ஆண் – பெண் இடையில் உருவாவது மட்டும்தான் காதல் என்கிற பொதுப்புத்திக்கு அமைதியாகச் சில அறிவியல் உண்மைகளைப் எடுத்துச் சொல்கிறது படம். மாற்றுப் பாலினத்தவர், பால் புதுமையினர் ஆகியோர் எதிர்கொண்டுவரும் சமூக ஏற்புச் சிக்கல்களைத் திறந்த உரையாடலுக்கு உட்படுத்தியிருக்கிறார் இயக்குநர்
லட்சுமிக்கும் வீட்டுப் பணிப்பெண்ணான மேரிக்கும் (தீபா) இடையிலான தோழமையும் சகோதர உணர்வும் அக்கதாபாத்திரம் முக்கியப் பிரச்சினையில் ஊடாடும் விதமும் திரைக்கதையில் அழுத்தமாகப் பதிந்துள்ளன. மேரி திரும்பக் கொடுக்கும் 500 ரூபாய் விலைமதிப்பற்றது,
சமூகத்தின் பொதுப்புத்தியில்வார்க்கப்பட்ட பெற்றோர்கள், தன் பாலினக் காதலை ஏற்பதின் பின்னாலுள்ள மனச் சிக்கல்களை அவர்களின் பக்கம் நின்று உரையாடியிருப்பதிலும் படம் நேர்கோட்டில் பயணிக்கிறது.
லட்சுமியாக ரோகினி, ஷாம் ஆக லிஜோ மோள், அவரது காதலியாக வரும் அனுஷா பிரபு, ஷாமின் தந்தையாக வரும் வினித், ரவீந்த்ராவாக வரும் இளைஞர் என அனைவரும் கதாபாத்திரங்களாக வாழ்ந்திருக்கிறார்கள். தன்பாலினக் காதலில் இருக்கும் நியாயங்களைக் கவித்துவமான காதல் காட்சிகளுடன் பேசியிருக்கும் இப்படம் பொது சமூகத்தில் தன்பாலின ஈர்ப்பின் நியாயத்தை உரக்க சொல்கிறது.