ரஜினிக்கு அரசியல் புரியவில்லை-அரசியல் தலைவர்கள்

0
260

அரசியல்வாதிகள் சுயநலத்துக்காகப் போராட்டங்களைத் தூண்டிவிடுகிறார்கள் என்ற ரஜினியின் கருத்துக்குத் தலைவர்கள் பதிலளித்துள்ளனர்.

குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) இஸ்லாமியர்களுக்கு எதிராக இருப்பதாகக் கூறி, நாடு முழுவதும் இரண்டு மாதங்களுக்கு மேலாகப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், சிஏஏ, என்பிஆர் ஆகியவற்றை ஆதரிப்பதாகத் தெரிவித்தார்.

சில அரசியல் கட்சிகள் தங்களது சுயநலத்துக்காக இஸ்லாமியர்களைத் தூண்டிவிடுவதாகக் குற்றம்சாட்டினார். போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களையும் எதிர்காலம் போய்விடும் என எச்சரித்தார்.

பாஜகவுக்கு ஆதரவாகத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்து வரும் ரஜினிகாந்த், தற்போது சிஏஏவுக்கு ஆதரவு தெரிவித்தது விவாதத்தை உண்டாக்கியது. இதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

சிஏஏவுக்கு எதிராக நந்தனம் கல்லூரி மாணவர்களிடம் சிஏஏவுக்கு எதிராக கையெழுத்து பெற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதுதொடர்பான புகைப்படங்களைத் தனது ட்விட்டரில் பதிவிட்டு, “சிஏஏவின் ஆபத்தை உணர்ந்து மாணவர்கள் தாங்களாகவே முன்வந்து கையெழுத்திட்டது மகிழ்வளிக்கிறது. மாணவர்களை அரசியல் கட்சிகள் தூண்டி விடுவதாக எழும் ஆதிக்கத்தின் குரல்கள் புதிதல்ல. இந்தி எதிர்ப்பின்போது எழுந்தவையே.

அப்போதைப் போலவே தற்போதைய அறப் போராட்டமும் வெல்லும்” என்று ரஜினிகாந்தை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கையில், “ரஜினிகாந்தின் கருத்து மூலம் பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. ரஜினிகாந்த் யார் என்பதை அடையாளம் காட்டுவதற்கு இக்கருத்து ஒன்றே போதும்.

ஆன்மிக அரசியல் என்ற முகமூடி இன்றைக்குக் கிழித்தெறியப்பட்டிருக்கிறது. மதங்களைப் பிளவுபடுத்துவதுதான் ரஜினிகாந்தின் ஆன்மிக அரசியலா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், “தமிழக அரசியலில் வகுப்புவாத பாஜகவுக்குப் பல்லக்குத் தூக்குவதற்கு ரஜினிகாந்த் தயாராகிவிட்டார். இதன்மூலம் தமிழக மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் எதிர்கொள்ள வேண்டிய நிலை ரஜினிகாந்துக்கு ஏற்படப் போகிறது. இதுவரை ரஜினிகாந்தை ஒரு நடிகராகப் பார்த்த தமிழக மக்கள், இனி பாஜகவின் ஊதுகுழலாக அவரை பார்க்க வேண்டிய நிலை இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது” என்றும் தனது அறிக்கையில் ரஜினியைக் கடுமையாக விமர்சித்துள்ளார் கே.எஸ்.அழகிரி.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், “குடியுரிமை வழங்குவதில் மதத்தைப் புகுத்துவது எந்த நாட்டிலும் நடந்ததில்லை. மதம், சாதியின் அடிப்படையில் யாரிடமும் பாகுபாடு காட்டக் கூடாது என இந்திய அரசியலமைப்புச் சொல்கிறது.

தற்போது கொண்டுவரப்பட்டுள்ள சிஏஏ, அரசியல் சட்டத்துக்கே விரோதமானது. ரஜினிகாந்த் ஏற்கனவே பாஜகவின் கைப்பாவையாக மாறியிருக்கிறார். அவர் பாஜகவை வேண்டுமானால் ஆதரித்துவிட்டுச் செல்லட்டும். அதற்காக உண்மையைத் திரித்துப் பேசுவது என்பது நேர்மையான செயல் அல்ல” என்று குறிப்பிட்டார்.

“தமிழகத்தில் சங் பரிவார் அமைப்புகள் காலூன்ற முடியாத நிலை இருக்கிறது. ஆனாலும், அவர்களோடு தன்னையும் ரஜினிகாந்த் அடையாளப்படுத்திக் கொள்கிறார் என்னும்போது, அவர் ஏனோதானோவென்று பேசுவதாகத் தெரியவில்லை. திட்டமிட்டுப் பேசுகிறார் என்றுதான் தோன்றுகிறது. தன்னை காவி நிறத்தோடு இணைத்துக்கொள்கிறார்” என்று விசிக தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டினார்.

மமக தலைவர் ஜவாஹிருல்லா கூறுகையில், “ரஜினி சொல்வது முற்றிலும் தவறு. குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக நடக்கக்கூடிய போராட்டத்தை மாணவர்கள்தான் முன்னெடுக்கிறார்கள் எந்த அரசியல் கட்சியும் முன்னெடுக்கவில்லை. மேலும், மாணவர்களுக்கு ஆலோசனை சொல்லும் அளவுக்கு ரஜினிகாந்துக்கு எந்த தகுதியும் இல்லை. தேவையில்லாமல் மதகுருக்கள் பற்றி ரஜினி பேசக் கூடாது. பாஜகவுக்காக ரஜினி இந்த அளவுக்குத் தரம் தாழ்ந்து பேசுவது மோசமான ஒன்று” என்று தெரிவித்தவர், ரஜினிகாந்துக்கு நான் பகிரங்கமாகச் சவால் விடுகிறேன், ரஜினிகாந்தின் பெற்றோர் பிறப்பிடம் எது, அதற்கான சான்றிதழை ரஜினி வெளியிடுவாரா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுக இளைஞரணிச் செயலாளரும், நடிகருமான உதயநிதி இதுகுறித்து கூறுகையில், “ரஜினிகாந்த் முதலில் அரசியல் கட்சி தொடங்கி கொள்கைகளைச் சொல்லட்டும். அதன்பிறகு அவருக்குப் பதில் சொல்கிறோம். மாணவர்களை யாரும் கட்டாயப்படுத்தி அழைக்கவில்லை. நாடு முழுவதும் தன்னெழுச்சியாகத் திரண்டு போராட்டம் நடத்துகிறார்கள். ரஜினிகாந்த் நடிகராக இருப்பதால் அவருக்கு அரசியல் புரியவில்லை” என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here