கொரோனாவுக்கு எதிராக வடிவேல் அலப்பறை

உலக நாடுகள் எல்லாம் அணு குண்டுகளை புதைத்துவிட வேண்டும். அதெல்லாம் தேவையில்லை. மனிதநேயங்கள் ஒன்று சேர வேண்டும். மருத்துவ உலகம் தலையோங்கி நிற்க வேண்டும் என்று கூறி வடிவேலு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

போர், வன்முறை, நோய்த் தொற்று, இனக் கலவரம் என மனிதனுக்கும் மனிதத்துக்கும் எது நேர்ந்தாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடுத்தபடியாக அதிகம் கவலை கொள்வது கலைஞர்கள் தான். முதலாம் உலகப் போரினால் தன் குழந்தைப் பருவத்தின் பசுமையை இழந்த சார்லி சாப்ளின் இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த போது, தன் குரலை தன் சினிமாக்களின் வாயிலாக பதிவு செய்து கொண்டிருந்தார். இன்னும் பல கலைஞர்களை இதே போல நாம் உதாரணம் காட்ட முடியும்.

இந்த பெருந்தொற்று காலத்தில் முன்னணி நட்சத்திரங்களின் உதவி ஒரு புறம் உதவினாலும், சில கலைஞர்களின் வார்த்தைகளும் குரலுமே எவ்வளவு துயர் சூழ்ந்தாலும் உடனடியாக நம்மை ஆற்றுப்படுத்திவிடும். அப்படிப் பட்ட குரலுக்கு சொந்தக்காரன் தான் நம் மண்ணின் கலைஞன் வடிவேலு. ஏற்கனவே தன் பாடல் வழி இயற்கையை நாம் கைவிட்டதன் விளைவு தான் இது என்றும் வைரஸாய் வந்து இயற்கை நமக்கு பாடம் புகட்டியிருக்கிறது என்றும் கூறிய வடிவேலு, தற்போது மற்றொரு வீடியோ வெளியிட்டிருக்கிறார்.

வடிவேலு தனது வழக்கமான ஸ்டைலில் பேசியுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது, “போர் தான் நடந்து கொண்டிருக்கிறது. எவன் பார்த்த வேலையோ என்னவோ இப்படி ஒரு வேலை பார்ப்பாய்ங்களா? உயிர்களெல்லாம் சாக வேண்டும். கார், கட்டடம், வீடு வாசல் எல்லாம் இருக்க வேண்டும். அப்படி ஒரு சட்டம் செய்திருக்கிறார்கள்.

இதிலிருந்து நாம் தப்பிக்க வேண்டும். உலக நாடுகள் எல்லாம் அணு குண்டுகளை புதைத்துவிட வேண்டும். அதெல்லாம் தேவையில்லை. மனிதநேயங்கள் ஒன்று சேர வேண்டும். மருத்துவ உலகம் தலையோங்கி நிற்க வேண்டும். மருத்துவ உலகம் திணறுகிறது. அவர்கள் சொல்வதைக் கேட்டால் போதும். மருத்துவர்கள் எல்லாம் நமக்கு கடவுள்கள்” என்றார்.

பின்னர், தான் நடித்த வின்னர் படக் காமெடி ஸ்டைலில், “இப்ப இந்த வீட்டத் தாண்டி நீயும் வரக்கூடாது. நானும் வரமாட்டேன் என்கிறார்கள். அது கோடு. இது வீடு. கோடு, வீடு, ரோடு எதையும் தாண்டி வரக்கூடாது என்கிறார்கள். என்னா ஒரு சேட்டை. கேட்க மாட்டேங்குதுங்க இந்த பயபுள்ளைக. பிள்ளைகளுக்கு இப்போது நாம் கொடுக்கும் பாடம் காலங்காலத்துக்கும் அவர்கள் மனதில் நிற்கும். நமக்கு பிள்ளைகளை வளர்ப்பதற்கு இது நல்ல ஒரு சந்தர்ப்பம்.

கைகளை சுத்தம் செய்வது உள்ளிட்டவற்றை சொல்லிக் கொடுத்தால் பிற்காலத்தில் அக்குழந்தைகள் மருத்துவர்களாக வந்தாலும் சரி, நாட்டையே ஆள்பவராக இருந்தாலும் சரி இது குழந்தைகளுக்கு ஒரு பாடம் தானே. இந்தப் பாடத்தை குழந்தைகளுக்கு நடத்திவிட்டால் வேறு என்ன இருக்கு இந்த உலகத்தில். சரியான சந்தர்ப்பத்தை கடவுள் கொடுத்திருக்கிறார். இதைவைத்து குழந்தைகளை வளர்த்துவிட வேண்டும்” இவ்வாறு வடிவேலு கூறியுள்ளார்.