காலங்களில் அவள் வசந்தம் – விமர்சனம்

காதல் படங்கள் பலவிதம். ஒவ்வொன்றும் ஒரு விதம். காலங்களில் அவள் வசந்தம் எவ்விதம்?வருடத்துக்கு ஒரு பெண்னைக் காதலித்துக் கொண்டிருக்கும் நாயகனுக்கு ஒரு சுபயோக சுபதினத்தில் கல்யாணம் ஆகிவிடுகிறது. கல்யாணத்துக்குப் பிறகு மனைவியைத் தீவிரமாகக் காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் உன்னுடையது காதலே இல்லை என்று மனைவி சொல்கிறார்.அதிர்ந்து போகும் அவர், அதற்குப் பின் என்ன முடிவெடுக்கிறார்? இறுதியில் என்னவாகிறது? என்பதைச் சொல்லியிருக்கும் படம் காலங்களில் அவள் வசந்தம்.நாயகன் கெள்ஷிக்ராம் புதுவரவு. காதல், ஆட்டம், பாட்டம் ,சோகம் ஆகிய அனைத்திலும் தேர்கிறார்.இவரை நம்பி நல்ல கதைகளில் நடிக்கவைக்கலாம்.நாயகி அஞ்சலிநாயர். படத்தை இளைஞர்கள் இரசித்துப் பார்க்க இவரே காரணமாகிறார். அமைதியான அழகில் ஈர்ப்பதோடு, கணவனின் அன்புக்கு ஏங்கும் காட்சிகளில் கலங்க வைக்கிறார்.இன்னொரு நாயகி ஹொரோசினி அப்பாவியான அழகி. அதற்கேற்ப நடித்து காட்சிகளுக்குப் பலம் சேர்க்கிறார். நாயகன் கூட இருப்பது மனைவி எனத் தெரியாமல் அவர் பாட்டுக்குப் பேசிக்கொண்டே போகும் காட்சி  காமெடி சரவெடி.விக்னேஷ்காந்த், அனிதா சம்பத், சுவாமிநாதன் ஆகியோர் அங்கங்கே சிரிக்க வைப்பதோடு நில்லாமல் அறிவுரைகளை அள்ளி வீசிக் கொண்டேயிருக்கிறார்கள்.கோபிஜெகதீசுவரன் ஒளிப்பதிவு சிறப்பு. ஒவ்வொரு காட்சியிலும் அழகியலும் மாறுபட்ட கோணமும் இருக்கவேண்டும் என மெனக்கெட்டிருக்கிறார். ஹரியின் இசையில் ஹே பப்பாளி உள்ளிட்ட பாடல்கள் கேட்கும் இரகம். பின்னணி இசையிலும் காதல் வழிகிறது.லியோஜான்பாலின் படத்தொகுப்பு படத்தின் சுவாரசியத்தைக் கூட்டியிருக்கிறது.இயக்குநர் ராகவ் மிர்தாத், காதலுக்குப் புதிய விளக்கவுரை எழுதும் முயற்சியில் இறங்கி இக்கதையை எழுதியிருக்கிறார். காட்சிகளில் இரசனையும் கருத்துகளில் புதுமையும் வேண்டும் என்று நினைத்திருக்கிறார். படம் நெடுகப் பயணிக்கும் பட்டாம்பூச்சி இயக்குநரின் கற்பனைத் திறனுக்குச் சான்று.கன்னடர்களுக்குத் தமிழ் மீதும் தமிழர்கள் மீதும் இருக்கும் வெறுப்பைக் காட்டிக் கவனம் ஈர்க்கிறார். அதேசமயம் அதை வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இறுதிக்காட்சி பலவீனம்.நகைச்சுவைக் காட்சிகளை விட அங்குதான் அதிகம் சிரிக்கிறார்கள். நீ நீயாக இரு என்கிற சிந்தனை படத்துக்குப் பலம். அதற்கு நாயகன் கெளசிக்ராம் நாயகிகள் அஞ்சலிநாயர், ஹொரோஷினி ஆகியோர் உயிர்கொடுத்திருக்கிறார்கள்.