தூத்துக்குடி மீனவ கிராமத்தைச் சேர்ந்தோர் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல முடிவதில்லை.காரணம் அங்கொரு ஆன்மா மீன்பிடிக்க வருகிறவர்களைக் கொன்றுவிடுகிறது.இதனால் பல்லாண்டுகளாக அக்கிராம இளைஞர்கள் சரியான வேலை வாய்ப்பின்றித் தவிக்கிறார்கள்.அதனால் அவர்கள் குடும்பமும் தவித்துப் போகின்றன.
என்னதான் நடக்கும்? நடக்கட்டுமே? என நாயகன் ஜீ.வி.பிரகாஷ் அச்சிக்கலைத் தீர்க்கும் துணிச்சலுடன் கடலுக்குச் செல்கிறார்.சென்றவர் என்னவானார்? என்பதைச் சொல்லியிருக்கும் படம்தான் கிங்ஸ்டன்.
மீனவ இளைஞன் வேடத்துக்குத் தக்க தன்னைத் தகவமைத்துக் கொண்டிருக்கிறார் ஜீ.வி.பிரகாஷ்.தோற்றத்தில் மட்டுமின்றி நடிப்பிலும் மீனவ இளைஞனாகவே மாறியிருக்கிறார்.காதல் காட்சிகள் ஆக்சன் காட்சிகள் ஆகிய அனைத்திலும் தேர்ச்சி மதிப்பெண் பெற்றிருக்கிறார்.
நாயகி திவ்யாபாரதிக்குத் திரைக்கதையில் பெரிய வேலையில்லை என்றாலும் கிடைத்திருக்கிற வாய்ப்பில் தன் இருப்பை அழுத்தமாக செய்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் கோகுல் பினாய் கடல் காட்சிகளை பிரமாண்டமாகக் காட்ட வேண்டும் என பெரிதும் மெனக்கெட்டிருக்கிறார்.
படத்தொகுப்பாளர் சான் லோகேஷுக்கு வழக்கத்தைக் காட்டிலும் அதிக உழைப்பைக் கோருகிற கதைக்களம்.அவரும் முடிந்தவரை படத்தை சுவாரசியமாக்க முயன்றிருக்கிறார்.
கமல் பிரகாஷ் எழுதி இயக்கியிருக்கிறார்.கடலுக்குள் நடக்கும் திகில் கதைக்குத் தேவையான அம்சங்களைச் சரியாகத் திட்டமிட்டிருக்கிறார்.ஆனால் அவற்றைச் செயலாக்குவதில் சில பல நிறைகுறைகள் கலந்திருக்கின்றன.வித்தியாசமான காட்சியனுபவத்தைக் கொடுக்கவேண்டும் என்கிற அவருடைய முயற்சி முழுமையவில்லை.