சட்டவிரோத செயல் உண்மை எனில் தண்டிக்கப்பட வேண்டும் இயக்குநர் அமீர் அறிக்கை

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் அமீர் இயக்கும் படத்தில் நடித்த நடிகரும் கைதாகி இருப்பது  பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மத்தியபோதைப் பொருள் தடுப்பு பிரிவுபோலீஸாருக்கு நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளை சேர்ந்த சுங்கத்துறை அதிகாரிகளிடம் இருந்து ஒரு  தகவல் அனுப்பபட்டுள்ளது.

போதைப் பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் முக்கிய வேதிப்பொருட்களை தேங்காய் பவுடர் மற்றும் சத்து மாவு பாக்கெட்களில் மறைத்து வைத்து கடத்துவதாக அவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.அதன் அடிப்படையில் போதைப் பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் ஒரு ஆபரேசனை தொடங்கினர். இதற்காக அமைக்கப்பட்ட டெல்லி போலீஸ் சிறப்பு பிரிவு மற்றும் போதைப் பொருள் தடுப்புபிரிவு அதிகாரிகள் அடங்கிய தனிப்படைகடந்த 4 மாதங்களாக தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டது.இந்த குழுவுக்கு அண்மையில் போதைப் பொருள் கடத்தல் கும்பல் தொடர்பாக ஒரு தகவல் ஒன்று கிடைத்தது. மேற்கு டெல்லி பகுதியில் உள்ள பசாய் தாராபூர் பகுதியின் குடோன் ஒன்றில் இருந்து இந்த போதை பொருள் கடத்தல் குழு செயல்பட்டு வருவது தெரியவந்தது. அதிரடியாக குடோனுக்குள் நுழைந்த போலீஸார் அங்கிருந்தவர்களிடம் இருந்து  இருந்து 50 கிலோ போதைப் பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் வேதிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதனை தொடர்ந்து அங்கிருந்த மூவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.கைதான அந்த 3 பேர் யார் என்று போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் அனைவருமே தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்,கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த கடத்தலில் மூளையாக செயல்பட்டவர்
ஜாபர் சாதிக் என்பவர். இவர் சினிமா திரைப்பட தயாரிப்பாளராகவும், திமுக சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராகவும் உள்ளார். சலீம் என்பவரும் அரசியல் பிரமுகராக இருந்து வருகிறார். மற்றொருவர் பெயர் மைதீன். இவர் திரைப்பட நடிகராக உள்ளார். குறிப்பாக இயக்குநர் அமீர் இயக்கி வரும் “இறைவன் மிகப் பெரியவன்” திரைப்படத்திலும் இவர் நடித்து இருக்கிறாராம். கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 45 முறை அவர்கள் போதைப் பொருட்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி இருப்பது தெரியவந்து இருக்கிறது. 3,500 கிலோ எடைகொண்ட வேதிப் பொருளை கடத்தி அதன் மூலமாக மட்டும் சுமார் ரூ.2,000 கோடி வரை இவர்கள் வருவாய் ஈட்டி இருக்கலாம் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த கடத்தல் கும்பல் பின்னணியில் உள்ளவர்களை கைது செய்வதில் போலீசார் தீவிரம் காட்டி இருக்கிறார்கள்.
இந்த நிலையில் இறைவன் மிகப்பெரியவன் படத்தின்
இயக்குநர் அமீர் தலைமறைவு என்கிற வதந்தி தமிழ் சினிமா வட்டாரத்தில் பரவ தொடங்கியது. இதற்கு முற்று புள்ளி வைக்கும் வகையில் நேற்று(26.02.2024) இரவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்
மரியாதைக்குரிய பத்திரிகை, தொலைக்காட்சி, வலைத்தள, வலை ஒளி, வானொலி, பண்பலை மற்றும் அனைத்து ஊடக நண்பர்களுக்கு வணக்கம்.!
கடந்த இரண்டு நாட்களாக, எனது “இறைவன் மிகப் பெரியவன்” திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஜாஃபர் அவர்கள் குறித்து வரும் செய்திகள் அனைத்தும் எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது.
கடந்த 22-ம் தேதி நான் “இறைவன் மிகப் பெரியவன்” திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருந்த போது, திடீரென படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
ஏன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது? என்னைச் சுற்றி என்ன நடக்கிறது? என்பதை ஊடகங்கள் வாயிலாகவே நான் அறிந்து கொண்டேன். உண்மை எதுவென்று இப்போது வரை எனக்குத் தெரியவில்லை.
எதுவாயினும், செய்திகளில் வரும் குற்றச்சாட்டுகளில் உண்மை இருக்குமேயானால், அது கண்டிக்கப்பட வேண்டியதும், தண்டிக்கப்பட வேண்டியதுமே.!
நடிகர்களோடும், தயாரிப்பாளர்களோடும் சமரசங்களுக்கு உட்பட்டால் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்ற கொள்கைக்கு நான் எப்போதும் எதிரானவன் என்பதை ஊடகத்துறையினர் நன்கு அறிவர்.
அந்த வகையில், சட்டவிரோதச் செயல்களில் எவர் ஈடுபட்டிருந்தாலும், அவர்களுடன் நான் தொடர்ந்து பணியாற்றப் போவதில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தற்போதும், நான் பத்திரிகையாளர்களை வழக்கமாகச் சந்திக்கும் எனது அலுவலகத்தில் திரைப்பட பணிகளில் ஈடுபட்டிருக்கிறேன்.
முழுவிபரங்கள் தெரிந்த பிறகு, விரைவில் பத்திரிகை மற்றும் ஊடக துறையினரைச் சந்திக்கின்றேன். எனக்குறிப்பிட்டுள்ளார்.