காடுகளை காக்கும் காடன்

பிரபு சாலமன் இயக்கத்தில் ராணா, விஷ்ணு விஷால் முதன்மை வேடங்களில் நடித்துள்ள காடன் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

கும்கி திரைப்படம் போன்றே, யானைகளையும் காட்டின் முக்கியத்துவத்தையும் மையமாகக் கொண்டு இந்தத் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்தத் திரைப்படம் மாறுபட்ட கோணத்தில் வனங்களின் பிரச்னைகளை அணுகவுள்ளது. இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஈராஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில்
ஏப்ரல் 2-ம் தேதி வெளியாகவுள்ளது.

படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் விஷ்ணு விஷால் பேசும்போது “படப்பிடிப்பின்போது எனக்கு உடலில் ஒரு முறை அடிபட்டது. அதுதான் எனது உடலுக்கும் மனதுக்கும் பெரும் மாற்றத்தைக் கொடுத்தது.

மூன்றுமொழிகளில் காடன் திரைப்படம் வெளியாகவுள்ளது. பிரபு சாலமன் தனி நபராக இருந்து இந்தப் படத்திற்காக உழைத்துள்ளார். காடு, இயற்கை என்றாலே எனக்கு பயம்.
படப்பிடிப்பில் யானையுடன் நடக்கும்போது பயமாக இருந்தது. ஆனால் அதே யானையைப் பிரியும்போது மிகவும் வருத்தமாகவும் இருந்தது. அன்புக்கு உலகில் மொழியில்லை. இயற்கையான படைப்பு இது. ஒவ்வொரு படத்திற்குப் பின்னாலும் ஒரு காரணம் இருக்கும்.
இந்தப்படம் உலக சினிமாவின் அரங்கில் சென்று சேர வேண்டும். அமேசான் காட்டுத் தீ, ஆஸ்திரேலிய தீ, வானிலை மாற்றம் என்று பல செய்திகளை சில நாளுக்கு முன்னர் நாம் பார்த்திருப்போம்.

இந்தப் படத்தில் ராணா மிகத் தீவிரமாக உழைத்துள்ளார். பாகுபலி முடியும்போது கடினமாக உழைத்ததாகக் கூறிய ராணா, காடன் படம் 10 பாகுபலி படத்தில் நடித்ததைப் போன்று இருந்ததாக என்னிடம் கூறினார். யானை மீது ஏறும் காட்சிக்காக 30 டேக் தேவைப்பட்டது. யானைதான் இந்தப் படத்தின் கதாநாயகன்” என்று கூறினார்.