நயன்தாரா – விக்னேஷ் சிவன் இடையே மோதல் ஏற்பட்டு அவர்கள் பிரிந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது, நயன்தாரா தனியாக வந்ததால் இந்தத் தகவலை வெகு விரைவாகப் பரவச் செய்திருப்பதாக இதுகுறித்து விசாரித்தபோது நயன்தாரா – விக்னேஷ்சிவஆகியோருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர்.எத்தனையோ விருது வழங்கும் நிகழ்ச்சிகள் வருடந்தோறும் நடைபெற்றாலும், அதில் விருது பெரும் அளவுக்கு ஒவ்வொரு வருடமும் நயன்தாரா திரைப்படங்களில் நடித்துவந்தாலும், அவர் எல்லா நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வதில்லை.

 நயன்தாரா கலந்துகொள்ளாத நிகழ்ச்சிகளில் பெரும்பாலும், அவருக்கு விருதுகள் வழங்கப்படுவதில்லை. இதற்கு ஒரு ஃப்ளாஷ்பேக்கை விவரிக்கின்றனர் நயன்தாராவுக்கு நெருக்கமானவர்கள்.

திரைத் துறையிலிருந்து விலகிய நயன்தாராவை மீண்டும் தமிழக மக்கள் முழுதாகப் பார்த்தது ராஜா ராணி திரைப்படத்தில்தான். சிறப்பான நடிப்பால் தன்னை மெருகேற்றிக் காட்டிய நயன்தாராவுக்குப் பல விருதுகள் வழங்கப்பட்டன. அப்போது, ஒரு பிரபல தொலைக்காட்சி சேனலிலிருந்து நயன்தாராவை விருது வழங்கும்நிகழ்ச்சிக்கு அழைத்தனர்.
அப்போது அஜித்துடன், ஆரம்பம் திரைப்பட ஷூட்டிங்கில் இருந்ததால் வர முடியவில்லை என்பதைத் தெரிவித்திருக்கிறார் நயன்தாரா. அதன்பிறகு, அந்த சேனலிடமிருந்து எந்தப் பதிலும் வராததால் அப்படியே கடந்துவிட்டார் நயன்தாரா.
திடீரென ஒருநாள் நயன்தாரா வென்றிருப்பதாக அந்த சேனல் கூறிய விருதை வேறொரு நடிகைக்குக் கொடுத்து, அந்த நடிகையை மேடையேற்றியிருந்ததை அறிந்த நயன்தாரா மிகவும் அப்செட். இதையறிந்த அஜித், அவர் ஏன் விருது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை என்பதை நயன்தாராவிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
அப்போது ‘உண்மையாகவே நமது திறமைக்கான அங்கீகாரமாக வழங்கப்படும் விருதென்றால் அது நம்மைத் தேடி வர வேண்டும்’ எனக் கூறியிருக்கிறார். அப்போதிலிருந்து தனியார் நிறுவனங்கள் நடத்தும் விருது நிகழ்ச்சிகளில் நயன்தாரா கலந்துகொள்வதில்லை. ஆனால், தெலுங்கு சினிமாவில் கொடுக்கப்படும் பாரம்பரிய விருது நிகழ்ச்சியான நந்தி அவார்ட்ஸ் மற்றும் தமிழக அரசு கொடுக்கும் விருது நிகழ்ச்சிகளில் தவறாமல் நயன்தாரா கலந்துகொள்வார். அரசு வழங்கும் கௌரவத்தைத் தனது அங்கீகாரமாக நினைக்கத் தவறுவதே இல்லை என்கின்றனர்.
ஆனால், ஏன் தற்போது தொலைக்காட்சி சேனல் நடத்திய நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் என்று கேட்கும்போது, நயன்தாராவின் தற்போதைய மனநிலையை விவரிக்கின்றனர்.

வருடம் தொடங்கி முதன்முறையாக வழங்கப்படும் விருது நிகழ்ச்சி என்பதால் இதில் கலந்துகொள்ளாமல் தவிர்ப்பதை சென்டிமென்ட்டாக விரும்பவில்லை நயன்தாரா. விக்னேஷ் சிவனுடன் வெளிநாடு பயணத்தில் இருந்தவர், ஜனவரி இரண்டாம் வார இறுதியில் நாகர்கோவிலில் நடைபெறும் மூக்குத்தி அம்மன் ஷூட்டிங்கில் கலந்துகொள்ள வேண்டும் என்பதால் விக்னேஷ் சிவனை விட்டுவிட்டு கிளம்பி வந்திருக்கிறார்.

கிறிஸ்துமஸ் பண்டிகையிலிருந்து ஆங்கிலப் புத்தாண்டு பண்டிகை முடியும் வரையிலும் சிறப்பான நாட்களை செலவிட்டு வந்த மகிழ்ச்சியில் தான் மேடை ஏறியதும், எப்போதும் இல்லாத வகையில் விக்னேஷ் சிவனைப் பற்றி வெளிப்படையாகவே பேசிவிட்டாராம் நயன்தாரா. எந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளாத நயன்தாரா இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டதையும், நயன்தாரா கலந்து கொண்டதாலேயே அவருக்கு விருது வழங்கப்பட்டதாகவும் நெட்டிசன்கள் பலர் நயன்தாராவை விமர்சிக்கத் தொடங்கினர்.
இப்படியெல்லாம் நடைபெறும் என்று தெரிந்தே சொன்னாரோ என்னவோ, விழா மேடையில் டிஜிட்டல் தளங்களில் அதிக நெகட்டிவிட்டி பரவியிருக்கிறது. ஆனால், நமக்குப் பிடித்த வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழும்போது இந்த உலகமே அழகானதாக மாறிவிடும்” என்று பேசினார் நயன்தாரா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here