சர்ச்சைகளுக்கு மத்தியில் ரோட்டர்டேம் விழாவில் விருதை வென்ற பேட்கேர்ள்

பாலிவுட் நடிகரும், இயக்குனருமான அனுராக் காஷ்யப் மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் ஆகியோர் இணைந்து தயாரித்து உள்ள படம் பேட் கேர்ள். இதில் அஞ்சலி சிவராமன், சாந்தி பிரியா, ஹ்ரிது ஹருண், டிஜே, அருணாசலம் மற்றும் சரண்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர். 

வெற்றிமாறனின் உதவி இயக்குனரான வர்ஷா பரத் இந்தப் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இதன் டீசர் சமீபத்தில் வெளியானது. அதில் பள்ளி மாணவிகளையும், இந்து, பிராமண சமூக பெண்களை தவறாக சித்தரித்து இருப்பதாக கூறி பல்வேறு தரப்பிலிருந்தும் இந்த பேட் கேர்ள் படத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது.

பிராமணர்களையும், பிராமண பெண்களையும் அவமதிக்கும் வகையில், பேட் கேர்ள் படத்தில் காட்சிகள் இடம் பெற்று உள்ளதால், படத்துக்கு வழங்கப்பட்ட தணிக்கை சான்றிதழை திரும்ப பெற வேண்டும் என்றும், அதை ரத்து செய் வேண்டுமென்று உலக பிராமணர்கள் நலச்சங்க தலைவர் கே.சிவநாராயணன், ‘சென்சார் போர்டு’க்கு புகார் மனு கொடுத்திருந்தார்.

இதேபோல, ‘இப்படத்துக்கு வழங்கப்பட்ட சான்றிதழை ரத்து செய்ய வேண்டும்,எதிர் காலத்தில் எந்த மத பழக்க வழக்கங்களையும், சமுதாய கலாசாரத்தையும் சீரழிக்கும் வகையில் எடுக்கப்படும் எந்த திரைப்படத்தையும் திரையிட அனுமதிக்கக்கூடாது’ என்று கூறி தமிழ்நாடு பிராமண சங்கத் தலைவர் கோவை சி.ஜி.வி.கணேசன் மாநில ஒருங்கிணைப்பாளர் பம்மல் ராமகிருஷ்ணன் ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ள நிலையில், ‘பேட் கேர்ள்’ படம் சென்சாருக்கே அப்ளை பண்ணலை-னு சொல்லி ஸ்டேட்மெண்ட் ஒன்றை சென்னை சென்சார் போர்ட் வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில்”ரோட்டர்டாம்” சர்வதேச திரைப்பட விழாவில் NETPAC விருதினை ‘பேட் கேர்ள்’ (Bad Girl) திரைப்படம் வென்றுள்ளது.இது தமிழ் திரையுலகிற்கு பெருமை சேர்கும் தருணம் என்று படக்குழு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

NETPAC விருதானது (Network for the Promotion of Asian Cinema) ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியங்களைச் சேர்ந்த ஒரு தனித்துவமான திரைப்படத்துக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இது குறிப்பாக வளர்ந்து வரும் இயக்குநர்களின் திறமைகளை அங்கீகரிக்கும் விதத்தில் முதல் மற்றும் இரண்டாவது திரைப்படங்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.

இந்த அங்கீகாரத்தின் மூலம், ‘பேட் கேர்ள்’ திரைப்படம் தனது இடத்தை, தமிழில் கதை சொல்லலுக்கான சிறப்பையும் மற்றும் தமிழ் திரைப்படங்களுக்கான வலிமையையும் உலகளாவிய சினிமா அரங்கில் உறுதிப்படுத்தியுள்ளது.