ஐயர்கள் பிரியாணி கடை வைச்ச மாதிரியிருக்கு..” திண்டுக்கல் லியோனியின் கிண்டல்

ஜோசப் சேவியர் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘அற்றைத் திங்கள் அந்நிலவில்’.இந்தப் படத்தில் அறிமுக நடிகர்கள் நவீன், லாவண்யா, பிரேமா, அஷ்வினி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ஷைபு மேத்தீவ், மரியா லாரன்ஸ், பிரேம், ஆர்ஜே பரத், சைதன்யா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.எஸ்.எஸ்.ஜெயக்குமார் லாரன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார்.இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.இந்த விழாவில் தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் தலைவரான திண்டுக்கல் ஐ.லியோனி பேசுகையில், “இந்த ‘அற்றைத் திங்கள் அந்நிலவில்’ படத்தை என்னுடைய மாணவர் ஜெயக்குமார் லாரண்தான் படத்தை இயக்கியிருக்கிறார்.எனது மாணவரான ஜெயக்குமார் லாரன், இப்படி ஒரு இயக்குநராக இங்கு இருப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது. இந்தப் படத்தை சாதாரணமாக இவர்கள் எடுக்கவில்லை, பலவித யோசனைக்கு பிறகே எடுத்திருக்கிறார்கள்.அதாவது 5 ஐயர்கள் சேர்ந்து பிரியாணி கடை வைக்க வேண்டும் என்று பிளான் போட்டால் எப்படி இருக்குமோ, அதுபோலத்தான் இவர்கள் இந்தப் படத்தை எடுத்ததும். புகைபிடிக்கும் காட்சி, மது அருந்துவது, ஆபாச காட்சிகள் என்று எந்த ஒரு தவறான காட்சிகளும் படத்தில் இருக்க கூடாது என்பதில் மிக தெளிவாக இருந்திருக்கிறார்கள்.படம் என்றாலே ரத்தமும், சதையுமாக இருப்பதோடு, காதல் காட்சிகள் இல்லாமல் இருக்க முடியாது. ஆனால், இவர்கள் அதை மிக நாகரீகமாக கையாண்டிருக்கிறார்கள். ரத்தம், சண்டை காட்சிகள், பழைய பாணியிலான காதல் காட்சிகள் என்று பார்த்து பார்த்து புளித்துபோய் வெறுத்துபோன ரசிகர்களுக்கு இந்த ‘அற்றைத் திங்கள் அந்நிலவில்’ புதிய அனுபவத்தை கொடுப்பதோடு, ஒரு விருந்தாகவும் அமையும் என்பது என் நம்பிக்கை.இப்படியொரு ஒரு நல்ல படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பது மீடியாக்களின் கையில்தான் இருக்கிறது. காரணம், நல்ல பொருட்களை நாம்தான் கூவி கூவி விற்க வேண்டும். கீரை, வெண்டக்காய், கத்திரிக்காய் போன்றவற்ற தெருவில் கூவி கூவி விற்பார்கள். அவை அனைத்தும் உடலுக்கு நல்லதை கொடுக்க கூடியவை. அதை நாம் வாங்க அவங்ககிட்ட ஒரு மணி நேரம் பேரம் பேசுவோம்.ஆனால், விஸ்கி, பிராண்டி என்று யாராவது வண்டியில் வைத்து விற்கிறார்களா? ஆனால், அந்த கடை எங்கிருந்தாலும் தேடி சென்று வாங்குவார்கள். 10 மணிக்கு மூடி விடுவார்கள் என்று தலை தெறிக்க ஓடுவார்கள். அதனால், நல்ல பொருட்களை நாம்தான் மக்களிடம் கூவி கூவி விற்க வேண்டும். அது போன்ற ஒரு நல்ல திரைப்படமான ‘அற்றைத் திங்கள் அந்நிலவில்’ படத்தை நாம்தான் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.இந்தப் படத்தின் தலைப்பே அழகான இலக்கிய தலைப்பாக இருக்கிறது. பாரியின் மகள்கள் தனது தந்தையை நினைத்து பாடும் பாடல்தான் ‘அற்றைத் திங்கள் அந்நிலவில்’. அதை தலைப்பாக வைத்ததே இப்படத்தின் சிறப்பு. இதே வரிகளை, மக்களுக்கு புரியும்படி கவிஞர் கண்ணதாசன் ஒரு பாடலாக கொடுத்திருக்கிறார். பாடலின் முதல் வரியை தலைப்பாக வைத்த பெரும்பாலான படங்கள் வெற்றி பெறும். அதுபோல இந்த படமும் வெற்றி பெறும்.நடிப்பு என்பது சாதாரண விஷயம் அல்ல, அதை நான் அனுபவப்பூர்வமாக உணர்ந்திருக்கிறேன். ஒரு படத்தில் நான் நடிக்கும்போது ஒரே ஒரு எக்ஸ்பிரஷனுக்காக நான் பட்ட கஷ்டம் எனக்குத்தான் தெரியும். அப்போதுதான் புரிந்தது நடிப்பு என்பது சாதாரண விஷயம் இல்லை என்று..அத்தகைய நடிப்பை நடிகர்களிடம் இருந்து வாங்கும் இயக்குநர்களின் பணி சிறப்பு வாய்ந்தது. வாகனத்தை ஓட்டுபவர்களை ‘டிரைவர்’ என்கிறோம். விலங்குகளை பழக்குபவர்களை ‘டிரெயினர்’ என்கிறோம். மனிதர்களிடம் நடிப்பை வாங்குபவர்களைதான் ‘இயக்குநர்’ என்கிறோம். அதை மிக சிறப்பாக செய்திருக்கும் என் மாணவர் ஜெயக்குமார் லாரன், மிகப் பெரிய வெற்றியடைய வேண்டும்.ஒரு பயிற்சி நிறுவனம் திரைப்படம் எடுப்பது சாதாரண விஷயமில்லை. அதை இவர்கள் சிறப்பாக செய்து மாணவர்களுக்கு பெரிய அனுபவத்தை படிக்கும்போதே கொடுத்திருக்கிறார்கள். இவர்களுடைய இந்த முயற்சி தொடர வேண்டும். இந்த ‘அற்றைத் திங்கள் அந்நிலவில்’ படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற வேண்டும்..” என்று வாழ்த்தினார்.