சினிமா பிரஸ்கிளப் கண்டனம்“மண்டியிட்டு மன்னிப்புக் கேட்ட மிஷ்கின்”

பாட்டல் ராதா’ மேடையில் இயக்குநர் மிஷ்கின் பேசியது, பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. திரையுலகினர் பலரும் கடும் எதிர்ப்புகளை தெரிவித்தார்கள். இந்த நிலையில் தென்னிந்திய சினிமா பிரஸ் கிளப் இயக்குநர் மிஷ்கின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி அறிக்கையொன்றை ஆகஸ்ட் 25 ஆம் தேதி வெளியிட்டது. அதில்

தென்னிந்திய சினிமா பிரஸ்கிளப் செயற்குழு கூட்டம் 24.01.2024 அன்று சென்னையில் நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்.
இந்திய நாட்டில் பண்பாட்டு தளத்திலும், சபை நாகரிகத்திற்கும் முன்னோடி முதன்மை மாநிலமாக இருப்பது தமிழ்நாடு.
திரைப்பட தயாரிப்பில் தென்னிந்திய சினிமாவிற்கு தலைமையகமாகவும், சினிமா வளர்ச்சிக்கு பல்வேறு முன்னோடி செயல்பாடுகள் மூலம் வழிகாட்டுகிறது தமிழ் சினிமா
கடல் கடந்த நாடுகளில்இந்திய சினிமாவின் முகங்களாக, அடையாளங்களாக இன்றைக்கு இருக்கும் பல்வேறு சாதனையாளர்கள் உருவானது தமிழ் சினிமாவில் தான்.
அப்படிப்பட்ட பெருமைமிகுதமிழ் சினிமாவிற்கு பாட்டல் ராதா திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா, மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்வில் பங்கேற்ற  இயக்குநர் மிஷ்கின் வழக்கம் போல நாலாந்தரமான மேடைப்பேச்சின் மூலம் சிறுமை சேர்த்திருகிறார். அந்த மேடையில் இருந்த தமிழ் சினிமாவின் ஆக சிறந்த இயக்குநர்கள் பலரும் அதனை கண்டிக்காமல் கடந்து போனதுடன், இன்றுவரை கள்ள மௌனம் காத்து வருவதை ஆழ்ந்த கவலையுடன் சுட்டிக்காட்ட விரும்புகிறது தென்னிந்திய சினிமா பிரஸ்கிளப்.
ஜனவரி 18 ஆம் தேதி மாலை சென்னையில் பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவான “பாட்டல் ராதா” திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவும், அதனையொட்டி பத்திரிகையாளர்கள் சந்திப்பு நிகழ்வும் நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட இயக்குநர் மிஷ்கின் பேசுகிற போது பொது மேடையில் கடைப்பிடிக்க வேண்டிய கண்ணியத்தை காற்றில் பறக்கவிட்டு, நாலாந்தரமான வார்த்தைகளால் பேசியுள்ளார்.
பெண் செய்தியாளர்கள், பெண் பார்வையாளர்கள் நிறைந்த அந்த நிகழ்வில் வாய் பேச கூச்சப்படும் நாலாந்தரமான வார்த்தைகளை சரளமாக பயன்படுத்தி பேசி பார்வையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார்.
மிஷ்கின் பேசிய நாலாந்தர வார்த்தைகளை கேட்க சகிக்காமல் மேடையை விட்டு கீழிறங்கி போய்விட்டார் இயக்குநர் சமுத்திரகனி
உச்ச கட்டமாக வாழும் சாதனையாளர், தனது இசையால் தமிழர்களுக்கும், இந்திய சினிமாவுக்கும் பெருமை சேர்த்த, கெளரவம் பெற்றுத்தந்த இசைஞானி இளையராஜாவை போடா, வாடா என ஒருமையில் பேசியுள்ளார்.
உலகெங்கும் வாழும் தமிழர்கள் சோகங்களை மறக்கவும், மகிழ்ச்சியை மேலும் மகிழ்வுடன் கொண்டாடவும் இசை மருத்துவராக இன்றளவும் கொண்டாடப்பட்டு வருபவர் இசைஞானி இளையராஜா. அவரது இசை தன்னை குடிக்கவும், மதுவுக்கு அடிமையாக்கவும் காரணமாக உள்ளது என பேசி இளையராஜாவின் இசையை சிறுமைப்படுத்தியுள்ளார் இயக்குநர் மிஷ்கின்.
ஒருவரை அன்பின் மிகுதியால் ஒருமையில் பேசுவதற்கும், அதுவும் பொதுமேடையில் பேசுவதற்கு வயதும் தகுதியும் வேண்டும். ஹாலிவுட் படங்களை காப்பியடித்து படம் இயக்கும் மிஷ்கின் அவர்களுக்கு அந்த தகுதி உண்டா என்று சமூகவலை தளங்களில் கேள்வி எழுப்பட்டு வருகின்றன.
இயக்குநர் மிஷ்கின் நாலாந்தர வார்த்தைகளையும், முகம் சுளிக்க வைக்கும் பெண்களை கொஞ்சைப்படுத்தும் சொற்களை பயன்படுத்தி பேசியதை மேடையில் இருந்த தமிழ் சினிமாவின் ஆகசிறந்த இயக்குநர்களான அமீர், லிங்குசாமி, சமுத்திரகனி, பா.ரஞ்சித் ஆகியோர் தடுக்கவோ, கண்டிக்கவோ இல்லை.
சமூகம், அரசியல் என்று பல்வேறு விஷயங்களில் கருத்துக்களையும், விமர்சனங்களையும் அறிக்கைகளாகவும், சமூகவலைதளங்களில் பதிவுகளை கடந்த காலங்களில் வெளியிட்ட மேற்கண்ட இயக்குநர்கள் மெளனம் சாதித்ததை ஆழ்ந்த கவலையுடன் சுட்டிக்காட்ட விரும்புகிறது தென்னிந்திய சினிமா பிரஸ் கிளப்.
எனவே பாட்டல் ராதா விழாவில் பொறுப்பற்ற முறையில் அநாகரிகமாகவும், நாகூசும் வகையில் பேசிய இயக்குநர் மிஷ்கின் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.
அவ்வாறு மிஷ்கின் மன்னிப்பு கேட்காத வரையில் தென்னிந்திய மொழிகளில் சினிமா பத்திரிகையாளர்களாக பணியாற்றுவோர் ஒருங்கிணைந்து இருக்கும் தென்னிந்திய சினிமா பிரஸ் கிளப் உறுப்பினர்கள் இயக்குநர் மிஷ்கின் பங்கேற்கும் சினிமா விழாக்களில் பங்கேற்பது இல்லை என முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. இதற்கு அனைத்து சினிமா பத்திரிகையாளர்களும் ஆதரவு வழங்கிட வேண்டுகிறோம்.
சினிமா தவிர்த்து,  இயக்குநர் மிஷ்கின் கலந்து கொள்ளும் பொது  நிகழ்வுகளை புறக்கணிக்குமாறு இந்தியா முழுவதும் இருக்கும் பத்திரிகையாளர்கள் சங்கங்களுக்கு கடிதம் எழுதுவது என தென்னிந்திய சினிமா பிரஸ் கிளப் முடிவெடுத்திருக்கிறது.
சினிமா, மற்றும் பொது மேடைகளில் அநாகரிகமாகவும், கண்ணிய குறைவாகவும் பேசி வரும் இயக்குநர் மிஷ்கின் அவர்கள் மீது தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயக்குநர்கள் சங்கத்திற்கு தென்னிந்திய சினிமா பிரஸ் கிளப் கடிதம் அனுப்பியுள்ளது. எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் 26.01.2025 காலை சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்ற பேடு கேர்ள் திரைப்பட விழாவில் மண்டியிட்டு அனைவரிடமும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்பதாக பேசியுள்ளார்.
நிகழ்வில் இயக்குநர்மிஷ்கின் பேசும்போது,
 “அனைவரும் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்” என்றார்கள் என்று தொடங்கினார். அதன் பின், “முதல் ஆளாக பாடலாசிரியர் தாமரையிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். அவர் என்னைப் பற்றிய விமர்சனத்தில் வெற்றி பெற்றுவிட்டதால் இப்படி பேசுகிறேன் என்று கூறியிருந்தார். வெற்றி என் மீது தலை மீதிருந்தால் பெரிய ஆட்களுடன் படம் செய்திருக்க வேண்டும். அதனால் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.
பின் இயக்குநர் லெனின் பாரதி விமர்சித்திருந்தார். தத்துவ ரீதியாக விமர்சித்திருந்தார். அவரிடமும் வருத்தத்தையும், மன்னிப்பையும் கேட்டுக் கொள்கிறேன். என்னை திட்டி நடிகர் அருள்தாஸ் பிரபலமாகவே ஆகிவிட்டார். அவரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். லட்சுமி ராமகிருஷ்ணனிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். என்னுடைய தயாரிப்பாளர் தாணுவிடம் மன்னிப்புக் கேட்டு கொள்கிறேன்.

என் மீது செருப்பை எறிய வேண்டும் என்று கூறிய நண்பரிடம் மன்னிப்புக் கேட்டு கொள்கிறேன். அன்று மேடையில் இருந்த வெற்றிமாறன் மற்றும் அமீர் இருவரும் சிரித்தார்கள் என்று பலரும் திட்டினார்கள். ஜோக்காக பேசியது, இரண்டு மூன்று வார்த்தை மேலே போய்விட்டது அவ்வளவே. மனதில் இருந்து பேசியதால் அப்படி ஆகிவிட்டது என்பதால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

என்னைப் பற்றி விஷால் மோசமாக பேசும் போது கூட, மேடையில் விஷாலைப் பற்றி பேசும் போது கூட வசை வார்த்தைகளால் பேசவில்லை.
ஒரு படத்தின் மேடையில் அதைப் பற்றி பேசும் போது, என் மனதில் ஆழத்தில் இருந்து தான் பேசுவேன். ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற ஒரு படம் வந்தது.
அதைப் பற்றி யாரேனும் விமர்சனம் செய்தார்களா? என்னைப் பற்றி தெரிய வேண்டுமென்றால் என் படங்கள் பார்த்தால் போதும். என் படங்கள் சமூக கருத்துகள் சொல்லவில்லையா? அதில் பேரன்பு இல்லையா?. கமல் சாரிடம் போய்விட்டு திரும்ப வந்துவிட்டேன். ரஜினி சாரிடம் கதை சொல்ல வாய்ப்பு கிடைத்தது. நான் செல்லவில்லை.

மனிதர்களையும், பிராணிகளையும் நேசிப்பவன் நான். சினிமாவையும், சினிமா மேடையையும் நேசித்துக் கொண்டே இருக்கிறவன். அதைத் தாண்டி வேறு வேலையே இல்லை. ஒவ்வொரு தருணத்திலும் துரோகத்தை அனுபவித்துக் கொண்டே இருக்கிறேன். எப்படி என்னால் சக மனிதனைப் பார்த்து அவ்வாறு பேச முடியும்.

என்னிடம் 40 ஆண்டுகளுக்கு படிக்க வேண்டிய புத்தகங்கள் இருக்கிறது. அவ்வளவு மனிதர்களைநேசிக்க வேண்டியது இருக்கிறது, நிறைய ஊர்களுக்கு செல்ல வேண்டியது இருக்கிறது. உங்கள் அனைவரின் முன் மண்டியிட்டு மன்னிப்புக் கேட்டு, உங்களை கடவுள் ஆக்குகிறேன்” என்று மிஷ்கின் பேசினார்.