பிரைம் வீடியோ வழங்கும், ஸ்டுடியோ சக்தி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில், B.S.ராதாகிருஷ்ணன் தயாரிப்பில், இயக்குநர் மிலிந்த் ராவ் இயக்கத்தில், நடிகர் ஆர்யா நடிப்பில், ஹாரர் திரில்லராக உருவாகியுள்ள “தி வில்லேஜ்” தமிழ் ஒரிஜினல் சீரிஸ் நவம்பர் 24 ஆம் தேதி வெளியாகிறது.தனது குடும்பத்தைக் காப்பாற்றப் போராடும் ஒருவனின் அபாரமான போராட்டக் கதையைச் சொல்வது தான் தி வில்லேஜ் சீரிஸ். ஸ்டுடியோ சக்தி நிறுவனத்தின் சார்பில், இந்தத் தொடரை B.S. ராதாகிருஷ்ணன் தயாரித்துள்ளார். சீரிஸுக்கான திரைக்கதையை மிலிந்த் ராவ், தீரஜ் வைத்தி மற்றும் தீப்தி கோவிந்தராஜன் ஆகியோர் எழுதியுள்ளனர். இந்தத் சீரிஸில், பிரபல தமிழ் நடிகர் ஆர்யா, திவ்யா பிள்ளை, ஆழியா, ஆடுகளம் நரேன், ஜார்ஜ் மாயன், பி.என். சன்னி, முத்துக்குமார் கே., கலைராணி எஸ்.எஸ்., ஜான் கொக்கன், பூஜா, வி.ஜெயபிரகாஷ், அர்ஜுன் சிதம்பரம் மற்றும் தலைவாசல் விஜய் ஆகியோருடன் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.
தமிழில் முதல் முழுமையான ஹாரர் திகில் ஒரிஜினல் சீரிஸாக, உருவாகியுள்ள “தி வில்லேஜ்” சீரிஸின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று காலை சென்னையில் நடைபெற்றது
இவ் நிகழ்வினில்..
பிரைம் வீடியோ இந்தியா & தென்கிழக்கு ஆசியா, தலைவர் அபர்ணா புரோஹித் பேசியதாவது..
பிரைம் வீடியோ மூலம் தி வில்லேஜ் சீரிஸை உங்கள் முன் அறிமுகப்படுத்துவது மிகப்பெரிய மகிழ்ச்சி. இந்த சீரிஸ் மூலம் எங்கள் பார்வையாளர்களை அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்ல உள்ளோம். இந்த சீரிஸ் ஒரு மறக்க முடியாத பயணம். மிக உணர்வுப்பூர்வமான பயணம்.
4 வருடங்கள் முன் ஆரம்பித்தது. முழுதாக எழுதி முடிக்க 2 வருடங்கள் ஆனது. கோவிடை கடந்து இது முழுதாக உருவாக ஆரம்பித்த தருணத்தில், ஆர்யா சார் ஓகே சொன்ன பிறகு இந்த சீரிஸ் உண்மையிலேயே மிகப்பெரியதாகிவிட்டது. பொதுவாக ஹாரர் சீரிஸ் இங்கு யாரும் பார்த்திருக்க மாட்டீர்கள். அந்த வகையில் இது உங்களுக்கு கண்டிப்பாக மிகப் புதுமையான அனுபவமாக இருக்கும். படக்குழு அனைவரும் கடினமாக உழைத்துள்ளார்கள் என்றார்
தயாரிப்பாளர் B.S. ராதாகிருஷ்ணன் பேசியதாவது…
நான்கு வருடங்கள் முன்பு மிலிந்த் சார் இதைப்பண்ணலாம் என்றார். அப்போது ஆரம்பித்த பயணம் அபர்ணா மேடம் சொன்னது போல், இந்தக்கதை எழுதவே 2 வருடம் ஆனது. வேறு வேறு இடத்தில் நடக்கும் பல கதைகள், அதை ஒன்றிணைக்கும் மையப்புள்ளி எது, எப்படி என்பது தான் சுவாரஸ்யம். ஆர்யா சார் வந்த பிறகு தான் இது பெரிய படைப்பாக மாறியது. இந்த படைப்பை பொறுத்தவரை, மிலிந்த் மற்றும் எங்களின் பார்வையும், கதையின் மீதான நம்பிக்கையும் தான் இதில் நடிக்க காரணம் என்றார் ஆர்யா, அவருக்கு நன்றி. அமேசான் யூஎஸ் போலவே இங்கேயும், அவர்கள் முழுமையான ஈடுபாட்டோடு, உழைத்தார்கள் என்றார்.
இயக்குநர் மிலிந்த் ராவ் பேசியதாவது…
இது தமிழுக்கு மிகவும் புதிது. கிராஃபிக் நாவலை இங்கு யாரும் திரைப்படைப்பாக செய்ததில்லை. ஆர்யா சாருக்கும் மிகப்புதியது. இதை அவர் செய்ய ஒத்துக்கொண்டது பெரிய விசயம். கிராஃபிக் நாவலை தமிழ்நாட்டில், தூத்துக்குடி அருகில் நடக்கும் கதை போல நமக்கு நெருக்கமாக, நம் மொழியில் உருவாக்கியுள்ளோம். முழுக்க நைட் கால் ஷீட் தான் அதனால் எல்லோரும் ரொம்ப கஷ்டபட்டு உழைத்தனர். நடிகர்கள் அனைவருக்கும் மிகப்பெரிய நன்றி. இசை இந்த சீரிஸிற்கு மிக முக்கியம் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் அட்டாகாசமான இசையை தந்துள்ளார். விஷுவலும் நன்றாக வந்துள்ளது ஒளிப்பதிவாளருக்கு என்றார்.
நடிகர் ஆர்யா பேசியதாவது…
அபர்ணா மேடம் இல்லாமல் அமேசான் ப்ரைமில் எந்த புராஜக்டும் ஓகே ஆகாது. அவர் இதை ஓகே செய்திருக்கிறார் அதுவே பெரிய விசயம். இங்கு நிறைய ஒரிஜினல்ஸ் வர அவர் தான் காரணம் அவருக்கு நன்றி. மிலிந்த் இந்தக்கதையை சொன்ன போது, இதை எடுக்க முடியுமா ? என்று தான் முதலில் கேட்டேன். அவர் எழுதியது மிகப்பெரிய விசுவல், படத்தை விட பெரிய பட்ஜெட், இதை எல்லாம் இங்கு எடுக்க முடியுமா?, சொல்வதில் 80 சதவீதம் எடுத்தாலே போதும் என்று சொன்னேன். இவ்வளவு பெரிய பட்ஜெட்டை ப்ரைமில் ஒகே செய்தார்கள், மிலிந்த் சொன்ன மாதிரி எடுத்து விட்டார் அதுவே மகிழ்ச்சி. மிலிந்த் ஈஸியாக எந்த ஒரு காட்சிக்கும் ஒகே சொல்ல மாட்டார், இதை எடுப்பது மிகக்கடினம். ப்ராஸ்தடிக் மேக்கப், ஷீட்டிங் லோகேஷன் என எல்லாமே மிக கடினமாக இருந்தது. 3 வருட நீண்ட பயணம். இதை எடுத்து முடித்ததற்கே மிகப்பெரிய பார்டி வைக்க வேண்டும். அவ்வளவு கஷ்டபட்டிருக்கிறோம். மேலும் இது எனக்கு புது எக்ஸ்பீரியன்சாக இருந்தது. இவ்வளவு கோரியான ஹாரர் கதை நடித்ததே இல்லை. இது முழுக்க முழுக்க வித்தியாசமான கான்செப்ட், அதை நம்பித்தான் நான் வேலை செய்தேன். நரேன் சார் அவருடன் சேர்ந்து என் குழந்தையையும், மனைவியையும் தேடுவது தான் கதை. ஆனால் நிறைய சப் பிளாட் இருக்கும். ஒவ்வொரு எபிஸோடும் நீங்கள் அடுத்து என்ன என்று எதிர்பார்ப்பீர்கள். இந்த மாதிரி கதையில் விஷுவல் மற்றும் சவுண்ட் ரொம்ப முக்கியம், அதை மிலிந்த் கொண்டு வந்திருக்கிறார். விஷுவல் எபெஃக்ட்ஸ் எல்லாம் முடித்து, உங்கள் முன் கொண்டு வர இவ்வளவு காலம் தேவைப்பட்டது. இப்போது பார்க்க மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்கள் அனைவருக்கும் கண்டிப்பாக பிடிக்கும் என்றார்.