உயிர் தமிழுக்கு – திரைவிமர்சனம்

தமிழ்நாடு, இந்தியஅரசியல் நிகழ்வுகளை நினைவு படுத்தும்படியான காட்சிகளைச் அரசியல் தெளிவுடன் காட்சிப்படுத்தினாலே படம் பார்க்கும் பார்வையாளன் ரசித்து பார்க்கும் நிலைக்கு வந்து விடுவான் என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது

உயிர் தமிழுக்கு.
படம் சம்பந்தமான பத்திரிகையாளர் சந்திப்பில் இந்தப் படத்தின் கதை நாயகன் அமீர் பேசுகிறபோது காவியமான படம் அல்ல ஆனால் படம் பார்க்க வருபவர்கள் நெளியாமல் மகிழ்ந்து சிரிக்கும்படியான படமாக இருக்கும் என்றார் அமீர்.
பேரன்பு கொண்ட பெரியோர்களே என தொடங்கப்பட்ட படம் அப்போது படத்தின் இயக்குநர் துரை அதன் பின் நாற்காலி என பெயர் மாற்றம் இறுதியாக திரைக்கதைக்கும், நடப்பு அரசியலுக்கும் பொருத்தமாக உயிர் தமிழுக்கு என பெயர் மாற்றம் கண்டு மே 10 அன்று திரையரங்குகளில் வெளியானது. பத்தாண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டு 50% படப்பிடிப்பு முடிந்த பின் நீண்ட கால காத்திருப்பில் படத்தின் பிற்பகுதி காட்சிகள் படமாக்கப்பட்டிருப்பதை கதாநாயகியின் உருவமாற்றம் உறுதி செய்கிறது. இருந்த போதிலும் திரைக்கதைக்கும், காட்சிகளுக்கும் பங்கம் இல்லாமல் படத்தை தொகுத்து திரைக்கு கொண்டு வந்ததே உயிர் தமிழுக்கு முதல் வெற்றி என்றே கூறலாம்.
படம் என்ன சொல்கிறது
கேபிள் டிவி தொழிலில் இருக்கும் நாயகன் அமீர், அரசியல்தலைவர் ஆனந்தராஜின் மகளான நாயகி சாந்தினி ஶ்ரீதரன் மீது காதல் கொள்கிறார். அதற்காக அரசியலில் நுழைகிறார். ஒருகட்டத்தில் ஆனந்தராஜ் கொலை செய்யப்பட அந்தப்பழி அமீர் மீது விழுகிறது.நாயகியும் அதை நம்புகிறார்.இந்தப் பழியிலிருந்து மீள அமீர் செய்யும் செயல்களும் அதன் விளைவுகளும்தான் படம். யோகி படத்தில் இறுக்கமாகவும், வட சென்னை படத்தில் தாதாவாகவும் நடித்த இயக்குநர்அமீருக்குள் இப்படி ஒரு கலகலப்பான நடிகர் இருக்கிறாரா? என்று அனைவரும் ஆச்சரியம்படும் வண்ணம் நடித்து இருக்கிறார் அமீர்.காதல் காட்சிகளிலும் மனிதர் அசத்தியிருக்கிறார். நடிகராகவே அமீர் திரைவாழ்கையை தொடரலாம்.நாயகியாக அறிமுகமாகியிருக்கும் சாந்தினி ஶ்ரீதரன், முதல்படத்திலேயே ஏராளமான ரசிகர்களைப் பெற்றுவிட்டார்.அந்த அளவுக்கு அவருடைய அழகும் பாத்திரத்தை உணர்ந்த நடிப்பும் அமைந்திருக்கிறது.ஆனந்த ராஜ், இமான் அண்ணாச்சி, ராஜ் கபூர், மாரிமுத்து, சரவண சக்தி, கஞ்சா கருப்பு ஆகிய அனைவருமே படம் போரடிக்காமல் நகரவும் சிரித்துக்கொண்டே இருக்கவும்பயன்பட்டிருக்கிறார்கள்.
வித்யாசாகர் இசையில் பாடல்கள் கேட்கும் இரகம், பின்னணி இசையிலும் தாழ்வில்லை.
தேவராஜின் ஒளிப்பதிவில் திரைக்கதையோட்டத்தின் பரிமாணங்கள் காட்சிகளாக விரிந்திருக்கின்றன.
இயக்குநர்கள் பாலமுரளிவர்மன், அஜயன்பாலா ஆகியோரின் வசனங்களில் சமகால அரசியல் காமெடியாக அல்லோல கல்லோலப் பட்டிருக்கிறது.
அதனால் படம் நெடுக சிரிப்பும் கும்மாளமுமாகப் போகிறது.
எழுதி இயக்கியிருக்கும் ஆதம்பாவா, அமீரை எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சிந்தித்தே காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்.
அப்படி, ஓவ்வொரு பூவாக எடுத்து அவர் கோர்ததவை
ஓர் அழகான மாலையாக அமீர் கழுத்தில் விழுந்திருக்கிறது.
– இராமானுஜம்