கார்த்தி நடிப்பில் ராஜு முருகன் இயக்கியுள்ள திரைப்படம், ‘ஜப்பான்’. தீபாவளியன்று வெளியாகும் இந்தப் படத்தில் அனு இம்மானுவேல் நாயகியாக நடிக்கிறார். கே.எஸ்.ரவிகுமார், இளவரசு, சுனில், விஜய் மில்டன் உட்பட பலர் நடித்துள்ளனர் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. தணிக்கை குழு இந்தப் படத்துக்கு UA சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்நிலையில் படம் பற்றி இயக்குநர் ராஜு முருகன் கூறியதாவது:
நான் இயக்கிய ‘ஜோக்கர்’ படத்தின் ஆரம்ப வெர்ஷனை முதலில் நடிகர் கார்த்தியிடம் தான் சொன்னேன். அப்போது அவரால் அதில் நடிக்க முடியவில்லை. பிறகு சந்திக்கும்போதெல்லாம், ‘எனக்கு ஒரு கதை பண்ணுங்க’ என்று சொல்லிக்கொண்டிருப்பார். நான் அவருக்காக ஒரு கதை எழுதினேன். அவர் படித்துவிட்டு கொஞ்சம் ஜாலியான கதையாக, பெரிய படமாக பண்ணலாமே என்றார். பிறகு உருவானதுதான் ஜப்பான். இது கமர்ஷியல் என்டர்டெயினர் படம். அதற்குள் புதிதாக சில விஷயங்களைச் சொல்கிறோம். இதில் கார்த்தி, திருடனாக நடிக்கிறார். ஆனால், முன்னோட்டத்தை பார்த்துவிட்டு இதன் கதையை கணித்துவிட முடியாது. நான் பார்த்த விஷயங்களின் தொகுப்புதான் இந்தத்திரைப்படம். நடிகர் கார்த்தியிடம் இருந்து, தனிப்பட்ட முறையில் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன்.
இவ்வாறு ராஜு முருகன் கூறினார்.