“சுந்தர்.சி.யுடன் வேலை செய்வது ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் படிப்பது போன்றது” நடித்தவர்களின் பாராட்டு

அவ்னி சினி மேக்ஸ் நிறுவனத்தின் சார்பில் குஷ்பு மற்றும் பென்ஸ் மீடியா சார்பில் ஏ.சி.எஸ். அருண்குமார் இணைந்து தயாரித்துள்ள படம் ‘காபி வித் காதல்’இந்தப் படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் கதாநாயகர்களாக நடிக்க மாளவிகா சர்மா, ரைசா வில்சன், அம்ரிதா ஐயர், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.இந்தப் படத்தின் இசை மற்றும் டிரெயிலர் வெளியீட்டு விழா நேற்று பகல் 12 மணிக்கு சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் நடிகை திவ்யதர்ஷிணி பேசும்போது,

 

 “ஜீவாவும் நானும் இந்த படத்தில் ட்வின்ஸ் போல நடித்துள்ளோம். ஜெய் வந்து எனக்கு தம்பி மாதிரி. படப்பிடிப்பில் அவரை ‘மிட்டாய் மாமா’ என்றுதான் கூப்பிடுவோம். நிஜத்தில் சுந்தர்.சி சார் எப்படி எல்லாருடைய குறை, நிறைகளை கேட்டு அனைவரையும் ஒன்றிணைத்து அரவணைத்துச் செல்வாரோ அதேபோலத்தான் இந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரமும். இந்தக் கதாபாத்திரத்தில் நான் சரியாக இருப்பேன் என அவர் நம்பியது என்னுடைய அதிர்ஷ்டம்…” என்றார்.நடிகை ரைசா வில்சன் பேசும்போது,
 “இந்த படத்தின் படப்பிடிப்பில் யாராவது ஒருவர் காமெடி செய்து கொண்டே இருப்பார்கள். நடிக்கும்போதுகூட சிரிக்காமல் நடிப்பது ரொம்பவே கஷ்டமாக இருந்தது…” என்றார்.நடிகர் ஜீவா பேசும்போது,
 “சுந்தர்.சி சார் படத்தில் நடிக்கும்போது முதல் நாளே நமது டென்சனை குறைத்து விடுவார். எப்படியிருந்தாலும் 45 நாட்களுக்குள் படத்தை முடித்துவிட வேண்டும் என்பதை மனதில் வைத்து செயல்படுவார். அவரது படப்பிடிப்பிற்கு சென்று திரும்பும்போது 100% சந்தோஷத்துடன் திரும்புவோம்.எல்லோரும் அழகாக ஒன்றிணைந்து நடித்தாலும் எங்களுக்குள் நடிப்பில் ஒரு போட்டி இருந்து கொண்டுதான் இருந்தது. எனக்கு நிஜத்தில் சகோதரி இல்லை. ஆனால் அப்படி இருப்பது போல நினைத்துக்கொண்டு படத்தில் நடிப்பது ரொம்பவே கஷ்டம். ஆனாலும் அதை சரியாக செய்துள்ளேன்” என்றார்.பிக் பாஸ் சம்யுக்தா பேசும்போது,
 ” ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்தேன் என்று சொல்லும்போது என்ன உணர்வு ஏற்படுமோ சுந்தர்.சி சார் படத்தில் நடித்து விட்டேன் என்று கூறும்போது அதுபோன்ற ஒரு உணர்வையே தருகிறது. இந்தப் படத்தில் உனக்கு மேக்கப்பும் இல்லை.கிளாமரும் இல்லை என்று சொல்லி குடும்பப் பாங்கான கதாபாத்திரத்தில் என்னை நடிக்க வைத்துவிட்டார் சுந்தர்.சி” என்றார்.நடிகை ஐஸ்வர்யா தத்தா பேசும்போது, 
“நாலு வருசமாகவே சரியான படம் அமையாமல் இருந்தேன். இந்த படத்தின் கதையை சுந்தர்.சி கூறியதுமே உடனே ஒப்புக் கொண்டு எப்போது நடிக்க கிளம்ப வேண்டும் என கேட்டேன். நாளை படப்பிடிப்பு என்றால், முதல் நாள் இரவு எனக்கு தூக்கமே வராது. ஏனென்றால் படப்பிடிப்பு அவ்வளவு ஜாலியாக இருக்கும்” என்றார்.இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா பேசும்போது,
 “இந்தப் படத்தில் மொத்தம் எட்டு பாடல்கள் இருக்கின்றன. பாடல்கள் அனைத்துமே கதையை நகர்த்தும்விதமாகத்தான் இருக்கும். முக்கியமான ஒரு சூழ்நிலையில்கூட சோகமாக இல்லாமல் எனர்ஜி தரும்விதமாக மாற்றம் ஒன்றே மாறாதது என்ற பாடலை உருவாக்கி உள்ளோம். ஆனால் சில நேரங்களில் தாமதமானாலும்கூட சுந்தர்.சி முகம் சுளிக்காமல் என்னை வசதியாக பணியாற்ற வைத்தார்” என்று கூறினார்.இந்தப் படத்தில் ‘தியாகி பாய்ஸ்’ என்ற பாடலை எழுதியுள்ள இயக்குநர் பேரரசு பேசும்போது,
 “யுவன் சங்கர் ராஜா இசையில் இதற்கு முன்னால் ‘வல்லவன்’ படத்தில் ‘அம்மாடி ஆத்தாடி’ என்கிற பாடலை எழுதி இருந்தேன். இதில் ‘தியாகி பாய்ஸ்’ என்கிற பாடலை எழுதியுள்ளேன். இயக்குநர் சுந்தர்சி என்றாலே ‘கலர்ஃபுல் வித் கலகலப்பு’ என்று சொல்லலாம்.. பாலசந்தர் எப்படி ஆரம்பத்தில் குடும்பப் பாங்கான படங்களை எடுத்து பின்பு ஸ்டைலிஷான படங்களாக எடுக்க ஆரம்பித்தாரோ அதேபோல காலத்திற்கு ஏற்றார் போல் சுந்தர்.சி தன்னை பக்கா யூத்தாக மாற்றிக் கொண்டு வருகிறார்…” என்றார்.இந்தப் படத்தில் பாடல் எழுதியுள்ள கவிஞர் சினேகன் பேசும்போது,
 “இதுவரையிலும் கிட்டத்தட்ட 3000 பாடல்கள்வரையிலும் எழுதி உள்ளேன். ஆனால் ஒரு சில இயக்குநர்களின் படங்களில் பணியாற்றவில்லையே என்கிற ஏக்கம் இருந்து வந்தது. அதில் சுந்தர்.சியும் ஒருவர்.அந்த வகையில் இந்தப் படத்தில் ஒரு பாடல் எனக்கு எழுத வாய்ப்பு தேடி வந்தது. ஆனால் அந்த சமயத்தில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மறுநாள் காலை நான் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்ல வேண்டிய இக்கட்டான சூழலில்தான் முதல் நாள் இரவு யுவன் சங்கர் ராஜா போன் செய்து, “நாளை ஒரு பாடல் நீங்கள் எழுத வேண்டும். நேரில் வாருங்கள்” என்றார்.அவரிடம் நிலைமையை சொல்லி இந்தப் படத்தில் நான் எப்படியும் பாட்டு எழுத வேண்டும் என்று கூறி, அன்றைய இரவிலேயே பதினொரு மணிக்கு ஆரம்பித்து ஒரு மணிக்குள் அந்த பாடலை எழுதிக் கொடுத்துவிட்டுத்தான், மறுநாள் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு போனேன். இயக்குநருடன் இல்லாமலேயே நான் முதன்முதலில் எழுதிய பாடல் இதுவாகத்தான் இருக்கும்…” என்றார்.