தமிழ் சினிமாவில் மே மாதம் வெளியான படங்களில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் சாமான்யன் படமும் ஒன்று.
1986 முதல் 1990 வரையிலான ஆண்டுகளில் திரையரங்குகளின் கல்லாவை கஞ்சத்தனமில்லாமல் நிரப்பிய படங்களின் கதாநாயகன் ராமராஜன். அன்றைய காலகட்டத்தில் தமிழ் சினிமாவை இருதுருவங்களாக இருந்து இயக்கிய ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரையும் தனது கிராமிய மணம் கமழும் திரைப்படங்களின் வெற்றியால் பயமுறுத்தியவர் ராமராஜன். கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன் – கனகா ஜோடி நடிப்பில் வெளியான கரகாட்டக் கரன் படத்தின் வெற்றியை கண்டு ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவருமே அதிர்ந்து போனார்கள்
இது பற்றி கமல் ஹாசன் கூறியிருப்பதாவது, ‘நான் காலை எல்லாம் மடக்கி என்னென்னம்மோ செய்து நடிக்கிறேன். ஆனா ராமராஜனோ தலையில் ஈசியா ஒரு கரகத்தை வைத்து ஆடிட்டு போயிட்டாரே’ என்றாராம். ராமராஜன் நடிப்பில் வெளியான பெரும்பான்மையான படங்கள் திரையரங்குகளில்
வெள்ளி விழா கொண்டாடியது. ராமராஜன் 14 வருடங்களுக்கு பிறகு நடித்துள்ள படம் ‘சாமானியன்’. அவரது 45வது படமாக உருவாகியுள்ள இந்த படத்தை எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் V.மதியழகன் தயாரித்துள்ளார்.
தம்பிக்கோட்டை, மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் R.ராகேஷ் இயக்கியுள்ள இப்படத்திற்கு கதாசிரியர் கார்த்திக் குமார் கதை எழுதியுள்ளார். ராமராஜனின் திரையுலக பயண வெற்றியில் அவரது படங்களுக்கு காலத்தால் அழியாத பாடல்களுக்கு இசையமைத்த இளையராஜா, தற்போது 23 வருடங்களுக்கு பிறகு ‘சாமானியன்’ படத்தின் மூலம் மீண்டும் ராமராஜன் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
கதாநாயகிகளாக நக்ஸா சரண், ஸ்மிருதி வெங்கட், அபர்ணதி,. முக்கிய வேடங்களில் ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர், லியோ சிவகுமார், ராஜாராணி பாண்டியன், மைம் கோபி, போஸ் வெங்கட், வினோதினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.86 லிருந்து 90 வரை நான்கு வருடங்கள் மட்டுமே உச்சத்தில்இருந்த ராமராஜனை இன்று வரை மக்கள் மனதில் நினைத்திருக்கிறார்கள் என்றால் அதற்கு இளையராஜா என் படங்களில் சாதாரண மக்களையும், உழைக்கும் வர்க்கத்தையும் தொடும் விதமாக அமைத்த பாடல்கள் மட்டும் தான் காரணம். அவை தான் மக்களிடம் இப்போதும் என்னை ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கிறது. அதனால் தான் இத்தனை வருடங்கள் கழித்து வரும்போது என்னை ரசிக்கும் ரசிகர்களுக்கும், அதே சமயம் இப்போதுள்ள தலைமுறைக்கும் ஏற்றுக்கொள்ளும் விதமாக ஒரு கதையும் கதாபாத்திரமும் அமைந்ததால் சாமானியன் படத்தில் நடிக்கஒப்புக் கொண்டேன் எனக் கூறும் ராமராஜன் கடந்த இருவாரங்களாக சாமான்யன் படத்தின் விளம்பரத்திற்காக ஊடகங்களுக்கு தொடர்ச்சியாக பேட்டி கொடுத்து வந்தார். ராமராஜன் உச்சத்தில் இருந்த போது இருந்த சினிமா இன்று இல்லை என்பதை அறியாதவராகவே நேர்காணல்களில் அவரது பதில்கள் இருந்தன. முதல் படத்தின் வெற்றியை அடுத்த படத்தின் மூலம் முறியடிக்க முடியவில்லை என்றாலும் தக்க வைத்துக் கொள்ளவே கடுமையாக போராட வேண்டியுள்ளது இன்றைய சினிமா வணிகத்தில். இந்த சூழலில் பழைய நெனப்புடா பேராண்டி என்பதற்கேற்ப இளையராஜா இசையமைத்துவிட்டாலே அந்தப் படம் வெற்றி பெறும் என ராமராஜன் கூறி வந்த நிலையில் கடந்த மே 23 அன்று சாமான்யன் திரையரங்குகளில் வெளியானது. தியேட்டருக்கு படம் பார்க்க வரும் இன்றைய தலைமுறை சாமான்யன் படம் பார்க்க தியேட்டர் பக்கம் திரும்பவில்லை. அந்தக் காலத்தில் ராமராஜன் என பழங்கதை பேசிக் கொண்டிருந்தவர்கள் மட்டுமே தியேட்டரை நோக்கி வந்தனர். ராமராஜன் நடித்த படங்களையும், பாடல்களையும் இன்றைய தலைமுறை ரசிப்பதுடன் சரி அதனை தியேட்டருக்கு வந்து கொண்டாட ஆர்வம் காட்டவில்லை என்கின்றனர் தியேட்டர் உரிமையாளர்கள். டவுசர்(ராமராஜன்) படம் ரிலீஸ் ஆகும் தியேட்டர்களில் குறைந்தபட்சம் நான்கு வாரங்கள் அதனை தொடர்ந்து, பி, சி சென்டர்களில் ஷிப்டிங் போடும் தியேட்டர்களில் ஆம்பள, பொம்பள, குழந்த, குட்டினு கூட்டம் அள்ளும் அது கண் கொள்ளாக்காட்சியாக இருக்கும். B, C சென்டர்களில் குடும்பங்கள் வந்து இறங்கும் மாட்டுவண்டிகள் நிறுத்த தியேட்டர் வளாகத்தில் இடம் இருக்காது. ஆனால் இன்றைக்கு களம் மாறியிருக்கு, படம் பார்க்க வரும் இளசுகள் மனநிலை ஒவ்வொரு நாளும் மாறி வருவதை பார்க்க முடிகிறது என்கின்றனர் தியேட்டர் மேனேஜர்கள், மற்றும் விநியோகஸ்தர்கள் . சினிமா வெளியீடு என்பது முந்தைய காலம் போன்று இல்லை. எல்லா சென்டர்களிலும் ஒரே நாளில் படத்தை திரையிட்டு முதல் வாரத்தில் அசலை எடுத்து விடும் அசரவேகத்திற்கு சினிமா வணிகம் மாறிவிட்டது. அதற்குரிய ரசிகர் கூட்டம் இருந்தால் மட்டுமே தியேட்டர்களில் நட்சத்திர நடிகர்களின் படங்கள் தாக்குப் புடிக்க முடியும் என்கிற வணிக சூழலை எதிர்கொள்ளும் வகையில் ராமராஜனுக்கான சினிமா ரசிகர் கூட்டம் இல்லை என்பதால் சாமான்யன் திரையரங்குகளில் தடுமாறி வருகிறது என்கின்றனர் தியேட்டர் உரிமையாளர்கள். 90 களில் ரஜினிகாந்த் படத்திற்கே டப் கொடுத்த ராமராஜன் மீண்டும் கதை நாயகனாக கனத்த உடம்புடன் சாமான்யன் படத்தில் நடித்திருக்கிறார். இன்றைய சினிமா ரசிகர்ளின் எதிர்பார்ப்புக்குரியதாக சாமான்யன் திரைக்கதையும், ராமராஜனின் உடல் மொழியும் இல்லை என்பது மறுக்க முடியாத உண்மையாக உள்ளது என்ற விநியோகஸ்தர்கள் ஒரு விநியோக பகுதியில் இன்றைய இளம் கதாநாயகர்கள் நடிப்பில் வெளியாகும் படம் முதல் வாரத்தில் செய்யும் மொத்த வசூலை கூட தமிழ்நாடு முழுவதும் எட்டிப் பிடிக்க முடியாத நிலையில் உள்ளது சாமான்யன் வசூல் நிலவரம். படத்தை பற்றிய செய்திகள், விமர்சனங்கள் ஊடகங்களில் பிரம்மாண்டமாக வெளியானாலும் குறைவான திரையரங்குகளிலேயே சாமான்யன் திரையிடப்பட்டுள்ளது. உதாரணமாக திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், பெரம்பலூர் மாவட்டங்களை கொண்ட திருச்சி ஏரியா பகுதியில் அறிமுக நடிகர்கள் படங்களே பத்துக்கும் அதிகமான தியேட்டர்களில் குறிப்பாக திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மாயவரம், நாகப்பட்டினம், மணப்பாறை, திருவாரூர், பெரம்பலூர், போன்ற வசூல் முக்கியத்துவம் உள்ள ஊர்களில் திரையிடப்படும். சாமான்யன் படம் மேற்குறிப்பிட்ட ஊர்களில் ஒரு திரையரங்கில் கூட திரையிடப்படவில்லை. சி சென்டர் என கூறப்படும் நான்கு ஊர்களில் நான்கு தியேட்டர்களில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. நான்கு நாட்களில் வசூலான மொத்த தொகை 80,000 ம் ரூபாய் மட்டுமே இது போன்ற நிலைமை தான் தமிழ்நாடு முழுவதும் சாமான்யன் படத்தின் வசூல் நிலவரம். நான்கு நாட்களில் சுமார் 12 லட்ச ரூபாய் மட்டுமே மொத்த வசூல் செய்துள்ளது சாமான்யன். இன்றைய முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளியாகும் ஒரு படத்திற்கு இரண்டாம் நிலை நகரத்தில்ஒரு திரையரங்கில் ஒரு நாள் ஆகும் குறைந்தபட்டமொத்த வசூல் 12 லட்சம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.
– இராமானுஜம்