இந்தப் படத்தை ஸ்ரீவெங்கடேஸ்வரா சினி சித்ரா நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் பி.வி.எஸ்.என்.பிரசாத் தயாரித்துள்ளார்.
இந்தப் படத்தில் வசந்த் ரவி, விமலா ராமன், சரஸ் மேனன், முரளிதரன், உதயாதீப் மற்றும் பலர் நடித்துள்ளனர். இயக்குநர் தருண் தேஜா எழுதி, இயக்கியுள்ளார்.
தமிழில் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஹாலிவுட் பாணியில்வந்திருக்கும் ஒரு திகில் படம். கதையாக பார்த்தால் வழக்கமான பேய் படங்கள் போலத்தான் தோன்றும். ஆனால் உட்புறம் புத்தம் புதிய கதைக் களத்துடன் வந்திருக்கிறது.
முன்னொரு காலத்தில் விவசாயி ஒருவரின் இரட்டை குழந்தைகளான சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழக்கின்றனர். இதனால் மனவேதனையடைத்த அந்த விவசாயி அஸ்வினி தேவர்களை நோக்கி கடும் தவம் இருக்கிறார்.
அந்த விவசாயிக்கு தரிசனம் தரும் அஸ்வினி தேவர்கள், ”இருவரில் ஒருவனைத்தான்
பிழைக்க வைக்க முடியும்” என்று கூறி ஒருவனுக்கு மட்டுமே உயிர் கொடுத்து, “இயற்கையாகத்தான் இவன் மரணிப்பான். மற்ற எவையாலும் இவன் உயிர் போகாது..” என்ற வரத்தையும் அளிக்கின்றனர்.
மேலும், இரண்டு குதிரை முக தங்கச் சிலைகளை அந்த விவசாயியிடம் கொடுத்து, ”இரண்டு சிலைகளையும் எப்போதும் சேர்த்தே வைத்திருக்க வேண்டும். பிரித்தால், ஒரு சிலை பாதாள அரக்கனிடம் போய்விடும். அதன் பிறகு இந்த உலகம் ராட்சஷ மனிதர்களால் சூழப்படும்” என்று எச்சரித்துவிட்டுப் போகின்றனர்.
ஆனால், சகோதரனை இழந்த சோகத்தில் இருக்கும் சிறுவனிடம் வரும் சாத்தான், ”ஒரு சிலையைக் கொடுத்தால் சகோதரனைப் பிழைக்க வைக்கிறேன்” என்று சொல்ல அந்த சிறுவனும் அதை நம்பி கொடுக்கிறான். அவனை ஏமாற்றி அந்தச் சிலையை எடுத்துச் செல்கிறது சாத்தான். மேலும் நரகத்தில் இருந்து ஒரு சாத்தானை வரவழைத்து அதனை அந்த ஊரில் வாழ வைக்கிறது. இதனால் அந்த ஊருக்கு சாபம் ஏற்பட்டு பலர் உயிரிழக்கின்றனர்.
லண்டனில் ஒரு பெரிய மாளிகையில் ஆராய்ச்சிக்குப் போன ஆர்க்கியாலாஜி துறையில் உள்ள ஒரு பெண் அதிகாரி, அந்த சாத்தானால் பாதிக்கப்பட்டு
தன் உதவியாளர்களைக் கொல்வதோடு தானும் தற்கொலை செய்து கொள்கிறார்.
இந்த நேரத்தில் தற்போது அமானுஷ்யங்கள் பற்றிய விஷயங்களைப் பற்றிபேசும் யூ டியூப் சேனலை நடத்தி வரும் வசந்த் ரவியும், அவரது நண்பர்களும் லண்டனில் உள்ள அந்த மாளிகைக்கு வீடியோ எடுக்க வருகின்றனர். அந்தப் பங்களாவின் பின் கதையைத் தெரிந்து கொண்டுதான் போகிறார்கள்.
அந்தப் பங்களாவில் விழுந்த மரணங்களின் எண்ணிக்கை 10-க்கும் மேல். மேலும் ஆர்த்தி என்ற பெண்ணின் உடல் மட்டும் அந்தப் பங்களாவில் கிடைக்கவில்லை இரவானால் அந்தப் பங்களா செல்லும் வழியைச் சுற்றி கடல் சூழ்ந்து கொள்ளும்.
இப்படியான திகில் மிகுந்த அந்தப் பங்களாவுக்குள் சென்ற வசந்த் ரவியும், அவரது குழுவினரும் என்னவானார்கள்..? என்பதை பரபரப்போடு சொல்கிறது இந்த அஸ்வின்ஸ் திரைப்படம்.
படமெங்கும் மிகக் குறைந்த நடிகர்களே உள்ளனர். அனைவரும் நிறைவாக நடித்துள்ளனர். வசந்த் ரவி நடிப்பதற்கு வாய்ப்புள்ள படம். அதை மிகச் சரியாகப் பயன்படுத்தியுள்ளார். பின் பாதியில் அவரது நடிப்புதான் படத்தின் ஜீவனை பிடித்து வைக்கிறது.
ஆர்த்தியாக விமலா ராமன் நல்ல நடிப்பை கொடுத்துள்ளார். சரஸ்வதி மேனன் சஸ்பென்ஸை தன் முகத்திலே கொண்டு வந்துள்ளார். முரளிதரன் க்ளைமாக்ஸ் கட்சியின் போது கவனிக்கத்தகுந்த வகையில் பெர்பாமன்ஸ் செய்துள்ளார். உதயதீப் நல்ல தேர்வு.
இசையில் பல புது வடிவங்களை கொண்டு வந்துள்ளார் இசை அமைப்பாளர் விஜய் சித்தார்த். ஹாரர் படங்கள் என்றாலே, அதற்கென்று ஒரு மியூசிக் தமிழ் சினிமாவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதைவிஜய் சித்தார்த் இந்தப் படத்தில் மாற்றியுள்ளார்
சின்னச் சின்ன ஒலிகளுக்கும் மெனக்கெட்டு வடிவமைத்துள்ளனர் சவுண்ட் டிசைனர்ஸ் சச்சின்& ஹரி. இவர்களால்தான் படத்தில் பல காட்சிகளில் பார்வையாளன்பதறிச் சிதறுவார்கள்.A.M எட்வின் சகாய் யாரும் எட்டிப் பிடிக்க முடியாத அளவில் லைட்டிங்-ஐ செட் செய்து ஒரு அமர்க்களமான ஒளிப்பதிவை கொடுத்துள்ளார். இருட்டில் ஒற்றை ஒளியை மட்டும் வைத்து கேரக்டர்கள் நகரும்போது அதை பாலோ செய்யும் கேமரா நகர்வும், ட்ராலி கிரேன், ட்ரோன் ஷாட்களும் உலகத் தரம். ட்ரோன் காட்சிகளில் விரியும் கடல் காட்சிகள் அற்புதம்.
ஹாரர் படங்கள் என்றால் எடிட்டர் பணி முக்கியம்.இந்தப் படத்தின் எடிட்டர் வெங்கட் ராஜன்
கூர்மையானகத்தி போல ஷார்ப்பாக தன் கத்திரிக்கு வேலை கொடுத்துள்ளார்.
டான் பாலாவின் கலை இயக்கமும் சிறப்பு. தினசரி பனிரெண்டு மணி நேரம் கடல் நீரில் மூழ்கி, பனிரெண்டு மணி நேரம் மட்டுமே உபயோகப்படுத்தப்படும் வாய்ப்புள்ள அந்த கடல் பாதை லொக்கேஷனும் அந்த பங்களாவும் அபாரம்.
தீய உலகம், தூய உலகம் என கதை ஆங்காங்கு சிதறி எழுந்தாலும் படத்தின் முடிவில் எல்லாம் ஒரு நேர்க்கோட்டில் வந்துவிடுகிறது. “ஒரு உலகத்தில் கண் மூடினால், மறு உலகத்தில் கண் திறப்போம்” என்ற படத்தின் வசனத்தின்படியே படத்தின் முடிவை அமைத்ததிலும், இயக்குநர் தருண் தேஜா கவனிக்க வைத்து விட்டார்.
கதை சொல்லலில் இன்னமும் எளிமையைப் புகுத்தியிருக்கலாம். பேமிலி ஆடியன்ஸை மனதில் வைத்து எமோஷ்னல் ஏரியாவை சரி செய்திருக்கலாம். டெக்னிக்கலில் கொட்டிய உழைப்பை திரைக்கதைக்கும் கொடுத்திருந்தால், இந்த ‘அஸ்வின்ஸ்’ எல்லோரையும் தன் உலகுக்கு இழுத்திருப்பார்.
சைக்காலஜிகள் த்ரில்லர் என்பதால் சாதாரண சினிமா ரசிகனுக்கு இப்படம் புரிவது சற்று கடினம்தான்.எந்த எதிர்பார்ப்புமின்றி திரையரங்கிற்குச் சென்றால் இந்த ‘அஸ்வின்ஸ்’ ஏமாற்ற மாட்டார்கள்.
அஸ்வின்ஸ் – முழுமை இல்லாவிட்டாலும் மோசமில்லை..!
Next Post