கூகுள் குட்டப்பா – விமர்சனம்

தந்தைக்கும் மகனுக்குமான உறவுக்கு இடையே மகனின் இடத்தை ஒரு எந்திர மனிதன்நிரப்பினால் என்ன நடக்கும் என்பது தான் ‘கூகுள் குட்டப்பா’ படத்தின் ஒருவரிக் கதை
2019-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்’ படத்தின் தமிழ் பதிப்புதான்  கூகுள் குட்டப்பா. கிராமத்தில் தனது மகன் தர்ஷனுடன் வசித்து வருகிறார் கே.எஸ்.ரவிக்குமார். ரோபோடிக் பொறியியல் படிப்பை முடித்துவிட்டு வேலைக்காக காத்திருக்கும் மகன் வெளியூருக்கு வேலைக்காக போக கூடாது அப்படியே போனாலும் மாலையில் வீடு வந்துசேர வேண்டும் எனமுட்டுக்கட்டை போடுகிறார் தந்தை. அவரது விருப்பத்தையும் மீறி ஜெர்மன் நாட்டுக்கு வேலைக்கு செல்லும் தர்ஷன், தந்தைக்கு உதவியாக ஒரு ரோபோவை வீட்டுக்கு கொண்டு வருகிறார். அந்த ரோபோவுக்கும், கே.எஸ்.ரவிக்குமாருக்குமான உறவின் பிணைப்பு, அதனால் ஏற்படும் சிக்கல்கள் என நீள்கிறது படத்தின் கதை.மலையாள படத்தில் கூட சோபின் சாஹிரின் பெயர் சுப்ரமணியன் தான். ஆனால், இந்த படத்தில் கே.எஸ்.ரவிக்குமாரின் பெயர் சுப்ரமணி கவுண்டர். இதில் சாதிப்பெயரை சேர்ப்பதற்கான தேவை என்ன வந்தது,ஒரு காட்சியில் ‘சேட்’டா என அழைக்கும்போது, ‘நான் கவுண்டர்’ என கே.எஸ்.ரவிக்குமார் பேசுவதில் என்ன பெருமை?அதேபோல படம் முழுக்க காமெடி என்ற பெயரில் யோகிபாபுவின் நிறத்தையும், உருவத்தையும் கேலி செய்துவரும் காட்சியும், வசனங்களும் நகைச்சுவை வறட்சியை உணர்த்துகிறது
அநாகரிகமாக”கரடிமூஞ்சு’ ‘காஞ்ச மொழகா’ ‘கம்பி முடி’ ‘பெருச்சாளி’ ‘துணி துவைக்குற கல்லு’ இது போன்ற கவுண்டமணி-செந்தில் காலத்து வசனங்களை நம்புகிற போக்கு தமிழ் சினிமா இயக்குநர்களிடம் இருந்து எப்போது மாறப்போகிறது  மலையாள சினிமாவின் அத்தனை உணர்வுகளையும் ஒரேயடியாக மழுங்கச்செய்கின்றன மேற்கண்ட வசனங்கள். அதே போல, ‘நல்ல அப்பனுக்கு பொறந்திருந்தா’ போன்ற பிற்போக்குத்தனமான வசனங்கள் மூலம் இயக்குநர் என்ன சொல்ல வருகிறார்?”ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்” படத்தின் காட்சிகள் உணர்வுகளால் பார்வையாளனுக்கு கடத்தப்பட்டிருக்கும். ஆனால், கூகுள் குட்டப்பா நீண்ட வசனங்களால் உணர்வை கடத்த முயற்சிக்கிறது ஆனால் அது உணர்வுபூர்வமாக இல்லாமல் தோற்றிருக்கிறது. கே.எஸ்.ரவிக்குமார் நடிப்பின் மூலம் தான் சார்ந்த கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறார்.
நடிகர்தர்ஷன் நடிப்பு என்றால் என்ன என்கிறவராக நடித்திருக்கிறார்
நாயகி என கூறப்படும்லாஸ்லியா கடமைக்கு வந்து செல்கிறார். இருவருக்குமான காதல் காட்சிகள் நாடகத்தன்மை.
உணர்வுபூர்வமான இணைப்புதான்படத்தின் உயிர். ஆனால், அதற்கான இடம் இருந்தும் படத்தில் ரோபோவுக்கும் கே.எஸ்.ரவிக்குமாருக்கும், தர்ஷனுக்குமான உறவை அதன் ஆழத்தை பார்வையாளர்களுக்கு கடத்துவதில் தடுமாற்றம் இருக்கிறது  ஆனால், ஆண்ட்ராய்டு குஞ்சப்பனில் இந்த உறவுகளுக்கிடையிலான உணர்வுகளை கச்சிதமாக கடத்தியிருப்பார் ரதீஷ் பாலகிருஷ்ணன். படத்தின் முதல் பாதி எந்தவொரு சுவாரஸ்யமும் இல்லாமல் கடப்பது சோர்வைத் தருகிறது.
மொத்தத்தில் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால்,  மலையாள படத்தின் உயிரோட்டத்தை தமிழிலும் கொண்டுவந்திருக்கலாம்
மலையாள சினிமாவின் ஜீவனை சிதைக்கும் முயற்சிகளை இனியாவது தமிழ் பதிப்பில் தவிர்க்க வேண்டும்