கிளாஸ்மேட்ஸ் – திரைப்பட விமர்சனம்

மதுபானக் கடைகள் நிறைந்திருக்கும் நாட்டில் அதற்கு எதிரான குரல்களும் ஒலிக்கத்தான் செய்யும். தமிழ்த் திரையுலகிலும் அவ்வப்போது மதுப்பழக்கத்துக்கு எதிரான திரைப்படங்களும் வந்துகொண்டிருக்கின்றன. 

அந்த வரிசையில் வந்திருக்கும் படம் கிளாஸ்மேட்ஸ்.

நாயகன் அங்கயற்கண்ணன், அவருடைய மாமா சரவணசக்தி ஆகிய இருவரும்

மொடாக்குடியர்கள்.
வீடு, தொழில் ஆகியன பற்றி எந்தக் கவலையுமின்றி குடிப்பது மட்டுமே இலக்கு என்று வாழ்கிறார்கள்.அவர்கள் வாழ்க்கையில் குடியால் ஒரு திடீர் சிக்கல்.அது என்ன? அதற்குப் பின் என்னென்ன? என்பதைச் சொல்கிறது இந்தப்படம்.

நாயகன் அங்கயற்கண்ணன், குடிநோயாளி கதாபாத்திரத்துக்குப் பொருத்தமாக இருக்கிறார். அவர் நாயகன் என்பதால் காதல் கல்யாணம் ஆகியனவும் நடக்கின்றன. காதல் காட்சிகளிலும் இயல்பாக நடித்திருக்கிறார்.
நாயகனின் மாமாவாக நடித்திருக்கிறார் இயக்குநர் சரவணசக்தி.அவர் சும்மா வந்தாலே சிரிப்பு மூட்டுவார். இப்படத்தில் முழுநேரக் குடிகாரர் வேடம். அவருடைய செயல்களால் வயிறு வலிக்கச் சிரிக்க வைக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் பிரணா,வெளியிலிருந்து பார்த்தாலே கடுப்பாகும் ஒருவனுடன் இல்லற வாழ்வு வாழ்கிறார்.ஒருதுளி வெறுப்பின்றி தூய அன்பைக் காட்டுகிறார்.இப்படிப்பட்ட மனைவி கதாபாத்திரத்தைப் படைத்து தன் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.டி.எம்.கார்த்திக், சாம்ஸ், மயில்சாமி ஆகியோர் படத்தைக் கலகலப்பாக நடத்த உதவியிருக்கிறார்கள். மயில்சாமியின் மகளாக வரும் அயலி அபிநட்சத்திரா அருமை.

பிரித்வி இசையில்,சீர்காழி சிற்பியின் வரிகளில் பாடல்கள், கதைக்களத்துக்குப் பலம் சேர்க்கும் வண்ணம் அமைந்து ஆட்டம் போட வைக்கின்றன.அருண்குமார் செல்வராஜின் ஒளிப்பதிவு, கதை நடக்கும் இராமநாதபுரத்தின் வெளியழகு கதாபாத்திரங்களின் உள்ளழகு ஆகியனவற்றைக் காட்சிப்படுத்தியிருக்கிறது.

படம் நெடுக இரத்தத்தை ஆறாக ஓடவிட்டுவிட்டு கடைசியில் வன்முறை வேண்டாம் என்று கருத்துச் சொல்வதைப் போல இப்படம் முழுக்க குடிநோயாளிகளின் கும்மாளத்தை உற்சாகமாகக் காட்டிவிட்டுக் கடைசியில் குடி வேண்டாம், அது வீட்டுக்குக் கேடு என்று வலியுறுத்திச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் சரவணசக்தி.
அவர் காட்டியிருக்கும் காட்சிகளை மறந்துவிட்டு கருத்தை மட்டும் எடுத்துக் கொள்தல் நலம்.