தமிழகத்தில் திரையரங்குகளைத் திறக்க இப்போதைக்கு வாய்ப்புஇல்லை என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

கொரோனா அச்சத்தால் தமிழகத்தில் கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக திரையரங்குகள் அனைத்தும் மூடி வைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக திரையுலகினர் பெரும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் இந்தியாவில் மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட வாய்ப்பு இருப்பதாக பரவலாகப் பேசப்பட்டு வந்த நிலையில், திரையரங்குகளை மீண்டும் திறக்க தளர்வுகள் வழங்கப்பட மாட்டாது என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு ஜூலை 17ஆம் தேதி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் வைரஸ் பாதிப்புகள் குறைந்துவிட்டதைத் தொடர்ந்து சீனா உள்ளிட்ட சில நாடுகளில் மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. அங்கு மக்கள் முகத்தில் மாஸ்க் அணிந்தவாறு இடைவெளிவிட்ட இருக்கைகளில் அமர்ந்து படம் பார்க்கின்றனர். அத்துடன் முன்னெச்சரிக்கையாக படம் முடிந்ததும் திரையரங்கம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்படுகிறது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. இதே வழிமுறைகளைப் பின்பற்றி தமிழகத்திலும் திரையரங்குகள் மீண்டும் இயங்க அனுமதி கிடைக்குமா என்று பலரும் எதிர்பார்த்திருந்தனர்.

ஆனால், இன்று(ஜூலை 22) கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, “தமிழகத்தில் திரையரங்குகளைத் திறக்க தற்சமயம் சாத்தியக்கூறு இல்லை. வெளிநாடுகளைப் போன்று வரிசைக்கு 2 பேர் என இடைவெளி விட்டு அமர்ந்து திரைப்படம் பார்க்க அனுமதி வழங்கினால் திரையரங்க உரிமையாளர்களுக்கு லாபம் கிடைக்காது. ” என்று கூறியுள்ளார். மேலும், திரையரங்குகள் திறப்பது குறித்து தமிழக முதல்வர் தான் முடிவெடுப்பார் என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here