தமிழகத்தில் இந்தி திணிப்பு குறித்து சமீப நாட்களாகச் சர்ச்சை எழுந்துள்ள நிலையில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மற்றும் நடிகர் சாந்தனு ஆகியோர் இந்தி திணிப்புக்கு எதிரான டி-ஷர்ட் அணிந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தற்போது இந்த டி-ஷர்ட் புகைப்படம் டுவிட்டரில் வைரலாகி வருகிறது.சமீபத்தில் திமுக எம்.பி கனிமொழி இந்தி தெரியாததால் விமான நிலையத்தில் அவமதிக்கப்பட்டதாகத் தெரிவித்திருந்தார். அதுபோல 2011ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் ஆடுகளம் படத்தை முடித்து கனடாவில் பிலிம் ஃபெஸ்டிவலில் கலந்து கொண்டு இந்தியாவுக்குத் திரும்பியபோது, டெல்லி விமான நிலையத்தில் இந்தி தெரியாததால் அவமதிக்கப்பட்டதாக இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்திருந்தார்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு மத்திய ஆயுஷ் அமைச்சகம் நடத்திய மருத்துவர்கள் கருத்தரங்கில் இந்தி தெரியாதவர்கள் வெளியே செல்லலாம் என்று ஆயுஷ் அமைச்சகச் செயலர் கூறியிருந்தது தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.இந்த நிலையில், தமிழகத்தில் இந்தித் திணிப்புக்கு எதிராகக் குரல்கள் வலுத்து வருகின்றன. அதன்படி தமிழ் திரையுலகமும் தற்போது களத்தில் இறங்கியுள்ளது. குறிப்பாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, நடிகர் சாந்தனு ஆகியோர் இந்தி எதிர்ப்பு டி-ஷர்ட் அணிந்து புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளனர்.யுவன் சங்கர் ராஜா அணிந்துள்ள டி-ஷர்ட்டில், ‘i am a தமிழ் பேசும் இந்தியன்’ என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. மெட்ரோ நடிகர் சிரிஸ் அணிந்துள்ள டீசர்ட்டில் ‘ஹிந்தி தெரியாது போடா’ என்று பொறிக்கப்பட்டுள்ளது.
அதுபோன்று நடிகர் சாந்தனு மற்றும் தொகுப்பாளினி கீர்த்தி, இதே வாசகங்கள் அடங்கிய டி-ஷர்ட்டை அணிந்து புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளனர்.இது இளைஞர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் இந்தப் புகைப்படங்களையும் வாசகங்களையும் ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். யுவன் சங்கர் ராஜாவின் செயலை திமுக எம்.பி கனிமொழி பாராட்டியுள்ளார்.
சுவாரஸ்யமாக இருக்கிறது என்று யுவனின் செயலைப் பாராட்டி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதற்கு, பதிலளித்துள்ள யுவன், ரியலி ஸ்வீட் ஆஃப் யூ, தேங்க்யூ சோ மச்… என்று குறிப்பிட்டுள்ளார். இவர்களது உரையாடலும் இணையத்தில் வைரலாகி வருகிறது. #ஹிந்திதெரியாதுபோடா என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here