குய்கோ – திரைப்பட விமர்சனம்

யோகிபாபு, விதார்த் இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘குய்கோ’ 

விதார்த் என்றாலே வித்தியாசமான கதையம்சம் உள்ள கதைகளை தேடிப் பிடித்து நடிக்கும் நடிகர் என்று பெயர் எடுத்தவர்.
யோகி பாபு இப்பொழுது வெளியாகும் பெரும்பாலான படங்களில் இருக்கிறார் என்றாலும்கூட, அவரின் நடிப்புக்கும் டைமிங் காமெடி வசனங்களுக்கும் தீனி போடும்படியான திரைப்படங்கள் அரிதாகவே அமைகின்றன.

அந்த வகையில் விதார்த், யோகி பாபு இணைந்திருக்கும் இந்த ‘குய்கோ’ இருவரது திரைப் பயணத்திலும் ஒரு முக்கியமான திரைப்படமாக அமைந்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையில்லை.

விதார்த்தின் மிகையில்லாத யதார்த்தமான நடிப்பிற்கும், யோகிபாபுவின் லந்து கட்டி அடிக்கும் காமெடி ஒன் லைனர்களுக்கும் அளவெடுத்து தைத்த சட்டை போல் அட்டகாசமாக பொருந்தி இருக்கிறது இந்த குய்கோ திரைப்படம்.

இப்படத்தின் இயக்குநர் திரு அருள் செழியன் 30 ஆண்டு காலம் பத்திரிக்கையாளராக இருந்து தற்போது தன் முதல் படத்தை இயக்கி இருக்கிறார் என்பதோடு 2016-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற ‘ஆண்டவன் கட்டளை’ திரைப்படத்தின் கதாசிரியரும் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

AST பிலிம்ஸ் LLP நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

கதை என்று எடுத்துக் கொண்டால் தேட வேண்டியது இல்லை சமூக அவலங்களை, அத்துமீறல்களை விமர்சிக்கும் காட்சிகளின் தொகுப்பு தான் குய்கோ

 பொருளாதாரம் மற்றும் படிப்பறிவை காரணம் காட்டி தடுக்கப்படும் ஒரு காதலின் முடிவு என்ன ஆனது என்பதுதான் கதை.
கேட்பதற்கு இந்தக் கதையில் என்ன இருக்கிறது என்று தோன்றும் ஒரு சாதாரணமான கதைதான்.

ஆனால், அதைக் காட்சிகளாக விவரித்த அழகிலும், அறிவிலும், யதார்த்த நடிப்பிலும்தான் இந்த ‘குய்கோ’ நம்மை அசரடிக்கிறது.

இதை ஒரு கதைக்கான திரைப்படம் என்று கூறாமல் காட்சிகளுக்கான திரைப்படம் என்று கூறுவது மிக, மிக பொருத்தமாக இருக்கும்.

ஒவ்வொரு காட்சியிலும் நிரம்பி இருக்கும் நக்கல், நய்யாண்டி, விமர்சனம், யதார்த்தம், அரசியல் அறிவு இவைதான் படம் பார்க்கும் நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைத்தும், சில விடயங்களை சீரியஸாக யோசிக்க வைத்தும் கட்டிப் போடுகிறது.

‘தமிழ்ப் படம்’ வழமையான நம் தமிழ் திரைப்படங்களில் பொதிந்து இருக்கும் கிரிஞ்சியான விசயங்களை பகடி செய்த திரைப்படம் என்றால், இந்த ‘குய்கோ’ திரைப்படம் நம் அன்றாட வாழ்க்கையை பகடி செய்யும் திரைப்படம் எனலாம்.

‘வெற்றிக்கொடி கட்டு” திரைப்படத்தில் வரும் வடிவேலு கதாபாத்திரம் துபாய் ரிட்டன்ஸ் என்றால் இப்படத்தில் மலையப்பனாக வரும் யோகி பாபு கதாபாத்திரம் செளதி ரிட்டன்ஸ்.

இது கிட்டத்தட்ட வெற்றிக்கொடி கட்டு திரைப்பட வடிவேலு கதாபாத்திரத்தின் நீட்சி என்று கூட சொல்லலாம்.வடிவேலு அப்படத்தில் என்னவெல்லாம் செய்வாரோ அதை ஒரு படி அதிகமாகவே இப்படத்தில் யோகிபாபு செய்வதோடு, ஒரு குறிப்பிட்ட காட்சியில் வடிவேலுவையும் வைத்து மிகப் பிரமாதமாக பகடி செய்து இருக்கிறார்கள்.

பொய் சொல்லாத புஷ்பா கதாபாத்திரம், அனைவரையும் அரள வைக்கும் ‘அட்டாக் பாண்டி’ கதாப்பாத்திரம், வட்டிக்கு பணம் கொடுத்துவிட்டு போலிஸுக்கு பயந்து ஓடி ஒழியும் பண்பாளன் கதாப்பாத்திரம், கொள்ளை அடித்துக் கொண்டு திரியும் சேகர், பாபு கதாப்பாத்திரம், பெட்டி கடை நடத்தும் பாட்டி கதாபாத்திரம், பே சேனலை பேய் சேனல் என்று எண்ணிக் கொள்ளும் ‘ஜெய் பீம்’ அப்புக்குட்டி கதாப்பாத்திரம், இழவு வீட்டின் சடங்குகளை எடுத்து நடத்திக் கொடுக்க வரும் இளவரசு கதாப்பாத்திரம், இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிள் கதாபாத்திரம் என ஒவ்வொரு கதாபாத்திரமும் நம் மனதில் நிற்பதே படத்தின் வெற்றிக்கு சான்று.

செளதி அரேபியா சென்று ஒட்டகம் மேய்த்துவிட்டு தன் தாய்க்கு கடைசி காரியம் செய்வதற்காக வரும் மலையப்பன் கதாபாத்திரத்தை மிக அசால்ட்டாக லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்கிறார் யோகி பாபு.
செளதி ரிட்டனாக பயங்கர பில்டப்புடன் வலம் வருவதும் அனைவரையும் எடுத்து எறிந்து பேசுவதும், தன்னிடம் பணத்திற்காக ஒட்டிக் கொண்டு திரியும் ஆட்களை அடையாளம் கண்டு அவர்களை வறுத்தெடுப்பதும், கவனிக்கச் சொல்லி வரும் இன்ஸ்பெக்டரை கவனிக்காமல் தெனாவட்டாக கால் ஆட்டுவதும், இரவில் தன் தாயை அடக்கம் செய்வதற்கு முன் வைத்திருந்த ஃப்ரீஸர் பாக்ஸைப் பார்த்து கண் கலங்குவதும், காமெடி ஒன் லைனர்களை ஆங்காங்கே வசனத்திற்கு ஊடாக கலந்து விடுவதும் என ஹீரோ விதார்த்தை ஓரம் கட்டி ஒன்மேன் ஷோ ஆடுகிறார்.

யதார்த்த நடிப்பிற்கு பெயர் போன விதார்த் இப்படத்தில் தனக்கு காட்சிகளில் வலு இல்லை; யோகி பாபுதான் காட்சிக்கு காட்சி ஸ்கோர் செய்கிறார் என்பது தெரிந்திருந்தும், அதைப் பற்றி எல்லாம் அலட்டிக் கொள்ளாமல் அழகாக அவருக்கு இடம் கொடுத்து தனக்கு கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கிறார்.

மாணவர்களுக்கு கணக்கு சொல்லிக் கொடுப்பதும், தவறான தருணங்களில் தடுமாறும் யோகியை சரிப்படுத்துவதும் என சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
இவர்கள் இருவரையும் தவிர்த்துப் பார்த்தால் இளவரசு இழவு வீட்டில் நடக்கும் எல்லா காரியங்களையும் கலகங்களையும் மேற்பார்வையிட்டு, அவரவருக்கான பங்குகளை பிரித்துக் கொடுக்கும் கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார்.

இவர்களைத் தவிர்த்து படத்தின் பிற கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் வினோதினி வைத்தியநாதன், பிரியங்கா, துர்கா, முத்துக்குமார் அனைவருமே சிறப்பாக நடித்திருக்கின்றனர்.

படத்திற்கு இசை அந்தோணிதாசன். யோகிபாபுவிற்கும் நாயகி துர்காவிற்குமான பாடலை இந்தி பட சாயலில் படமாக்கி இருப்பதோடு, இழவு வீடுகளில் பாடப்படும் அடவுப் பாடலில் கிழவியின் நினைவுகளைக் கோர்த்து அழகாகவும், வித்தியாசமாகவும் சில பாடல்களைக் கொடுத்திருக்கிறார்.

ராஜேஷ் யாதவ்வின் கேமரா கோணங்களும் ஒளியமைப்பும், அச்சு அசலான கிராமத்தையும், கிராமத்து வீடுகளையும் கண் முன் நிறுத்துகிறது.

காட்சிகளாகவும், வசனங்களாகவும், காமெடி ஒன் லைனர்களாகவும் ஈர்க்கும் இத்திரைப்படம் கதையாகவும் திரைக்கதையாகவும் இன்னும் வலுவோடு இருந்திருந்தால் தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத திரைப்படமாக மாறி இருக்கும்.

இருப்பினும்கூட சிரித்துக் கொண்டே ஒரு ஜாலியான திரைப்படம் பார்க்க வேண்டும் என்னும் எண்ணம் கொண்ட 2கே கிட்ஸ் ரசிகர்களுக்கான இந்த வாரத்திற்கான விருப்பத் தேர்வு கண்டிப்பாக இந்த ‘குய்கோ’ திரைப்படம்தான்.