இரவின் நிழல்- விமர்சனம்

இரண்டு வருடங்களுக்கு முன்பாக ஒரேயொரு கதாபாத்திரம் மட்டுமே நடித்திருக்கும் படம் என்று சொல்லி ‘ஒத்த செருப்பு’ படத்தில் நடித்து தயாரித்த  பார்த்திபன், அடுத்து “உலகத்திலேயே  சிங்கிள் ஷாட்டில் Non லீனியர் முறையில் கதை சொல்லும் முதல் படம் இதுதான்” என்று சொல்லி உருவாக்கியிருக்கும் படம் இது.
தமிழ் சினிமாவில் எப்போதும் ஏதாவது ஒரு வித்தியாசத்தை செய்து தனது ‘புதுமைப் பித்தன்’ என்ற பெயரை தக்க வைத்துக் கொள்ளும் இயக்குநர், நடிகர் பார்த்திபனை நாம் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
ஆனால் இந்தப் படம் அந்த வித்தியாசத்திற்கு மரியாதை செய்திருக்கிறதா என்பது கேள்விக்குறிதான். காரணம் படத்தின் மேக்கிங்கிற்காக 90 நாட்கள் ரிகர்சல் பார்த்து, கடைசியாக 96 நிமிடங்கள் நடிகர், நடிகைகளெல்லாம் சிறப்பாக நடித்து உருவாக்கியிருந்தாலும் படத்தின் கதை குடும்பத்தோடு பார்க்க முடியாதபடி அமைந்திருப்பதுதான்..!

பார்த்திபன் தனது முதல் படமான ‘புதிய பாதை’யில் தான் சொல்லியிருந்த கருத்தையே இந்தப் படத்தில் 2000-மாவது இளைஞர்களுக்காக அவர்களுக்குப் பிடித்தமான வகையில் சொல்வதாக நினைத்து ஒரு போர்னோ அடல்ட்ரி படமாக இதை வழங்கியிருக்கிறார்.

அனாதையாக பிறந்து கேட்பாரே இல்லாமல் வளர்ந்த ஒருவன், இந்த சமூகத்தில் தன் மீது நடந்த கொடுமைகளை தாங்கிக் கொண்டு உயர்ந்து முன்னேறி என்னவாகிறான் என்பதுதான் இந்தப் படத்தின் கதைக் கரு.
இந்தக் கருவுக்கேற்ற திரைக்கதையை நான் லீனியர் என்ற முறையில் முன், பின் காட்சிகளாக வைத்து அதையும் தொடர்ச்சியாக நன்கு திட்டமிட்டு படமாக்கியிருக்கிறார் பார்த்திபன்.
நடிப்பென்று பார்த்தால் பார்த்திபனுக்கே உரித்தான சில வசன டெலிவரி காட்சிகளில் மட்டுமே ரசிக்க முடிந்திருக்கிறது. மற்றவைகளில் ஒரு இயக்குநராக படத்தை நகர்த்திச் செல்லும் நபராகவே திரையில் தோன்றியிருக்கிறார் பார்த்திபன்.
ஆந்திர காதலியாக நடித்திருக்கும் பிரிகடா சகாவும், முதல் காதலியாக நடித்திருக்கும் சினேகா குமாரும் தியேட்டருக்கு வந்திருக்கும் இளைஞர்களின் மனதைப் பெரிதும் கவர்ந்திழுக்கிறார்கள். அந்த அளவுக்கான நடிப்பை அவர்கள் காண்பித்திருக்கிறார்கள்.
மனைவியாக நடித்திருக்கும் பிரியங்கா ரூத்தும் பார்த்தவுடனேயே “இதுக்கு மேலேயும் எங்கம்மாவை நான் கஷ்டப்படு்த்த விரும்பலை…” என்று சொல்லி திருமணத்திற்கு ஒகே சொல்வதும்.. பின்பு பார்த்திபனுடனான மல்லுக் கட்டலில் அவர் காட்டும் கோபமும் ரசிக்கக் கூடியது. வரலட்சுமி சரத்குமார் மிக சாதாரணமாக நடித்திருக்கிறார். படத்தில் இவருக்கான ஏரியாகுறைவு
தொழில் நுட்பத்தில் கலை இயக்குநர் விஜய முருகனுக்கு தயங்காமல் ஒரு ‘ஓ’ போட வேண்டும். தனது அசாத்தியமான திறமையை இதில் கொட்டியுள்ளார் கலை இயக்குநர்.பல்வேறு காட்சிகள், இடங்கள் என்று மாறி, மாறி வரும் படத்தில் அத்தனைக்கும் மிக, மிக அழகான செட்டுகளை போட்டு காண்பித்திருக்கிறார். அதிலும் காளஹஸ்தி கோவில் மற்றும் காளிகாம்பாள் கோவில் செட்டுகளுக்காகவே தனியாக அவரைப் பாராட்டியே ஆக வேண்டும்.இந்த ‘இரவின் நிழலு’க்கு தன் அபாரமான திறமையால் ஒளி கொடுத்துள்ளார் ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன். ஒரே டேக்கில் எடுக்க வேண்டிய இந்தப் படத்தை 23 டேக்கில் படமாக்கியிருக்கிறார்கள். ஒரு சிறிய தவறு நடந்தால்கூட மீண்டும் முதல் டேக்கில் இருந்துதான் ஆரம்பிக்க வேண்டும் என்ற சவாலையும் சந்தித்து அதிலும் சாதித்து காட்டியுள்ளார் ஆர்தர் வில்சன்.
காட்சிக்குக் காட்சி இவர் வைத்துள்ள ஒளியமைப்பு கண்களைக் கவர்கின்றன. படம் முழுவதும் இரவு நேரத்திலேயே இருப்பதுபோல அமைந்திருப்பதும் ஒளிப்பதிவாளருக்குக் கிடைத்த வசதியாக உள்ளது. இந்தப் படத்தைத் தோள் மீது தாங்கிப் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன். அவரது அபார உழைப்புக்கு நமது மிகப் பெரிய பாராட்டுக்கள்.ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை படத்தின் நகர்தலை நமக்குச் சொல்லிக் கொண்டேயிருக்கிறது. பாடல்களிலும் அடித்து ஆடியிருக்கிறார் ரஹ்மான். சாண்டியின் நடன வேகத்திற்கு ஏற்ற இசையையும் அமைத்து மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘இசைப் புயல்’ என்ற பெயருக்கு நியாயம் செய்திருக்கிறார் ரஹ்மான்.படத்தை கஷ்டப்பட்டு உருவாக்கியிருக்கிறார்கள் என்ற ஒரே காரணத்துக்காக இந்தப் படத்தைக் கொண்டாடலாம். ஆனால்
“படத்தில் சொல்லப்பட்டிருக்கும் கதை, திரைக்கதை, வசனம் என்ற உள்ளடகத்தினால் இ்ந்தப் படத்தை கொண்டாட முடியாமலும் இருக்கிறது.அளவற்ற கெட்ட வார்த்தைகள் பிரயோகம், தேவையற்ற நிர்வாணக் காட்சிகள், வக்கிரமான சில காட்சிகள் என்று காட்சிக்குக் காட்சி ஏதோ போர்னோ அடல்ட்ரி படத்தை போல உருவாக்கியிருப்பதுதான் இந்தப் படத்தை நாம் கொண்டாட முடியாமல் போக காரணம்”
1983-ம் ஆண்டு காலக்கட்டத்தில் கஞ்சா விற்கப் போகும் இடத்தின் சூழலை பார்த்திபன் காட்டியிருக்கும்விதம் தரமற்ற காட்சிகள். அதிலும் பாத்டப்புக்குள் உறவு கொள்வது போன்ற காட்சிகளை வைத்திருப்பதன் மூலம் பார்த்திபன் இந்தச் சமூகத்திற்கு என்ன சொல்ல வருகிறார் என்றும் தெரியவில்லை.
பார்த்திபனின் அம்மாவான ராணி கொலை செய்யப்பட்டிருக்கும் காட்சியை இவ்வளவு கொடூரமாகக் காட்ட வேண்டிய அவசியம்தான் என்ன..? இது பிட்டு படம் பார்க்கும் நோக்கத்தில் ரசிகனை தியேட்டருக்கு வரவழைக்கும் மலிவான செயல்.கொலை செய்தது அந்தப் பெண்ணின் கணவன்தான். பின்பு எதற்கு அந்த அரை நிர்வாணக் கோலம்..? கைக் குழந்தையை வைத்து பரிதாபம் தேடும் முயற்சிதான் இது என்றால்
அந்தக் கொலையைவிடவும் கொடூரமானது.மேலும் வக்கிரமான உணர்வோடு ஓரினச் சேர்க்கை சம்பந்தமான காட்சியையும், அதே நபரை தான் பெரிய பணக்காரனாக ஆனவுடன் தன் வீட்டு செக்யூரிட்டியாக வைத்துக் கொண்டு தினமும் அவரது பின்புறத்தில் அடிப்பது போன்ற காட்சிகளை வைத்திருப்பதெல்லாம் உலக சினிமா வரலாற்றில் இது போன்ற படங்களுக்கு இருக்கும் இடத்தில், இந்தப் படத்தையும் கொண்டு போய் சேர்ப்பதற்கான முயற்சியாகத்தான் தோன்றுகிறது.
இந்த உலக சாதனை முயற்சியில் குடும்பத்தோடு வந்து பார்க்கும் கதையம்சத்தில் ஒரு சிறந்த திரைக்கதையில் படத்தை உருவாக்கியிருந்தால் நிச்சயமாக பார்த்திபனை நாம் பாராட்டியிருக்கலாம். கொண்டாடியிருக்கலாம்.
ஆனால் இப்படி படம் பார்க்க வரும் ரசிகர்களிடத்தில் வன்முறையான, ஒழுக்கக் கேடான, வக்கிரமான உணர்வுகளைத் தூண்டிவிடும் கதையம்சத்தில் படத்தை உருவாக்கியிருப்பதால் பார்த்திபன் இந்தச் சாதனையை செய்ய முனைந்ததற்கு பதிலாக சும்மாவே இருந்திருக்கலாம் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது..!
தயாரிப்பு:பயாஸ்கோப் USA, அகிரா புரொடக்ஷன்ஸ்  பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் சார்பில் தயாரிப்பாளர்கள் – கால்டுவேல்  வேல்நம்பி, அன்ஷு  பிரபாகர், Dr.பாலா  ஸ்வாமிநாதன், Dr.பிஞ்சி  ஸ்ரீனிவாசன், ரஞ்சித்  தண்டபாணி, கீர்த்தனா  பார்த்திபன்  அக்கினேனி  & இராதாகிருஷ்ணன்  பார்த்திபன்
நடிகர்கள்:
இராதாகிருஷ்ணன் பார்த்திபன், வரலட்சுமி சரத்குமார், ரோபோ ஷங்கர், பிரிகிடா சகா,  சினேகா குமார், சாய் பிரியங்கா ரூத், ரேகா நாயர், ஆனந்த கிருஷ்ணன், சந்துரு மற்றும் பலர் நடித்துள்ளனர்.
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – இராதாகிருஷ்ணன் பார்த்திபன்,
இசை – ஏ.ஆர்.ரஹ்மான்,
 ஒளிப்பதிவு இயக்குனர்-ஆர்தர்  A. வில்சன்,
கலை இயக்குநர்-ஆர்.கே.விஜய் முருகன்,
ஒலிக் கலவை – எஸ்.சிவக்குமார், இணை இயக்குனர் – P.கிருஷ்ணமூர்த்தி,
பாடல்கள்  – கடுவெளி  சித்தர் , மதன் கார்க்கி, ராக்கெண்டு  மௌலி, & இராதாகிருஷ்ணன்  பார்த்திபன்,
VFX மேற்பார்வையாளர்  – கொட்டலங்கோ லியோன்,
ஒலி தொகுப்பு மேற்பார்வை  – கிரேக்  மேன்,
ஒலி வடிவமைப்பு மேற்பார்வை – குணால் ராஜன்,
கிம்பல் ஆப்ரேட்டர்-A.K.ஆகாஷ், Focus Pullers – (டிசோஸா), ராஜேஷ், நடன இயக்கம் –  குமார், பாபா  பாஸ்கர்,
பத்திரிகை தொடர்பு- நிகில்