சமூக நலன் பேசும்சைரன் திரைப்படம்

ஹோம் மூவி மேக்கர்நிறுவனத்தின் சார்பில்  சுஜாதா விஜய்குமார் தயாரித்துள்ள திரைப்படம் ‘சைரன்’. நடிகர் ஜெயம் ரவி இதுவரை நடித்திராத இரண்டுவிதமான தோற்றங்களில்  நடித்திருப்பதாக கூறப்படுகிறது. நடிகை கீர்த்தி சுரேஷ் முதல் முறையாக நடிகர் ஜெயம் ரவியுடன் இப்படத்தில் இணைந்துள்ளார். இவர்களுடன் யோகிபாபு, சமுத்திரக்கனியும்மேலும் அனுபமா பரமேஸ்வரன், அழகம் பெருமாள், அஜய்,  துளசி, சாந்தினி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
‘இரும்புத்திரை’, ‘விஸ்வாசம்’, ‘ஹீரோ’ படங்களில் திரைக்கதை ஆக்கத்தில் பங்கு பெற்ற  அந்தோணி பாக்யராஜ் இந்த ‘சைரன்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

பிப்ரவரி 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள சைரன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தயாரிப்பாளர் சுஜாதா விஜய்குமார் பேசும்போது,
 “இதுவரை நாங்கள் தயாரித்துள்ள படங்களில்குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அனைவரும் ரசிக்கும்படமாக இருக்கும்.
ஒரு ஆம்புலன்ஸ் சைரனுக்கும், போலீஸ் சைரனுக்கும் உள்ள போராட்டம்தான் இந்த சைரன் படம். எப்போதும் வித்தியாசமான கேரக்டர்களில் அசத்தும் எங்கள் அன்பு ஜெயம் ரவி  இந்தப் படத்திலும் அசத்தியுள்ளார். என் மருமகன் என்பதால் கூறவில்லை. படம் பார்த்தால் உங்களுக்கே புரியும்.நந்தினி கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் அட்டகாசமாக நடித்துள்ளார். இந்தப் படம் அவர் நடிப்பு வாழ்க்கையில் முக்கியமான படமாக இருக்கும். ஜெயம் ரவிக்கு இணையாக எதிர்த்து நிற்க, அவரால் முடியுமா என முதலில் கொஞ்சம் சந்தேகமாக இருந்தது, ஆனால், இந்தப் படத்திற்காக 5 கிலோ எடையைக் கூட்டி போலீஸ் உடையில் நடித்துள்ளார்.
சமுத்திரக்கனி எல்லா மொழிகளிலும், அனைத்துவித கதாப்பாத்திரங்களிலும் அசத்துகிறார். இந்தப் படத்திலும் நன்றாக நடித்துள்ளார் என்றார்.
படத் தொகுப்பாளர் ரூபன் பேசும்போது,
 “ஒரு படத்திற்கு இயக்குநரின் பார்வைதான் முக்கியம். ஆனால், அவர்களின் பார்வை இங்கு எளிதாகப் புரிந்து கொள்ளப்படுவதில்லை. கதையை நம்பி பல நல்ல இயக்குனர்களுக்கு வாய்ப்பு தந்திருக்கும் ஜெயம் ரவி அவர்களுக்கு நன்றி.என்னை நம்பி கதை கேட்டு, அதற்கு ஒப்புக் கொண்டார். எனக்கு உரிமையான ஃபேமிலியாக இந்த தயாரிப்பு நிறுவனத்தை நினைக்கிறேன். அதனால்தான் இங்கே என்னால் வாய்ப்பு கேட்க முடிந்தது. இந்த நிறுவனத்தினர் என்னை அவ்வளவு நம்புவார்கள்.
அந்தோணி கல்லூரியில் என் ஜூனியர். நிறைய பெரிய படங்களில் ரைட்டராக வேலை பார்த்திருக்கிறார். இயக்குநராகும் அவரது கனவு இந்தப் படத்தில் நிறைவேறியுள்ளது. மிக நன்றாக படத்தைக் கொண்டு வந்துள்ளார். இப்படம் மிக நல்ல அனுபவமாக இருந்தது என்றார்.
நடிகர் சமுத்திரகனி பேசும்போது,
 “இந்த நிறுவனத்தில் 18 வருடங்களுக்கு முன் நான் அட்வான்ஸ் வாங்கியிருக்கிறேன். தயாரிப்பாளர் சுஜாதா அவர்கள் நான் சின்னத்திரையில் இருக்கும்போதே என்னை வாழ்த்தி கொண்டே இருப்பார். நான் பெரிய ஆளாக வருவேன் எனச் சொல்வார். சினிமாவில் எல்லாமே தெரிந்த ஒரு தம்பி ஜெயம் ரவி. அவரது திறமைக்கு இன்னும் பெரிய இடம் காத்திருக்கிறது. அவரோடு இன்னும் 100 படங்கள் நடிக்கலாம். அவருடன் ‘நிமிர்ந்து நில்’ படத்தில் பணியாற்றினேன். அந்தப் படத்தில் அவர் போட்ட உழைப்பு மிகப் பெரியது.108 அலுவலகத்தை நேரில் சென்று பார்த்திருக்கிறேன். அதை என் வாழ்நாளில் நான் மறக்கவே முடியாது. அத்தனை பெரிய அமைப்பு அது. அந்த உழைப்பாளர்களுக்கு சமர்ப்பணமாக இப்படம் இருக்கும்..” என்றார்.
இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ்  பேசும்போது,
“இந்தப் படத்தின் இயக்குநரான அந்தோணி ‘டார்லிங்’ படத்திலேயே துணை இயக்குனராக வேலை பார்த்தவர். பல படங்களில் வேலை பார்த்துள்ளார். இந்தப் படம் இயக்குநராக முதல் படம். அவர் ஒரு கிஃப்டட் ரைட்டர். கண்டிப்பாக அவருக்கு இது வெற்றி படமாக இருக்கும்.ஜெயம் ரவி மிக மெச்சூர்டா நடித்திருக்கிறார். இந்த வருடம் எனக்கு நல்ல வெற்றியுடன் துவங்கியுள்ளது. ஒரு சிலர் மட்டும்தான் என்னிடம் மெலடி கேட்பார்கள். இந்தப் படத்தில் அந்த மாதிரி நல்ல பாடல்கள் வந்துள்ளது.  கேட்டுவிட்டுச் சொல்லுங்கள்…” என்றார்.

இயக்குநர் அந்தோணி பாக்யராஜ் பேசும்போது,

“இந்தப் படம் எனக்கு கனவு மாதிரி. எடிட்டர் ரூபன் என் காலேஜ் சீனியர்.  அவர் சொல்லி அனுப்பித்தான் ‘இரும்புத்திரை’ படத்தில் ரைட்டராக மாறினேன். பின்னர் இயக்குநராக வேண்டி அலைந்து கொண்டிருந்தேன்.
ரூபன் அண்ணா ஒரு நாள் உன் கதைக்கு ரவி சார் பொருத்தமா இருப்பார் என்று சொல்லி உடனேயே அவரிடம் அனுப்பி வைத்தார். அதன் பின் எல்லாமே நடந்தது. ரவி சாருக்கு கதை சொன்னேன். அவருக்கு கதை  பிடித்து “உடனே ஆரம்பிக்கலாம்..” என்றார். ரவி சார் என்னை முழுமையாக நம்பினார். நடிக்கும்போது “என்ன எடுத்தீர்கள்..?” என்றுகூட அவர் கேட்டதில்லை. அவர் வைத்த நம்பிக்கையை உடைத்துவிடக் கூடாது என்பதுதான் எனக்கு முக்கியமாக இருந்தது.
புது இயக்குநர்கள், பெரிய ஹீரோக்களுக்கு செய்யும் படம் ஜெயிக்க வேண்டும். அப்போதுதான் இனி புது இயக்குநர்கள் பலர் வர முடியும்.
அழகம் பெருமாள் சாரை ஷீட்டிங்கிற்கு முதல் நாளில்தான் கூப்பிட்டேன். எனக்காக வந்தார். கனி அண்ணனிடம் கதை சொன்ன போதே, “இந்தக் கதை நிச்சயம் ஹிட்டுடா. இந்தக் கதையைத் தாங்க ஜெயம் ரவி இருக்கிறார். படம் நிச்சயம் ஜெயிக்கும்..” என்றார்
ஜீவி அண்ணாவின் மெலடி எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் மட்டும்தான் எனக்குத் தெரிந்த இசையமைப்பாளர், என்னை எப்போதும் உற்சாகப்படுத்திக்கொண்டே இருப்பார். இந்தப் படத்திற்காக 20 ட்யூன்களை தந்துள்ளார்.
திலீப் மாஸ்டர் கதைக்குள்ளேயே யோசிப்பார். எனக்காக நிறைய செய்தார். கீர்த்தி அற்புதமாக நடித்துள்ளார். அனுபமாவிற்கு முக்கியமான ரோல். தமிழில் இது அவங்களுக்கு முக்கியமான படமாக இருக்கும்.
தயாரிப்பாளர் சுஜாதா மேடம் இந்தக் கதையை முழுசாக கேட்கவில்லை. ரவி சாருக்காக செய்தார். நானே காம்ப்ரமைஸ் செய்தாலும் அவர் செய்யவிட மாட்டார்” என்றார்.

நடிகர் ஜெயம் ரவி பேசும்போது,
 “மிகச் சந்தோஷமான தருணம் இது. முதன்முதலில் ரூபனிடம் இருந்துதான் இந்தப் படம் ஆரம்பித்தது. ‘அடங்க மறு’ இயக்குநரை அவர்தான் அனுப்பி வைத்தார். அந்தப் படம் பெரிய வெற்றி.இந்தப் படத்திற்காக வேறு தயாரிப்பாளரிடம் போகலாம் என்று நினைத்தபோது, சுஜாதா அம்மா விடவே இல்லை. “கண்டிப்பாக நம்மதான் பண்ணனும்” என்று பிடிவாதமாக இருந்தார்.
ஒரு படத்தின் மீது தயாரிப்பாளருக்குத்தான்
முதல் நம்பிக்கை இருக்க வேண்டும். அந்த நம்பிக்கை அவரிடம் இருந்து ஆரம்பித்தது எனக்கு சந்தோசம்.
இந்தப் படத்தில் எமோஷன்ஸ் மிக முக்கியம். அதைத் திரையில் கொண்டு வருவதும் முக்கியம். இசையை ஜீ.வி.தான் பண்ணனும் என ஆசைப்பட்டோம். அவரும் ஒத்துக் கொண்டார்.
இந்தப் படத்தில் பெண் கதாபாத்திரம் மிக முக்கியமானது. ஹீரோவுக்கு சரிசமமாக நிற்க வேண்டும்.  கீர்த்தி சரியாக இருப்பார் என்று நினைத்தோம், அதை நிரூபிக்கும்படி நடித்துள்ளார். அவர் ஒரு மிகச் சிறந்த உழைப்பாளி.
சமுத்திரக்கனி அண்ணனுக்கு இன்னும் ஒரு முக்கியமான பாத்திரம். நிஜத்தில் அவர் எப்போதும் சமூக கருத்துக்களை சொல்பவர். அவரை அதற்கு நேர்மாறாக நடிக்க வைத்துள்ளோம். “என்னைய போய் இப்படிப் பேச வைக்கிறீங்களே..?” என்பார்.இயக்குநர் அந்தோணி பாக்யராஜை இன்னும் நிறைய மேடைகளில், வெற்றி மேடைகளில் நீங்கள் பார்ப்பீர்கள். நான் புது இயக்குநர்கள்கூட நிறைய படங்களை செய்கிறேன் என்கிறார்கள். நான் ஒரு கருவி அவ்வளவுதான். இயக்குநரின் உழைப்புதான் படம் வெற்றி பெறக் காரணம்.இந்தப் படத்தில் ரெண்டு வேடங்களை கொஞ்சம் கஷ்டப்பட்டு செய்திருக்கிறேன். யோகிபாபுவும், நானும் டிவின்ஸ் மாதிரி ஒண்ணாவே இருந்தோம். ‘கோமாளி’ படம் மாதிரி இந்தப் படத்திலும் அழகான டிராவல் இருக்கு என்றார்.