியரைத் தவிர்த்து, மற்ற ஊழியர்கள் அனைவரின் சம்பளத்தையும் தீர்மானிப்பது நிறுவனத்தின் தலைமை நிர்வாகம் மட்டுமே. ஆனால், தன்னுடைய ஒவ்வொரு மாத ஊதியத்தையும் தீர்மானிப்பது சம்பந்தப்பட்ட மார்க்கெட்டிங் பிரிவைச் சேர்ந்த ஊழியர்கள் மட்டுமே.
வாழ்க்கையில் பெரும் முதலாளியாக வேண்டுமா? வாழ்க்கையில் மிகப்பெரும் கோடீஸ்வரராக வேண்டுமா? அப்படியானால் இன்று உங்கள் கண் முன்னால் கோடீஸ்வரராக நின்றுகொண்டிருக்கும் மனிதர்களின் வாழ்க்கையை படியுங்கள். எல்லோருக்கும் சொல்லிவைத்தாற்போல் ஒரு ஒற்றுமை மட்டும் இருக்கும். ஆம் எல்லோருமே மார்க்கெட்டிங் பிரிவில் கொடிகட்டி பறந்தவர்களாக இருப்பார்கள். மார்க்கெட்டிங் பிரிவில் எவர் ஒருவர் இருந்தாரோ அவரால்தான் சந்தையின் போக்கையும், வாடிக்கையாளர்களின் மனவோட்டத்தையும் கணிக்க முடியும். இந்த கணிப்பே உற்பத்திப் பொருளை பெருக்குவதற்கும், சந்தைப்படுத்துவதற்கும் அடித்தளமிடும்.
ஊறுகாய் விற்றே மிகப்பெரும் கோடீஸ்வரரான லக்குபாய் பதக் ஆரம்பித்து கே.எஃப்.சி. நிறுவனத்தின் நிறுவனர் வரை அனைவருமே மார்க்கெட்டிங் துறையில் சாதித்தவர்களே.
மார்க்கெட்டிங் துறையில் சாதிக்க அடிப்படை தகுதி என்ன?
* தேனீ மாதிரி சுறுசுறுப்பாய் இருக்க வேண்டும்.
* எந்தச் சூழ்நிலையையும் கையாளத் தெரிந்த மனோ நிலை கொண்டிருக்க வேண்டும்.
* நிறுவனம் வரையறுத்து வைத்திருக்கும் எல்லையைக் கடந்து பயணிப்பதே முதல் குறிக்கோளாக கொண்டிருக்க வேண்டும்.
* இங்கு எதுவும் சாத்தியம். சாத்தியப்படுத்த முடியவில்லையென்றால், தான் இன்னும் தன்னை மெருகேற்றுக் கொள்வதற்கான நடவடிக்கையில் முழுமையாக ஈடுபடுவதற்கான மனப்பான்மை வேண்டும்.
* விற்க முடியாத பொருள் என்று இங்கு எதுவும் இல்லை என்பதை தாரக மந்திரமாக கொள்ள வேண்டும்.

மார்க்கெட்டிங் துறையில் சாதித்தவர்கள் மேற்கொண்ட சூட்சுமங்கள் என்ன?

* சந்தையை முழுமையாக ஆய்வு செய்தார்கள்.
* சந்தையின் தேவையையும், வாடிக்கையாளர்களின் மனோ நிலையையும் தொடர்ச்சியாக ஒப்பிட்டுப் பார்த்தார்கள்.
* தேவையை தெரிந்துகொண்டு அதற்குத் தகுந்தாற்போல் தனது உற்பத்தி பொருட்களை மாற்றியமைத்தார்கள்.
* தேவையானவர்களிடமும், வாங்கும் திறன் கொண்டவர்களிடமும் மட்டுமே தன் பொருட்களை மிக சாமர்த்தியமாக கொண்டு சென்றார்கள்.
* தன்னுடைய உற்பத்தியை வாங்க விரும்புபவர்களுக்கும் சரி, வாங்காத நபர்களிடமும் தங்களுடைய உற்பத்திப் பொருட்களைப் பற்றி சொன்னபோது ஒருபோதும் சோர்ந்துபோனதே கிடையாது.
* தங்களுடைய உற்பத்திப் பொருட்களை வாங்குவதே தங்களின் கெளரவக் குறியீடு என்று ஒவ்வொரு வாடிக்கையாளரையும் சிந்திக்க வைக்க இவர்கள் ஒருபோதும் தவறியதேயில்லை.
இவைகள்தான் மார்க்கெட்டிங் துறையில் சாதிப்பதற்கான அடிப்படை காரணிகள் ஆகும்.
வேலை இல்லை என்று யார் சொன்னது? உழைக்கும் எண்ணமும், சம்பாதிக்கும் குறிக்கோளும், வாழ்வில் பெரும் கோடீஸ்வரனாக வேண்டும், 100 பேருக்காவது வேலைவாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று விரும்பும் நபராக நீங்கள் இருந்தால், உங்களுக்கான வேலை எல்லா இடங்களிலும் காத்திருக்கிறது.
பொறியியல் படிப்பு படித்தால் பொறியியல் பணிக்குத்தான் செல்ல வேண்டும் என்றும், வணிகவியல் படித்தால் கணக்கீட்டுப் பிரிவில்தான் பணியில் சேர வேண்டும் யார் நிபந்தனை விதித்தது. நமக்கு கண் முன் இருக்கும் ஒரே சவால், வேலைக்கு செல்ல வேண்டும். கை நிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற ஒற்றைக் குறிக்கோள்தான். மார்க்கெட்டிங் துறையில் சாதிப்பதற்கு உங்கள் பொறியியல் மூளையை பயன்படுத்துங்கள். உங்களது வணிகவியல் மூளையைப் பயன்படுத்தி வாங்கும் திறனை வாடிக்கையாளர்களிடம் எப்படி அதிகரிக்கலாம் என்று மாற்று கோணத்தில் சிந்தியுங்கள். படிப்புக்கும் அறிவுக்கும்தான் சம்பந்தம் இருக்கிறதே தவிர, படிப்புக்கும் வேலைக்கும் ஒருபோதும் சம்பந்தமிருந்ததேயில்லை.
இன்று பெரு நகரத்திலும் சரி, சிறு நகரங்களிலும் சரி மார்க்கெட்டிங் துறைக்கு கொடுக்கப்படும் ஊதியம்போன்று வேறு எந்தத் துறைக்கும் ஊதியம் வழங்கப்படுவதேயில்லை.
கிரிக்கெட் விளையாடும்போதும், கால்பந்து விளையாடும்போதும் இலக்கை தீர்மானித்துதான் விளையாட ஆரம்பிப்போம். அதேபோலத்தான் மார்க்கெட்டிங் துறையும் இலக்கை நிர்ணயித்து விளையாட வேண்டும். மார்க்கெட்டிங் துறை என்பது ஒரு சுவராஸ்யமான விளையாட்டு. இந்த விளையாட்டை ரசித்து விளையாடினால், ஓப்பனிங்க் பேட்ஸ்மேனாகவும், செண்டர் மேனாகவும் இருப்பீர்கள், வெற்றி உங்களைத் தேடி ஓடோடி வரும். கடமைக்காக விளையாடினால், விளையாட்டின் ‘சப்ஸ்டிட்யூட்’டாக மட்டுமே இருப்பீர்கள். வெற்றி என்பது எப்போதும் ஒரு சவாலாகவும், விளையாட்டு என்பது பெரும் கடினமாகவும் மட்டுமே இருக்கும்.
உங்கள் திறனை நம்பினால் மார்க்கெட்டிங் துறை என்பது வரம். ஊதியத்தை மட்டும் நம்பினால் மார்க்கெட்டிங் துறை என்பது பெரும் வலி. வலியாக இருக்கப் போகிறதா, வரமாக மாறப்போகிறதா இரண்டும் உங்களின் மனப்பான்மை சார்ந்ததே.
‘வெய்யிலில் அலைய வேண்டும்’, ‘ஒருவரும் நம்மை மதிக்க மாட்டார்கள்’, ’நாய் பொழைப்பு’ என்றே மார்க்கெட்டிங்க் துறை மீதான விமர்சனங்கள் வைக்கப்படுகிறது. இந்த வெற்று விமர்சனங்களையெல்லாம் வீசியது, விளையாட்டை கடமைக்காக விளையாடியவர்கள் என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். விளையாட்டை ரசித்து விளையாடிய மார்க்கெட்டிங் ஜாம்பவான்கள் என்றென்றைக்கும் மார்க்கெட்டிங் துறையை விட்டு விலகிச் சென்றதே இல்லை. இதுதான் மார்க்கெட்டிங் துறையில் மறைந்திருக்கும் ரகசியம்.
சென்னை போன்ற பெரு நகரங்களில் எல்லா நிறுவனங்களிலும் மார்க்கெட்டிங் துறையில் வேலைவாய்ப்பு கொட்டிக் கிடக்கின்றன. தேடினால் கிடைக்கும்… விட்டு விடாதீர்கள்.