ஆரகன் திரைப்பட விமர்சனம்

ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்து ஆளாகும் நாயகி கவிப்ரியா மனோகரனும் நாயகன் மைக்கேல் தங்கதுரையும் காதலிக்கிறார்கள்.இருவரும் நிறையப் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று தீவிரமாக இருக்கிறார்கள்.அதிகச் சம்பளம் கிடைக்கிறது என்பதால் ஒரு மலைக்காட்டுக்குள் தனிமையில் இருக்கும் வயதான பெண்மணியைப் பராமரிக்கும் வேலைக்குப் போகிறார் நாயகி.
அங்கு போனதும் நாயகிக்குப் பல எதிர்பாராத சிக்கல்கள்.அவை என்ன? அவற்றின் விளைவுகள் என்னென்ன? என்பதுதான் ஆரகன் படம்.நாயகனாக நடித்திருக்கும் மைக்கேல்தங்கதுரை,இயல்பான தோற்றம் அளவான நடிப்பு ஆகியனவற்றால் பொருத்தமானவராக இருக்கிறார்.
நாயகி கவிப்ரியா மனோகரன் புதுவரவு.நடிப்பிலும் நன்று.பல இடங்களில் அவருடைய புன்னகையே அவருடைய பெரும்பலமாக அமைந்திருக்கிறது.காட்டுக்குள் போனதும் கதையில் நடக்கும் மாற்றங்களைத் தன் நடிப்பிலும் காட்டி வரவேற்புப் பெறுகிறார்.
ஸ்ரீரஞ்சனி, கலைராணி,ப்ரீதம் சக்ரவர்த்தி,மெர்சல் ராஜா, கெளரி, ஆர்த்தி உள்ளிட்டோர் படத்தில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் வேலையைச் செய்திருக்கின்றனர்.சூர்யாவைத்தி தன் ஒளிப்பதிவில், நகரம் மற்றும் வனம் சம்பந்தப்பட்ட காட்சிகளை வேறுபடுத்திக் காட்டியிருக்கிறார்.

விவேக் மற்றும் ஜெஸ்வந்த் ஆகியோரின் இசையில் பாடல்கள் கேட்டு இரசிக்க மாதிரி அமைந்திருக்கின்றன.பின்னணி இசையில் இயக்குநருக்கு உதவியாக இசைத்திருக்கிறார்.
சசிதக்சாவின் படத்தொகுப்பு திரைக்கதையை ஒழுங்குபடுத்த உதவியிருக்கிறது.

எழுதி இயக்கியிருக்கிறார் அருண்.கே.ஆர்.தற்காலக் கதையை மட்டும் சொன்னால் வழக்கமான படமாகிவிடும் என்று நினைத்து சித்தர்கள் காலம், என்றும் இளமை தரும் மருந்து, பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை அதைப் புதுப்பிக்க வேண்டுமென்ற நிபந்தனை ஆகியனவற்றைச் சேர்த்து திரைக்கதை எழுதியிருக்கிறார்.
நாயகன் நாயகி ஆகியோருக்கு இடையிலான உளவியல் ரீதியான உரையாடல்கள்,நகரத்துக்குள் இருந்து வனத்துக்குள் கதை போனதும் நடக்கும் மாறுபட்ட நிகழ்வுகள் ஆகியன படத்தின் பலமாக அமைந்திருக்கின்றன.