ஏஜெண்ட் கண்ணாயிரம் – விமர்சனம்

Labyrinth film productions நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் மனோஜ் பீதா இயக்கத்தில், நடிகர் சந்தானத்தின் மாறுபட்ட நடிப்பில் உருவாகியுள்ள படம்தான் இந்த ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’.நடிகர் சந்தானம் மற்றும் ரியா சுமன் இருவரும் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில், இவர்களுடன் ஸ்ருதி ஹரிஹரன், புகழ், முனிஷ்காந்த், E.ராமதாஸ், ‘அருவி’ மதன், ஆதிரா, இந்துமதி, ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர். குரு சோமசுந்தரம் ஒரு கௌரவ வேடத்தில் நடித்துள்ளார்.ஒளிப்பதிவு – தேனி ஈஸ்வர், சரவணன் ராமசாமி, படத் தொகுப்பு – அஜய், கலை இயக்கம் – ராஜேஷ், சண்டை பயிற்சி இயக்கம் – ஸ்டன்னர் சாம், நிர்வாகத் தயாரிப்பு – பிரசன்னா ஜே.கே., ஆடை வடிவமைப்பு – பல்லவி சிங், பத்திரிகை தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா, டி-ஒன்.தெலுங்குலகின் முன்னணி இயக்குநரான அனுதீப் இயக்கத்தில், நடிகர் நவீன் பொலிஷெட்டி நடிப்பில் வெளியாகி பிளாக் பாஸ்டர் வெற்றியைப் பெற்ற ‘ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா’ படத்தின் தமிழ் ரீமேக்குதான் இந்த ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’படம்.இறந்தவர்களின் உடலை காசியில் எரித்தால் அவர்களுக்கு அடுத்த பிறவி இருக்காது என்ற நம்பிக்கை இந்தியாவில் இந்து மதத்தில் பரவலாக உள்ளது.இதன் அடிப்படையில் இறந்து போனவர்களின் சடலங்களை வாங்கி காசிக்குக் கொண்டு சென்று எரிக்கிறோம் என்று பொய் சொல்லி ஏமாற்றும் ஒரு கும்பல் அந்தப் பிணங்களின் கை ரேகைகளை வைத்து மக்களை ஏமாற்றி எப்படி குற்றங்கள் செய்கிறார்கள் என்பதையும் அதனை தனியார் டிடெக்டிவ் ஏஜெண்ட்டான ஹீரோ எப்படி கண்டு பிடிக்கிறார் என்பதையும் சொல்வதுதான் இந்த ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ படத்தின் கதை.கோவை அருகில் இருக்கும் ஒரு கிராமத்தில் வசிக்கும் ஜமீன்தாரான குரு சோமசுந்தரத்திற்கும், இந்துமதிக்கும் பிறந்தவர் சந்தானம்.  ஆனால் குடும்பச் சூழல் காரணமாக இந்துமதியை ஜமீன்தார் திருமணம் செய்து கொள்ளாமல் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறார்.ஆனாலும் இந்துமதியையும், மகனையும் தன் வீட்டிலேயே வேலைக்காரி என்று பொய் சொல்லி தங்க வைத்திருக்கிறார் ஜமீன்தார். அந்த வீட்டில் இருப்பதினால் சந்தானமும், அவரது தாயும் ஜமீன்தாரின் மனைவியின் மூலமாக பல கஷ்டங்களை சந்தித்து வருகிறார்கள். ஜமீந்தாரின் முதல் மனைவியும், அவரது மகன்களும் இவர்களை அவமானப்படுத்தி கொண்டே இருக்கிறார்கள்.சிறு வயதில் இருந்தே, துப்பறிவதில் ஆர்வம் காட்டி வரும் சந்தானம், இளம் வாலிபனான பின்பு ஒரு துப்பறியும் ஏஜென்ஸியைத் துவக்கி நடத்தி வருகிறார். இந்த நேரத்தில் சந்தானத்திற்கு அதிர்ச்சியளிக்கும் தகவலாக அவருடைய அம்மாவின் மரண செய்தி வந்து சேர்கிறது.கோயம்புத்தூரில் உள்ள தனது சொந்த கிராமத்திற்கு புறப்படுகிறார் சந்தானம்.ஆனால், அதற்குள்ளாக அவரது தாயின் இறுதிச் சடங்கு நடைபெற்று முடிந்துவிடுகிறது இதனால், கடைசியாக ஒரு முறை தாயைப் பார்க்க  முடியவில்லையே என்று பெரிதும் வருத்தப்படுகிறார் சந்தானம். இந்த நிலையில் சொத்துக்களை பங்கு பிரிப்பதற்காக அதே ஊரில் சில நாட்கள் இருக்க வேண்டிய கட்டாயம் சந்தானத்திற்கு ஏற்படுகிறது. அந்த நேரத்தில் அந்த ஊரில் சில மர்ம மரணங்கள் நிகழ்கின்றன.தொடர்ச்சியாக ரயில் தண்டவாளத்தின் ஓரமாக அனாதை பிணங்கள் கிடக்கின்றன. நடந்த கொலையை தற்கொலை என்று போலீஸ் சொல்கிறது.நாயகி ரியா சுமன் ஆவணப் படம் எடுக்க சந்தானத்தின் கிராமத்திற்கு வருகிறார், அப்போது சந்தானத்துடன் நட்பு ஏற்பட, அனாதை பிணங்களின் பின்னணியை கண்டறிய சந்தானத்திற்கு உதவியாக இருக்கிறார்.நடக்கும் இறப்புகளின் பின்னணி என்ன..? நடப்பவையெல்லாம், கொலைகளா..? தற்கொலைகளா..? என்று கண்டறிய முயல்கிறார் சந்தானம். இதனால் போலீஸுக்கும் இவருக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. இதன் தொடர்ச்சியால் ஒரு கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் சந்தானம் பிடிக்கப்பட்டு லாக்கப்பில் வைக்கப்படுகிறார். அப்போது அந்த லாக்கப்பில் இருந்த முனீஸ்காந்தின் சோகக் கதையைக் கேட்டு சந்தானம் ‘ஏஜெண்ட் கண்ணாயிரமாக’ மாற கதை சூடு பிடிக்கிறது.சந்தானம் அவருக்கு உதவும் முயற்சியில் இறங்க. அதனால் திடுக் திருப்பங்கள் ஏற்படுகிறது. முனீஸ்காந்த் சொல்லும் கதை என்ன..? இறுதியில் சந்தானம் டிடெக்டிவாக தன் முயற்சியில் வெற்றி பெற்றாரா..? இல்லையா..? என்பதுதான் இந்த ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ படத்தின் திரைக்கதை.ஒரு மெடிக்கல் மாஃபியா கும்பலைக் கண்டறியும் துப்பறிவாளனாக சந்தானம் நடித்திருக்கிறார். சந்தானம் தன்னுடைய வழக்கமான பார்முலாவை விட்டுவிட்டு, சற்று சீரிஸான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தாயை இழந்து வாடும் மகனாக, சமுதாயத்தில் அந்தஸ்து பெற துடிக்கும் இளைஞனாக சந்தானம் வரும் எமோஷனல் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளது.தாய்க்கு இறுதி சடங்குகள் செய்ய முடியாத குற்ற உணர்ச்சியில் தூக்கமின்றி வாடும் காட்சிகள், நண்பர்களுடன் ஜாலியாக இருக்கும் காட்சிகள், டிடெக்டிவாக சிலவற்றை சந்தானம் கண்டு பிடிக்கும் காட்சிகள், ஆக்க்ஷன் காட்சிகள் என்று தனக்கான நடிப்பில் சிறிதளவு நியாயம் செய்திருக்கிறார் சந்தானம். சந்தானத்தின் அம்மாவாக நடித்துள்ள நடிகை இந்துமதி தான் யார் என்பதை சொல்ல முடியாமல் தவிக்கும் கட்டத்திலும், அப்பாவாக நடித்துள்ள குரு சோமசுந்தரம் இந்துமதியை தன் மனைவி என்று சொல்ல முடியாத பரிதவிப்பிலும் உண்மையாக நடித்துள்ளனர்.கதாநாயகியான ரியா சுமன் துணை நடிகை போலத்தான் இருக்கிறார். பார்த்தவுடன் கவர்ந்திழுக்கும் அழகில்லாமல் ஏனோ, தானோவென்ற அலங்காரத்தில் இவரை நடிக்க வைத்திருக்கிறார்கள்.மேலும் முனீஸ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, ராமதாஸ், ஆதிரா உள்ளிட்டோரின் நடிப்பும் ஓகேதான். இதில் முனிஷ்காந்த் லாக்கப்பில் அழுது கொண்டே தனது மகளைக் காணவில்லை என்று கதறும் காட்சியில் இயக்குநரைக் காப்பாற்றியிருக்கிறார்.தேனி ஈஸ்வர் மற்றும் சரவணனின் ஒளிப்பதிவில் குறையில்லைதான். ஆனால் சில காட்சிகளில் ஒளிப்பதிவு செல்வதும், வருவதுமாக இருப்பதும், அதிகப்படியான காட்சிகளை இருட்டிலேயே எடுத்திருப்பதும் படத்தின் மிகப் பெரிய பேக் டிராப் என்றே சொல்ல வேண்டும்.அஜய்யின் கத்திரிக்கோல் இன்னும் துல்லியமாக காட்சிகளை செதுக்கி கதையை புரியும் அளவுக்கு செய்திருக்கலாம். செய்யாதலால் படம் முடிந்து வரும்போது படத்தின் கதை என்று ரசிகர்களே கேட்கிறார்கள். யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசையும் தோராயமாக போட்டதுபோல இருக்கிறது.உடல் உறுப்பு திருட்டையும் தாண்டி, மருத்துவத் துறையில் நடக்கும் இன்னொரு குற்றம் பற்றியும் இந்தப் படம் பேசியுள்ளது.முதல் பாதியில் இருந்தே படம் விறுவிறுப்பாக தொடங்க, இரண்டாம் பாகத்திலும் விறுவிறுப்பு குறையாமல் கொண்டு செல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் மனோஜ்.படத்தில் வரும் சில திருப்பங்கள் யாருமே யூகிக்க முடியாத வண்ணம் அமைந்துள்ளது. ஆனால் அதை அழுத்தமாக நம் மனதில் பதிய வைக்க இயக்குநரால் முடியாமல் போய்விட்டது. படத்தின் நீளமும் ஒரு சின்ன குறைதான்.இயக்குநர் மனோஜ் பீதாவின் இயக்கம் நமக்குப் பெரும் ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது. திரைக்கதையில் விறுவிறுப்புக்கும் பஞ்சம். சுவாரஸ்யமும் இல்லை. அடுத்த நொடி என்ன நடக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த சஸ்பென்ஸ், திரில்லர் படமாக இந்த ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ அமையவில்லைடிடெக்டிவ் படங்களுக்கு உரிய விறுவிறுப்பும், சுவாரசியமும் படத்தில் இல்லை. படத்தின் காட்சி ஓட்டத்தையும், விறுவிறுப்பையும் கூட்டியிருந்தால் இயக்குநருக்கு பாராட்டுக்கள் கிடைத்திருக்கும்.பொதுவாக சந்தானம் படம் என்றாலே காமெடிக்கு பஞ்சம் இருக்காது. ஆனால் இதில் அதுவே இல்லை என்பதால் அவரது ரசிகர்களுக்குப் பெருத்த ஏமாற்றத்தைத் தந்துள்ளது.படத்தின் முதல் பாதியின் ஆமை வேகம் ரசிகர்களின் பொறுமையை சோதித்துவிட்டது என்றாலும் படம் இடைவேளையில் இருந்துதான் வேகம் பிடிக்கிறது. ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ படிப்படியாக  இந்தக் குற்றங்களை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பது இரண்டாம் பாதியில் விறுவிறுப்பாக சொல்லப்பட்டிருந்தாலும் கிளைமாக்ஸ் காட்சிகள் சற்றும் தெளிவில்லாமல் குழப்பமாய் முடிந்திருப்பது படத்தை மொத்தமாய் கவிழ்த்துவிட்டது.மூலப் படமான ‘ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா’ படத்தில் இருந்து ஏராளமான மாற்றங்களை செய்துதான் இந்தப் படத்தை எடுத்துள்ளனர். குறிப்பாக நாயகியின் கேரக்டர் ஸ்கெட்ச்சும், காட்சிகளும் தமிழில் பெரிதும் மாறியுள்ளது.தெலுங்கு ஒரிஜினல் படம் நல்ல நகைச்சுவை கலந்து கடைசிவரையிலவும் ஸவிறுவிறுப்பாக சென்றது. அதுவும் இடைவேளை நெருங்கும்போது நமக்கு திக் திக் உணர்வையே கொடுக்கும். ஆனால் இந்த ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ படத்தில் அது சுத்தமாக மிஸ் ஆகிவிட்டது. அம்மா செண்டிமெண்டை இதில் அதிகம் சேர்த்துள்ளனர். ஆனால், அதுவும் அவர்கள் நினைத்ததுக்கு மாறாக ரசிகர்களை சென்றடையவில்லை.‘ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா’ படத்தை திரைக்கதை மாறாமல் அப்படியே எடுத்திருந்தாலே தமிழில் நிச்சயமாக வெற்றியடைந்திருக்கும். ஆனால், ஒரு நல்ல படத்தை கையில் வைத்துக் கொண்டு, தமிழில் அதற்கான வெற்றி வாய்ப்பை மிக எளிதாகத் தவறவிட்டுவிட்டார்கள் என்றே தோன்றுகிறது.