சைத்ரா – விமர்சனம்

ஒரு வீட்டுக்குள் பேய்கள் இருந்தால் அங்கு வசிப்பவர்கள் நிலை என்னவாக இருக்கும்? என்பதைப் பல்வேறு முடிச்சுகளோடும் திடுக்கிடும் திருப்பங்களோடும் சொல்லியிருக்கும் படம் சைத்ரா.
பேய்கள் உள்ள வீட்டுக்குள் யாஷிகா ஆனந்த், அவிதேஜ் தம்பதியினர் வசிக்கின்றனர்.தன்னைப் பேய்கள் கொன்றுவிடும் என்று யாஷிகா பயப்படுகிறார். அவர் பயப்படுவதற்கேற்ப சில நிகழ்வுகள் நடக்கின்றன. அவற்றிலிருந்து மீண்டார்களா? இறுதியில் என்ன நடந்தது? என்பனவற்றைத் திகிலுடன் சொல்லியிருக்கிறார்கள்.
அழகான பெண்கள் அச்சப்பட்டால் அதுவும் ஓர் அழகுதான் என்பதற்கேற்ப யாஷிகா ஆனந்த் இருக்கிறார்.தோழி மற்றும் தோழியின் கணவர் ஆகியோர் விபத்தில் சிக்கி இறப்பதை நேரில் பார்த்து அதனால் பாதிப்புக்குள்ளாகும் வேடம். அதற்குச் சரியாக நடித்திருக்கிறார்.
அவருடைய கணவராக நடித்திருக்கும் அவிதேஜ்.மனைவியின் நிலையை எண்ணிக் கலங்கும் பாவப்பட்ட கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார்.பொருத்தமாக நடித்திருக்கிறார்.படத்தில் நடித்திருக்கும், திவ்யா, பூஜா, கண்ணன், ரமணன், லூயிஸ், மொசக்குட்டி,சக்தி மகேந்திரா ஆகியோரும் அவரவர் வேலையைச் செய்திருக்கின்றனர்.
சதீஷ்குமாரின் ஒளிப்பதிவும் கதைக்கு ஏற்ப இருந்து பயப்பட வைக்கிறது.இசையமைத்திருக்கும் பிரபாகரன் மெய்யப்பனும் தன் பங்குக்குப் பார்வையாளர்களைப் பயப்பட வைக்கிறார்.படம் விறுவிறுப்பாகச் செல்ல படத்தொகுப்பாளர் எலிஷா உதவியிருக்கிறார்.
எழுதி இயக்கியிருக்கிறார் எம்.ஜெனித்குமார். யாஷிகா ஆனந்த் கதாபாத்திரத்தை எழுதியதிலும் அதில் அவரை நடிக்க வைத்ததிலுமே பாதி வெற்றி பெற்றுவிடுகிறார். படத்தில் யாஷிகா ஆனந்த் சொல்வது உண்மையா? பொய்யா? என்றறியும் ஆர்வத்துக்குப் பார்வையாளர்களை உட்படுத்துவதில் மீதி வெற்றியைப் பெற்றுவிடுகிறார்.படத்தின் கடைசியில் இருக்கும் பலவீனங்களைத் தாண்டியும் சைத்ராவை நினைத்தால் பயம் வருகிறது.