சிலம்பரசன் நடிக்கும் படம் கைவிடப்படுகிறதா?

“கமல்ஹாசனும் அவர் கைவிட்ட படங்களும் என பட்டியலையே போடலாம். அவர் நடிப்பதாக இருந்த, அவர் தயாரிப்பதாக இருந்த சில படங்கள் கடந்த சில வருடங்களில் கைவிடப்பட்டுள்ளன. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கவிருந்த சில படங்கள் அடுத்தடுத்து கைவிடப்பட்டன. குறிப்பாக எச். வினோத் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கவிருந்த கமலின் 233வது படம் கைவிடப்பட்டது. அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கவிருந்த படமும் கைவிடப்பட்டு, அவர் வேறு தயாரிப்பாளரைத் தேடிப் போய்விட்டார்.

இந்த வரிசையில் தற்போது சிம்புவின் 48வது படமும் இணையலாம் என்ற ஒரு தகவல் வெளியாகி உள்ளது. தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்க ஒரு சரித்திரப்படமாக இப்படம் உருவாக இருந்தது. படத்திற்காக போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டார்கள். ஆனால், படப்பிடிப்பு இதுவரை ஆரம்பமாகவேயில்லை. தற்போது இப்படத்தைத் தயாரிப்பதிலிருந்து கமல்ஹாசன் நிறுவனம் பின் வாங்கிவிட்டது என்கிறார்கள்.

படத்தின் தயாரிப்பு செலவைப் பார்த்தால் எங்கேயோ போய் நிற்கிறதாம். தியேட்டர் உரிமை, சாட்டிலைட் உரிமை, ஓடிடி உரிமை என மொத்த வருவாயையும் போட்டால் கூட படத்தின் பட்ஜெட் மிகவும் இடிக்கிறதாம். சிம்பு படத்திற்கென்று ஒரு குறிப்பிட்ட தொகைதான் வியாபாரம் நடக்கும். அதற்கு மேல் பட்ஜெட் எகிறினால் நஷ்டம் நிச்சயம். எனவே, பரபரப்பாகப் பேசப்பட்ட சிம்பு 48 படத்தின் நிலை சிக்கலில் வந்து நிற்கிறது.”