ஓடாத படங்களுக்கு வெற்றி விழா கருடன் விழாவில் சசிக்குமார் ஆதங்கம்.

வார்க் ஸ்டுடியோநிறுவனத்தின் சார்பில்  கே. குமார் தயாரிப்பில், நடிகர் சூரி கதையின் நாயகனாக நடித்த படம் கருடன். மே 31ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியான  ‘கருடன்’. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றிபெற்று மூன்றாவது வாரமாக திரையரங்குகளில்  ஓடிக்கொண்டிருக்கிறது. ஓடாத படங்களுக்கே வெற்றி விழா கொண்டாடும் தமிழ் சினிமாவில் உண்மையிலேயே ஓடிய கருடன் படத்தின் வெற்றியை அறிவிக்கும் வகையில் நேற்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தது கருடன் படக்குழு.இந்த நிகழ்வில் படத்தின் தயாரிப்பாளர் கே. குமார், தமிழ்நாடு விநியோகஸ்தர்
ஃபைவ் ஸ்டார் செந்தில், விநியோகஸ்தர் சிதம்பரம், இயக்குநர் துரை. செந்தில்குமார், இயக்குநர் வெற்றிமாறன், இயக்குநரும், நடிகருமான சசிகுமார், கதையின் நாயகனான சூரி, ஒளிப்பதிவாளர் ஆர்தர் ஏ. வில்சன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டஇயக்குநரும் நடிகருமான சசிக்குமார்பேசுகையில்….

” தயாரிப்பாளர் குமார் முதலில் சக்சஸ் மீட் என்று சொன்னார். உடனே அவரிடம் சக்சஸ் மீட் என்று வேண்டாம். தேங்க்ஸ் கிவிங் மீட் என்று சொல்லுங்கள். அதனால் தற்போது நன்றி என்று மாற்றிவிட்டார்கள்.  ஏனெனில் தற்போதெல்லாம் ஓடாத திரைப்படங்களுக்கு தான் சக்சஸ் மீட் வைக்கிறார்கள் என்று ஒரு பேச்சு இருக்கிறது. அது ஏன்? என்றால் தோல்வி என்றாலே அனைவருக்கும் பயம்.‌ தோல்வியை யாரும் ஒப்புக் கொள்வதில்லை. ஆனால் என்னைப் பொறுத்தவரை தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும். அப்போதுதான்
அடுத்த திரைப்படத்தில் வெற்றி பெற முடியும். அதனால் ஒரு திரைப்படம் தோல்வி அடைந்தால்… அது தோல்வி அடைந்திருக்கிறது என்பதனை ஏற்றுக் கொள்ள வேண்டும். தோல்விக்கு நாம் ஒரு காரணத்தை தான்  சொல்வோம். ஆனால் வெற்றிக்கு பல காரணங்கள் உண்டு. இதனால் ஓடியது இவர்கள் நடித்ததால் தான் வெற்றி பெற்றது என்பார்கள்.  அதேபோல் கருடன் படத்தின் வெற்றிக்கு பல காரணங்களை சொன்னார்கள்.  சூரியினால்… சசிகுமாரால்… வில்லனால்.. இயக்குநரால்… என பல பல விசயங்களை குறிப்பிட்டார்கள்.  ஆனால் இந்தப் படத்தின் வெற்றிக்கு என்னை பொறுத்தவரை ஒரே ஒருத்தர் தான் காரணம்.  அது தயாரிப்பாளர் குமார் தான். ஏனெனில் இந்த திரைப்படத்தை வடிவமைத்ததே அவர் தான். என்னுடைய கதாபாத்திரத்திற்கும் நான் தான் பொருத்தமாக இருப்பேன் என்று தீர்மானித்தவரும் அவர்தான்.  இந்த கதாபாத்திரத்தை என்னிடம் விவரிக்கும் போது எனக்கு தெரியவில்லை.‌ இந்தப் படத்தின் கதையைக் கேட்டதிலிருந்து..
வெளியாகும் வரை இந்த படம் வெற்றி பெறும் என்று நம்பிக்கையுடன் இருந்தவர் தயாரிப்பாளர் குமார் மட்டும் தான். மற்ற அனைவரும் நான் உட்பட படம் வெளியான பிறகு தான் தெரியும் என்று இருந்தோம். பட வெளியீட்டிற்கு முன்னரே இந்த திரைப்படத்தை டிஜிட்டல் தளங்களில் விற்பனை செய்ய முடியவில்லை என்ற நிலை இருந்தது.‌ ஆனால் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் இந்த படம் நிச்சயமாக வெற்றி பெறும் என்று நம்பியவர் தயாரிப்பாளர் தான்.‌ ஓ டி டி விற்பனை ஆகவில்லை என்றாலும் ரிஸ்க் எடுத்து படத்தை வெளியிட்டார்.‌
ஒரு திரைப்படத்தை ரசிகர்கள் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ரசிப்பார்கள் என்ற நம்பிக்கையை இந்த ‘கருடன்’ ஏற்படுத்தி இருக்கிறது.‌ கருடன் படம் மூன்றாவது வாரமாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. குடும்பம் குடும்பமாக ரசிகர்கள் வருகை தருகிறார்கள். எனக்கு இது மகிழ்ச்சியை தருகிறது.‌இந்தத் திரைப்படத்தில் சூரிக்காக நடிக்க வந்தேன். அது எனக்கு நல்ல விதமாக அமைந்து விட்டது. நான் ஒரு நல்ல விசயத்தை நினைத்தேன். அது எனக்கு மிகப்பெரிய நல்ல விசயமாக மாறிவிட்டது. இனிமேல் சூரியை யாரும் பரோட்டா சூரி என்று சொல்ல முடியாது. ஏனென்றால் அதையெல்லாம் தன்னுடைய சிறந்த நடிப்பால் அழித்துவிட்டார். இனி அவர் கதையின் நாயகனாகத்தான் இருப்பார். கதையின் நாயகனாக இருக்கும் வரை அவர் தொடர்ந்து வெற்றிகளைப் பெறுவார். அவர் கதாநாயகனாக மாறும்போதுதான் சற்று கடினமாக இருக்கும். ஆனால் மிகவும் அர்ப்பணிப்புடன் உழைத்த சூரியை எனக்கு மிகவும் பிடிக்கும்.  அவருடைய வெற்றியை.. நான் வெற்றி பெற்றது போல் மகிழ்ச்சி அடைகிறேன். படத்தின் வெற்றியை காண்பதற்காக திரையரங்குகளுக்கு வாருங்கள் என அழைப்பு விடுத்தார். அவரிடம் இந்த வெற்றியை நீ தான் அனுபவிக்க வேண்டும் என்று சொல்லி அனுப்பினேன்.  ஒவ்வொரு திரையரங்கத்திலும் ரசிகர்கள் தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள். ரசிகர்கள் தூக்கி வைத்துக் கொண்டாடும்போது நமக்குள் ஒரு பயம் ஏற்படும். அவர்கள் நம்பிக்கை கொடுக்கும் போது நமக்குள் ஒரு பொறுப்புணர்வு உண்டாகும். அந்தப் பொறுப்பை காப்பாற்ற வேண்டும் என்ற பயம் வரும். அந்த பயம் தான் நம்மை பல வருடம் தொடர்ந்து கடுமையாக உழைக்கத் தூண்டும். அதனால் சூரி வெற்றி பெற்றது நாம் அனைவரும் வெற்றி பெற்றது போலத்தான். சூரியின் வெற்றியில் நாம் அனைவரும் மகிழ்ச்சி அடைகிறோம்.
இயக்குநர் துரை. செந்தில்குமாரிடமிருந்து நான் நிறைய விசயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன்.‌ எப்படி படப்பிடிப்பு தளத்தில் நட்சத்திர நடிகர்களை பொறுமையாகவும் சிரித்துக் கொண்டே கையாள்வது என்ற உத்தியை அவரிடம் இருந்து கற்றுக் கொண்டிருக்கிறேன்.  படப்பிடிப்பு தளத்தில் சில மாற்றங்களை செய்து கொள்ளலாமா? என கேட்டபோது அதனை உள்வாங்கிக் கொண்டு உடனடியாக ஏற்றுக்கொண்டு எங்களுக்கு சுதந்திரம் வழங்கினார்.  அவரும் இந்த படத்தின் வெற்றிக்கு முக்கியமான காரணம். ” என்றார்.