கஸ்டடி – சினிமாவிமர்சனம்

இந்தப் படத்தை ஸ்ரீனிவாச சில்வர் ஸ்கிரீன் பேனரின் கீழ் தயாரிப்பாளர் ஸ்ரீனிவாச சித்தூரி தயாரித்துள்ளார்.ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு 2 மொழிகளிலும் இந்தப் படம் தயாராகியுள்ளது.படத்தில் நாக சைதன்யா, கீர்த்தி ஷெட்டி, சரத்குமார், அரவிந்த்சாமி, பிரியாமணி, பிரேம்ஜி அமரன், சம்பத்ராஜ், வெண்ணிலா கிஷோர், பிரேமி விஸ்வநாத் மற்றும் பலர் நடித்துள்ளனர்.ஒளிப்பதிவு – எஸ்.ஆர்.கதிர், தயாரிப்பு வடிவமைப்பு – ராஜீவன், படத் தொகுப்பு  – வெங்கட்ராஜன், கலை இயக்கம் – சத்ய நாராயணா, தமிழ் வசனம் – வெங்கட் பிரபு, சண்டை இயக்கம் – ஸ்டன் சிவா, மகேஷ் மாத்யூ, ஒலிப்பதிவு – கண்ணன் கன்பத், உடைகள் வடிவமைப்பு – பல்லவி சிங், புகைப்படங்கள் – சுதர்சன், பத்திரிகை தொடர்பு – வம்சி சேகர், சுரேஷ் சந்திரா டி ஒன்.மாஸ்ட்ரோ இளையராஜா மற்றும் லிட்டில் மாஸ்ட்ரோ யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைக்க, பவன் குமார் வெங்கட் பிரபு எழுதி, இயக்கியிருக்கிறார்.‘நீ இந்த உலகத்தை எப்படி பார்க்க விரும்புகிறாயோ, அதற்கான முதல் மாற்றமாக நீயே இருக்க வேண்டும்’ என்ற மகாத்மா காந்தியின் புகழ் பெற்ற மேற்கோள்தான் இந்தப் படத்தின் கதைக் கரு.ஒரு ஆம்புலன்ஸ் வேனுக்காக முதல்வரின் காரையே தடுத்து நிறுத்தும் அளவுக்கு கடமை தவறாத போலீஸ்காரர் ‘சிவா’ என்ற நாக சைதன்யா. தனது காதலியான ‘ரேவதி’ என்ற கீர்த்தி ஷெட்டியை உடனடியாக கடத்திச் சென்றாவது திருமணம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.இந்த நேரத்தில் அன்றைய இரவு டூட்டியை நாக சைதன்யா பார்க்க வேண்டியிருக்கிறது. ஹெட் கான்ஸ்டபிளோடு நைட் ரவுண்ட்ஸ் செல்கிறார் சிவா. அந்த நேரத்தில் ஒரு கார் வந்து அவர்கள் மீது மோதுகிறது. மேலும் காரில் இருந்து இறங்கிய 2 ஆண்கள் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொள்கிறார்கள். துப்பாக்கி சண்டையும் நடக்கிறது.இதையடுத்து அவர்கள் இருவரையும் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து லாக்கப்பில் அடைக்கிறார்கள் சிவாவும், ஹெட் கான்ஸ்டபிளும். தொடர்ந்த விசாரணையில் சிக்கிய 2 ஆண்களில் ஒருவர் சி.பி.ஐ. அதிகாரி என்றும், இன்னொரு ஆள் சிபிஐயால் தேடப்பட்டு வந்த மிகப் பெரிய கொலைகாரன், ரவுடி.. ஆளும் கட்சியின் ஆதரவு பெற்ற கிரிமினலான ராஜூ என்பது சிவாவுக்குத் தெரிய வருகிறது.ராஜூவை கைது செய்து நாளை காலை பெங்களூர் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றுதான் திட்டமிட்டு சி.பி.ஐ. அதிகாரிகள் அந்த ராஜூ என்ற அரவிந்த்சாமியைப் பிடித்திருக்கிறார்கள்.அதே சமயம் அரவிந்த்சாமி சிபிஐ பிடிக்குள் போனால் அவர் செய்த அனைத்துக் குற்றச் செயல்களும் வெளிச்சத்துக்கு வரும். இதனால் தற்போதைய முதல்வரான ‘தாட்சாயிணி’ என்ற பிரியாமணியின் பதவிக்கு ஆபத்து வரும் சூழல்..! இதனால் ராஜூவை, ஸ்டேஷனிலேயே தீர்த்துக் கட்ட முதல்வர் பிரியாமணி உத்தரவிடுகிறார்.இதனால் மாவட்ட போலீஸ் சூப்பிரடெண்ட் தலைமையில் ஒரு போலீஸ் டீமே ஸ்டேஷனுக்கு வருகிறது. இந்த இடைவெளியில் தன்னுடைய சொந்த அண்ணன் இறந்துபோன வெடி விபத்து, திட்டமிட்ட சதியென்றும், அதை செய்தது ராஜூதான் என்றும் சி.பி.ஐ. அதிகாரியான சம்பத் ராஜ் சொல்லும்போது தெரிந்து அதிர்ச்சியாகிறார் கான்ஸ்டபிள் சிவா.ஸ்டேஷனுக்கு வந்த போலீஸ் டீம் சிவா முதற்கொண்டு இருப்பவர்களை வெளியில் அனுப்பிவிட்டு ராஜூவை கொல்ல முயற்சிக்கிறது. இதையறியும் சிவா இடையில் புகுந்து ஆட்டத்தைக் கலைத்து ராஜூவை அங்கேயிருந்து கடத்திச் செல்கிறார்.மாநிலத்தின் போலீஸ் உயரதிகாரியான சரத்குமார் உடனேயே ஸ்பாட்டுக்கு வர.. ஒட்டு மொத்த போலீஸும் சிவாவையும், ராஜூவையும் விரட்டுகிறது. அவர்களும் தப்பியோடிக் கொண்டேயிருக்க.. நடுவழியில் பலவித மோதல்களுடன், துரத்தல்களும் தொடர்கிறது.இறுதியில் ராஜூவை, சிவா கோர்ட்டில் ஒப்படைத்தாரா..? இல்லையா..? என்பதுதான் இந்த ‘கஸ்டடி’ படத்தின் கதை.நாக சைதன்யாவுக்கு இது முதல் தமிழ்ப் படம். அவர் பேசும் தமிழில், தெலுங்கும் கலந்திருக்கிறது. போலீஸ் கான்ஸ்டபிள் வேடத்திற்குப் பொருத்தமானவர் என்றாலும் அரவிந்த்சாமி, சரத்குமார் போன்ற மிகப் பெரிய நடிகர்களை சமாளிக்கும் நாயகனாக அவரை பார்க்க முடியவில்லை. இதனாலேயே அவரது நாயக பிம்பம் திரையில் நம்மை வசீகரிக்கவில்லை.காதல் காட்சிகளில் மட்டுமே நடித்திருக்கிறார். அவருடைய அண்ணனின் இறப்பு சம்பவத்தின்போதுகூட பார்வையாளர்களுக்கு பீல் வரும்படியாக நடிக்கவில்லை. சண்டை காட்சிகளில் தொழில் நுட்பத்தின் உதவியால் தப்பித்திருக்கிறார். தேடுதல் வேட்டை கொண்ட படம் என்பதால் திரைக்கதையின் ஓட்டத்தில் ஓடிக் கொண்டேயிருந்ததால் இவருடைய நடிப்பு நமக்குத் தேவையானதாக இல்லை.கீர்த்தி ஷெட்டி அழகாக இருக்கிறார். தன்னுடைய கேரக்டருக்கேற்ற நடிப்பை நடித்திருக்கிறார். கடைசிவரையிலும் இவரையும் உடன் வைத்திருக்கும்படி திரைக்கதை அமைத்திருந்ததால் படம் பார்க்கும் ரசிகர்களும் தப்பித்தார்கள்.படத்தின் பூஸ்ட்டே வில்லனான அரவிந்த்சாமிதான். மனிதர் அசத்தியிருக்கிறார். நக்கலும், நையாண்டியாக படம் நெடுகிலும் அவர் பேசும் வசனங்கள் பலவும் கை தட்ட வைத்திருக்கிறது.அதிலும் “என்னய்யா எல்லாரும் நல்லவங்களா இருக்கீங்க.. பேட் வைப்ரேஷன்” என்று சொல்லும்போதும், தனது முதல் காதலியாக பிரியாமணியை சொல்லும்போதும் தியேட்டர் அதிர்கிறது. இது போதாதென்று “பிரதர்”, “தம்பி” என்று சைதன்யாவை அழைக்கும்போதும், “தங்கச்சி” என்று கீர்த்தி ஷெட்டியிடம் பாசம் காட்டும்போது நெகிழ்ச்சிக்குப் பதில் சிரிப்புதான் பொங்கி வருகிறது.எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சரத்குமாரும் கவுரவத் தோற்றத்தில் நடித்திருக்கும் ராம்கியும் கவனம் ஈர்த்துள்ளனர். அதிலும் விக்ரம் பட பாணியில் கடைசியில் மெஷின் கன்னோடு அப்பியராகும் ராம்கியை பார்த்தால் சிரிப்புதான் வருகிறது.மேலும் சி.பி.ஐ. அதிகாரிகளான சம்பத், ஜெயப்பிரகாஷ் இருவரும் குறை சொல்ல முடியாத நடிப்பைத் தந்துள்ளனர். சைதன்யாவுக்கு அப்பாவாக நடித்தவர் கொஞ்சம் கவனம் ஈர்க்கிறார்.சைதன்யாவின் அண்ணாக சில நிமிடங்களே முகத்தைக் காட்டிவிட்டு பரிதாபமாக உயிரை விடுகிறார் நடிகர் ஜீவா. பிரேம்ஜி வழக்கமாக ஒதுக்கப்படும் ஏமாளி மாப்பிள்ளையாக முகத்தைக் காட்டியிருக்கிறார். சில, சில புன்னகையை மட்டுமே இவரால் உதிர்க்க முடிந்திருக்கிறது.எஸ்.ஆர்.கதிரின் ஒளிப்பதிவு காவல் நிலைய சண்டை காட்சிகளிலும், சேஸிங் காட்சிகளிலும் ஆற்றுக்குள் சிக்கி சண்டையிடும் காட்சிகளிலும் பிரமாதம் என்று சொல்ல வைத்திருக்கிறது. அதோடு, இதற்காக சண்டை பயிற்சி இயக்குநருக்கும் ஒரு மிகப் பெரிய பாராட்டை தர வேண்டும்.இளையராஜா – யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் மனதில் ஒட்டாமல் போனது ஏன் என்று தெரியவில்லை. இது போன்ற கமர்ஷியல் படங்களில் அடையாளம் சொல்லும் அளவுக்கு ஒரு அயிட்டம் டான்ஸாவது இருக்கும். இதில் அதுவும் மிஸ்ஸிங். பின்னணி இசை மாஸ் காட்சிகளுக்கும், சேஸிங் காட்சிகளுக்கும் மட்டும் தெரிக்க வைத்திருக்கிறது.வெங்கட் ராஜனின் படத் தொகுப்பில் சண்டை காட்சிகளும், ஆற்றில் நடைபெறும் காட்சிகளும் கச்சிதமாக அமைந்துள்ளன.  படத்தின் கதைக் களம் 1990-களில் நடக்கிறது. ஆந்திராவிலேயே நடப்பதுபோல் முழுக் கதையையும் அமைத்திருக்கிறார் வெங்கட் பிரபு.மாநிலத்தை ஆளும் மாநில கட்சிக்கும், மத்தியில் ஆளும் தேசியக் கட்சிக்குமான மோதலில் சி.பி.ஐ. களத்தில் இறக்கி தற்போதைய முதல்வரை கைது செய்து சிறையில் வைக்க மத்திய அரசு திட்டமிடுகிறது. இதன் ஒரு பகுதிதான் இந்தக் கதை என்பதாக வெங்கட் பிரபு இதை எழுதி, இயக்கியிருக்கிறார்.படத்தின் முதல் அரைமணி நேரம் மிகப் பெரிய சோதனைதான். அரவிந்த்சாமி வந்த பின்புதான் படமே வேகம் எடுக்கிறது. அதன் பிறகு கடைசிவரையிலும் செம ஸ்பீடாக போய் முடிகிறது.மாநில காவல் துறைக்கும், மத்திய சி.பி.ஐ.க்கும் இடையில் நடக்கும் அதிகார மோதல்.. தன் அண்ணனின் சாவுக்காக குற்றவாளியை பாதுகாக்கப் போராடும் கடை நிலைக் காவலன், அதே நேரம் திருமணம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் நாயகி, நாயகிக்காகக் காத்திருக்கும் ஒரு லூஸூ மாப்பிள்ளை.. இவர்களுடனான சில நகைச்சுவை சலம்பல்கள் என்று அனைத்தையும் கலந்து கட்டி கொடுத்திருக்கிறார் இயக்குநர் வெங்கட் பிரபு.அதோடு இந்தப் பெண் முதல்வர் கதாப்பாத்திரத்தை பார்க்கும்போது ஜெயலலிதாவை நினைக்காமல் இருக்க முடியவில்லை. மிகப் பெரிய ஊழல்வாதி, அராஜகம் செய்பவர், கொலை, கொள்ளைகளையெல்லாம் செய்தவர் என்ற டிராஜிடி லிஸ்ட்டையெல்லாம் பார்த்தால் ஜெயலலிதாவைத்தான் மறைமுகமாக சாடுகிறாரோ வெங்கட் பிரபு என்று சந்தேகிக்க வைக்கிறது.ஏனெனில் வெங்கட் பிரபுவின் குடும்பத்திற்குச் சொந்தமான பையனூரில் இருக்கும் பங்களாவை ஜெயலலிதாவும், சசிகலாவும் சேர்ந்து மிரட்டி எழுதி வாங்கிக் கொண்ட கதையெல்லாம் ஊரறிந்த விஷயம். இதற்குத்தான் இப்போது பழி வாங்கியிருக்கிறாரோ.. தெரியவில்லை..!?படத்தில் அடுத்தடுத்து நடப்பவைகள் அனைத்தும் நாம் யூகிக்க முடியும்படி அமைந்திருப்பதுதான் படத்தின் மிகப் பெரிய பலவீனம். திரைக்கதையை இன்னும் சுவாரஸ்யமாக அமைத்திருந்தால் இந்த ‘கஸ்டடி’ சுவையாக இருந்திருக்கும்.