உலக சினிமாவைத் தொடர்ந்து பார்க்கும் பார்வையாளர்களுக்கு இது திருமண விருந்து.
வழக்கமான தமிழ்ச்சினிமா பார்வையாளர்களுக்கு இது பெரு அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் வழங்கியவண்ணம் இருக்கும்.
எத்தனை நாட்கள் தான் மலையாள திரைப்படத்தின் அழகியலைக் கொண்டாடி தமிழ்ச்சினிமா குறித்த வருத்தத்தை பதிவு செய்தவண்ணம் இருக்கப் போகிறோம்.இதோ கொட்டுக்காளி நிஜமாகவே உங்களுக்காக.
இன்று தி நகர் ஏஜிஎஸ் திரையரங்கில் கொட்டுக்காளி பார்த்தேன். பார்வையாளர்கள் பாதி பேர் கணிணித் துறையில் வேலை செய்பவர்கள். அவர்கள் ஒரு புதுவித உற்சாகத்துடன் படத்தை பார்க்கத் துவங்கினார்கள்.
பின்னணி இசையில்லாத நீண்டுக் கொண்டே செல்லும் நீளநீளமான ஷாட்டுகளும் பயணமும் அவர்களை புது அனுபவத்திற்கு அழைத்து சென்றதை என்னால் உணர முடிந்தது.
இடைவேளை இல்லாமல் பெரும்அமைதியுடன் ஒரு தியானம் போல காண வேண்டிய திரைப்படம். அப்போது தான் படம் கடத்த விரும்பும் கதை, வாழ்க்கை நமக்குள் ஒரு மலைத்தேனைப் போல இறங்கும்
தமிழ்ச்சினிமாவை அழுத்தமாக வெளிப்படுத்தப் பயன்படும் ஆயுதங்களான பாடல்கள், பின்னணி இசை, வலிமையான வசனங்கள், கனமான எதிர்மறை கதாபாத்திரம், வன்முறை கொந்தளிக்கும் சண்டைக்காட்சிகள், நகைச்சுவை, கண்ணீர் போன்ற எந்த அலங்காரமும் இல்லாமல் பரிமாறப்பட்ட அழகான எளிமையான திரைப்படம்.
காதல் பேயை ஓட்ட வேண்டும் என்று கிளம்பிய பயணத்தில் மூடநம்பிக்கை, சாதி வெறி,ஆணாதிக்கப் பேய்கள் தலைவிரித்தாடுகிறது.
பயணம் தான் மனிதனின் மனதில் குடிக்கொண்டிருக்கும் பேய்களை ஒட்டுமொத்தமாக விரட்டியடிக்கும் ஆயுதம் என்பதை படிமங்களால் படம் பேசுகிறது.
படத்தில் இடம்பெற்ற இரண்டொரு வசனங்களைத் தவிர மொத்த திரைப்படமும் காட்சி பிம்பங்கள் வழியாக உரையாடுகிறது.
தமிழ் வாழ்வியல் படம் நெடுக பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்கள் எழுத்துகளைப் போல சிதறிக் கிடக்கிறது.
சேவலும்,
ஆட்டோவும்,
காளை மாடும்,
நீண்டு செல்லும் நாக்கும்,
கண்ணில் சிக்கிய தூசியும்,
சிகரெட்டும்,
குரங்குகளும்,
கோவில் மணிகளும்,
பிளாஸ்டிக் குடங்களும்,
திருஷ்டி பொம்மைகளும்,
கருப்பு சட்டையும்,
வளைந்து நெளிந்து செல்லும் மண்பாதையும்,
பூப்புனித நீராட்டு விழாவில் கேட்கும் திரைப்பாடலும்,
திருஷ்டி எலுமிச்சைப்பழமும்,
சிறுகுவாட்டர் பிராந்தியும்,
மளிகைக்கடையில் கிடைக்கும் பெட்ரோலும்,
படம் நெடுக இருக்கும் பேரமைதியும் நம் மனதிற்குள் கவிதைப்பிம்பங்களாக படிவதை உணர முடிகிறது.
இந்த நீண்ட இரவில் விதவிதமான சேவல்தலைகள் மனதில் தோன்றி தோன்றி மறைகிறது.
சேவல் சப்தம் வெறும் ஆணின் அலறல் மட்டுமல்ல நம் மனதிற்குள் குடி கொண்டுள்ள மூட நம்பிக்கையின், சாதி வெறியின், ஆணாதிக்கத்தின் அலறல்.
இயக்குநர் வினோத்ராஜ் அவர்களுக்கு என் வாழ்த்துகள்
பாண்டியாகசூரி தன்னை முழுதாக ஒப்புக் கொடுத்து பிரமாதமாக தன் கோபத்தையும் ஆத்திரத்தையும் ஆற்றாமையையும் வெளிப்படுத்தியிருப்பது அருமை.
தயாரிப்பாளர்,நடிகர் சிவகார்த் திகேயனின் புதிய அலை திரைப்படங்களுக்கான ஆதரவு பாராட்டுக்குரியது.