அன்னபூரணி – சினிமா விமர்சனம்

சிறுமி ‘அன்னபூரணி’க்கு பிறக்கும்போதே நாக்கின் சுவைக்கான நரம்புகள் அதீத உணர்ச்சி மிகுந்ததாக இருக்கிறது.
இதனால் ருசி பார்ப்பதிலும் உணவு மீதும் அவளுக்கு இயற்கையாக நாட்டம் பிறக்கிறது.

அவளின் தகப்பன் திருச்சி ஸ்ரீரங்கம் மடப் பள்ளியில் விஷேசமான அக்கார வடிசல் பிரசாதத்தை தயாரித்து பக்தர்களுக்குக் கொடுக்கும் சேவை செய்யும் பிராமணர்

எனவே இயற்கையாகவே உணவின் மீதும் ருசி மீதும் இருக்கும் நாட்டம், தகப்பனாரின் தொழிலால் சமைப்பதிலும் பற்றிக் கொள்ள, சிறு வயதிலேயே சிறப்பாக சமைக்கத் துவங்குகிறாள் அன்னபூரணி.

அது மட்டுமின்றி கண்ணைக் கட்டிக் கொண்டு ஒரு பண்டத்தை சுவைத்து அது என்ன பண்டம் என்று கண்டுபிடிப்பதிலும் தேர்ச்சி பெற்று  இருக்கிறாள்.
இப்படிப்பட்ட சூழலில் தோழியின் தகப்பனார் மூலமாக சமைத்து கொடுப்பது எவ்வளவு பெரிய சேவை என்பதை உணர்ந்து கொண்ட பூரணி, இந்தியாவிலேயே தலை சிறந்த உணவுக் கலை நிபுணராக திகழும் ஆனந்த்(சத்யராஜ்) போல் தானும் ஆக வேண்டும் என்று ஆசைப்படுகிறாள்.

சிறு வயதில் அவளின் சமைக்கும் ஆசைக்கு ஆதரவாக இருந்த குடும்பம், அவள் ஹோட்டல் மேனெஜ்மெண்ட் படிக்கப் போகிறேன் என்று வந்து நிற்கும்போது, அதற்கு தடை விதிக்கிறது.காரணம் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் துறையில் படிக்கச் சென்றால், அசைவ உணவை கையால் தொட்டு சமைக்க வேண்டியது இருக்கும் என்பதுதான்.

குடும்பத்தின் தடையை மீறி பூரணி சாதித்தாளா..? அவளின் லட்சியத்தை அடையும் பாதையில் எத்தனை தடைகள் அவளுக்கு வந்தன.? என்பதை குறைந்தபட்ச சுவாரஸ்யத்துடன், சிறப்பான நடிப்புடனும் விளக்குகிறது திரைக்கதை.

சமீபத்தில் நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த திரைப்படங்களிலேயே மிகப் பெரிய ஆறுதல் அளிக்கக் கூடிய திரைப்படம் இதுதான்.ஏனென்றால் படத்தின் ஆரம்பத்திலேயே அன்னப்பூரணி என்னும் மையக் கதாபாத்திரத்தின் குணாதிசயங்களை வெளிப்படுத்தும்விதமான காட்சிகளை அடுக்கி, அக்கதாபாத்திரத்தை சிறப்பாக வடிவமைத்ததோடு, உடன் பயணிக்கும் சில முக்கிய கதாபாத்திரங்களையும் அதே சிரத்தையுடன் செதுக்கி இருப்பதே.

முதல் காட்சியில் விபத்தில் சிக்கும் நயன்தாராவின் பின்னோக்கிய நினைவுகளில் கதை துவங்குகிறது.கதை துவங்கும் புள்ளியிலேயே படத்தின் க்ளைமாக்ஸ் என்ன என்பது தெள்ளத் தெளிவாக தெரிந்து விடுகிறது.

இருப்பினும் படத்தின் ஆரம்பப் புள்ளிக்கும், முடிவுப் புள்ளிக்குமான இடைப்பட்ட தூரத்தை அற்புதமான காட்சிகளால் இட்டு நிரப்பாவிட்டாலும்கூட அலுத்துப் புளித்துப் போன காட்சிகளால் அடுக்காமல் இருந்ததும், அக்காட்சிகளில் நடித்த நடிகர்கள், தங்கள் நடிப்புத் திறமையால் அக்காட்சியை மேம்படுத்தியதுதான் என்றும் கூறலாம்.

மேலும் உணவு தொடர்பான திரைப்படத்தில் உணவு அரசியலைப் பற்றி தேவைப்படும் இடங்களில் தேவைக்கேற்பப் பேசியதும், பிராமண வீட்டில் பிறந்த பெண்ணைக் கொண்டு, அவளை மாமிசம் சாப்பிடுவது தொடர்பாக விவாதிக்க வைத்து, அவளை அதிலிருக்கும் இயல்புத் தன்மையை புரிந்து கொள்ள வைத்து, இறுதிக் காட்சியில் தொழில் ரீதியாக அவளை நமாஸ் செய்ய வைத்ததும் படத்தின் சிறப்பம்சங்கள் என்று சொல்லலாம்.

மேலும் ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டிருக்கும் துலுக்க நாச்சியாரின் கதையையும், கதைக்கு தேவைப்படும் விதத்தில் பயன்படுத்தி இருப்பதும் பாராட்டுதலுக்குரியது.தன் கனவுகளையெல்லாம் தூக்கி அடுப்பில் வைத்துவிட்டு, திருமண கோலத்தில் கதிகலங்கி நிற்கும்போது, நண்பன் ஜெய் வீட்டின் பின்புறமாக வந்து, “வா சென்னை போய் படிப்பைத் தொடருவோம்” என்று அழைக்க, அதே நேரம் பூரணியின் பாட்டி உள்ளே வந்து அந்த சூழலை தவறாகப் புரிந்து கொள்ளும் தருணத்தில் நயன்தாராவின் பதைபதைப்பும் தவிப்பும் ஆவ்ஷம்.

அதேபோல் வீட்டு ஓனரை மிரட்டிவிட்டு வீட்டை விட்டு வெளியேறும் காட்சியிலும், இந்தியாவின் தலை சிறந்த செஃப் ஆனந்திடம் ஒரு ருசிகரமான உணவைத் தயாரிக்க படிப்பு தேவையில்லை என்று கூறி வாதிடும் காட்சியிலும் தான் தோற்றுப் போனதாக உணர்ந்து மருத்துவமனை பெட்டைச் சுற்றி நிற்கும் தன் குடும்பத்தினரை திட்டும் காட்சியிலும் தன் தனித்துவமான நடிப்பால் வசீகரிக்கிறார்.நயனுக்கு அடுத்தது நடிப்பில் ஸ்கோர் செய்வதற்கு அதிக ஸ்கோப் இருக்கும் கதாபாத்திரம் செஃப் ஆக வரும் சத்யராஜ் கதாபாத்திரம்தான்.
தன் குழுவினர் தயாரித்த ஸ்பெஷல் உணவை சாப்பிட வந்த பிரசிடண்ட் குழுவினர் எல்லா உணவுகளுமே எங்கள் நாட்டு உணவுகளாகவே இருக்கிறது. நாங்கள் உங்கள் கலாச்சார உணவை ருசி பார்க்கலாம் என்று வந்திருந்தோம் என்று கூறும்போது என்ன சொல்வது என்று தெரியாமல் தவிக்கும் போதும், தன் கீழ் பணியாற்றும் பூரணி செய்த பாரம்பரிய உணவை சுவைத்த பிரஸிடெண்ட் வாழ்த்தும்போது, அதை செய்தது இவர்கள்தான் என்று பூரணியை அறிமுகப்படுத்தும் பக்குவத்திலும், தன் மகன் செய்த தவறுக்குப் பொறுப்பேற்று ஹோட்டல் பதவியில் இருந்து விலகுவதோடு பூரணிக்கு துணையாக நிற்பதுமாக மாஸ் காட்டுகிறார் சத்யராஜ்.

நயனின் தகப்பனாக நடித்திருக்கும் அச்சுத்குமார் சிறு வயதில் தன் மகளின் ஆசைகளை நிறைவேற்றத் துடிக்கும் சராசரி தகப்பனாகவும், தன் குடும்ப கெளரவத்தை மகள் சிதைத்துவிடுவாளோ என்கின்ற பதட்டத்தில் அவள் கனவுக்கு குறுக்கே நிற்கும்போது சாதி சடங்குகளை தூக்கிப் பிடிக்கும் தகப்பனாகவும், தன் மகள் பெறப் போகும் வெற்றியின் மூலம் தன் மீது படிந்த களங்கத்தை துடைக்க முயலும் சூது வாது மிகுந்த தகப்பனாகவும் மாறுபட்ட நடிப்பைக் கொடுத்திருக்கிறார். படத்தின் இறுதிக்காட்சியில் தன் மகள் கையில் ஒப்படைக்கும் விருதை பிடித்தபடி அவளை எப்படியெல்லாம் திட்டினோம் என்று நினைத்துப் பார்க்கும் இடத்தில் கண்கலங்க வைக்கிறார்.
பாட்டியாக வரும் சச்சு ”நாந்தாண்டி உன் எதிர்காலத்தைக் காட்டுற கண்ணாடி” என்று ஒரு வசனம் பேசினாலும் அதுவே ஒட்டு மொத்தப் படத்திற்கும் திரு வசனமாக இருக்கிறது.

மற்றொரு செஃப் ஆக வரும் கார்த்திக் குமாருக்கு நீங்கள் பார்க்கும் பார்வையிலேயே நீங்கள் வில்லன் என்று தெரிய வேண்டும் என்று கூறியிருந்தார்களா என்று தெரியவில்லை. எல்லோரையும் பார்த்து படம் முழுக்க முறைத்துக் கொண்டே இருக்கிறார்.
சமையல்காரராக வரும் கே.எஸ்.ரவிக்குமார் சிறுமி பூரணி மனதில் செஃப் என்னும் கனவை ஸ்டிராங்காக விதைப்பதோடு தன் கதாபாத்திரத்தின் வேலையை பூர்த்தி செய்கிறார்.

ரெட்டின் கிங்க்ஸ்லியும், சுரேஷ் சக்ரவர்த்தியும் ஆர்டிஸ்ட் எண்ணிக்கையை கூட்ட உதவியிருக்கிறார்களே ஒழிய, கதைக்கோ, திரைக்கதைக்கோ துளியும் பங்காற்றவில்லை.
தமனின் இசையில் பாடல்கள் சுமாராக இருக்கின்றது. ஆனால் பின்னணி இசையோ திரைக்கதை போகிற போக்கில் உணர்வுகளை தட்டி எழுப்பும் வேலையை சிறப்பாக செய்திருக்கிறது.

சத்யன் சூரியனின் ஒளிப்பதிவு சிம்பிளாக சொல்வது என்றால் தரம். படத்தின் இரண்டாம் பாதியில்தான் ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்கள் வருகிறது என்றால், சத்யன் சூரியனின் ஒளிப்பதிவு ஆரம்பத்தில் இருந்தே ஃபைவ் ஸ்டார் ஓட்டலின் சுத்தம் போல் பளிச்சென்று இருக்கிறது.

அறிமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கியிருக்கிறார்.

கதையில் பேசியிருக்கும் உணவு அரசியல், கதாபாத்திரத்தை கொண்டு நிகழ்த்தியிருக்கும் மத உணர்வு தொடர்பான அரசியல்,
மேலும் மிகச் சிறந்த கதாப்பாத்திர தேர்வுக்காகவும் இயக்குநரை பாராட்டலாம்.மொத்தத்தில் இந்த ‘அன்னபூரணி’ சாதிக்க வேண்டும் என்கின்ற பசியில் இருக்கும் பெண்களுக்கும், ஜாலியாக குடும்பத்துடன் ஒரு திரைப்படம் பார்க்க வேண்டும் என்கின்ற பசி இருப்பவர்களுக்கும், ஆரோக்கியமான அறுசுவை உணவு என்றே கூறலாம்.