டங்கி – திரைப்பட விமர்சனம்

டங்கிபடத்தை ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானி ஃபிலிம்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் ராஜ்குமார் ஹிரானி மற்றும் கௌரி கான் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தில் ஷாருக்கானுடன் பொமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உள்ளிட்ட பல திறமையான நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்திற்கு அபிஜித் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் சுனில் தில்லான் ஆகியோர் இணைந்து கதை எழுதி இருக்கிறார்கள். ஒளிப்பதிவு – மனுஷ் நந்தன், சி.கே.முரளிதரன்.

‘முன்னாபாய்’, ‘த்ரீ இடியட்ஸ்’, ‘பிகே’ போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கிவரான ராஜ்குமார் ஹிரானி முதல்முறையாக ஷாருக்கானுடன் இந்த ‘டங்கி’ திரைப்படம் மூலம் இணைந்துள்ளார்.

“பதான்’ மற்றும் ‘ஜவான்’ திரைப்படங்கள் என்னுடைய ரசிகர்களுக்காக நான் நடித்த படம். ஆனால் இந்த ‘டங்கி’ எனக்காக நானே விரும்பி நடித்த படம்” என்று ஷாருக்கான் பல பேட்டிகளில் கூறியிருந்தார். எதற்காக இப்படி சொன்னார் என்பது படம் பார்த்த பின்புதான் புரிகிறது.

இந்திய சினிமாவில் அதிகமாக பேசப்படாத, சொல்லப்படாத கதை இது. மிகப் பெரிய ஓப்பனிங்கையும், வசூல் சம்பாதிப்பையும் கையில் வைத்திருக்கும் இந்தியாவின் சூப்பர் ஸ்டாரான ஷாரூக்கான் இந்தக் கதையைத் தேர்வு செய்ததே மிகப் பெரிய ஆச்சரியம்தான். இதற்காகவே ஷாரூக்கானுக்கு ஒரு கிரேட் சல்யூட்!

‘டங்கி’ என்பது பஞ்சாபி மக்களால் பயன்படுத்தப்படும் சொல். இதன் பொருள் சட்ட விரோத குடியேற்றம். ‘டங்கி ஃப்ளைட்ஸ்’ என்று இதன் சாகசப் பயணங்கள் குறித்து பல புத்தகங்களில் கதைகளும், நேரடி அனுபவங்களும் எழுதப்பட்டுள்ளன.

1970-களின் பிற்பாதியில் பஞ்சாப், ஹரியானா, குஜராத் போன்ற மாநிலங்களில் இருந்து பல ஆயிரக்கணக்கான இந்தியர்கள் அமெரிக்கா, லண்டன் என்று வெளிநாடுகளுக்கு வேலை தேடி சென்றனர்.

அப்படி முறைப்படி இந்திய விசா பெற்று செல்ல முடியாதவர்கள் திருட்டுத்தனமாக ‘கழுதை விமானம்’ என்று சொல்லப்பட்ட பயணத்தின் மூலம் பிற நாடுகளுக்குள் சட்ட விரோத குடியேறியதைத்தான் இப்படம் பேசுகிறது.

மனு ரன்தாவா என்ற டாப்ஸியும், லகன்பால் என்ற விக்ரம் கோச்சாரும், பாலி கக்கார் என்ற அனில் குரோவரும் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் பிறந்து வளர்ந்தவர்கள்.

தங்களது குடும்பச் சூழல் காரணமாக 25 ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியாவில் இருந்து திருட்டுத்தனமாக வெளியேறி ஈரான், பாகிஸ்தான் என்று பல நாடுகளின் ஊடாகப் பயணித்து கடைசியாக லண்டனை அடைந்திருக்கிறார்கள்.

அந்த நாட்டிடம் அடைக்கலம் பெற்று அங்கேயே இத்தனையாண்டுகளாக வாழ்ந்தும்விட்டார்கள். ஆனால் இப்போது இவர்களுக்கு இந்தியா திரும்ப வேண்டும் என்று மனம் கொள்ளாத ஆசை. இவர்கள் அரசியல் அடைக்கலம் பெற்றவர்கள் என்பதால் இந்திய அரசு விசா கொடுக்காது என்னும் நிலைமை.

இதனால் எப்படியாவது இந்தியாவுக்குப் போக வேண்டும் என்று தவியாய் தவிப்பவர்களின் மனதில் வந்து நிற்கிறார் ஒரு காலத்தில் இவர்களது கூட்டாளியாய் இருந்த ஹார்டி என்ற ஹர்தயாள்சிங் தில்லான்.

ஹார்டியை துபாய்க்கு வரச் சொல்லும் மானு அண்ட் கோ.. அங்கே சென்றுவிட்டு எப்படியாவது ஹார்டியின் துணையோடு இந்தியாவுக்குள் நுழைந்துவிடலாம் என்று திட்டம் தீட்டி துபாய்க்கு வந்து சேர்கிறார்கள்.

இவர்கள் திட்டமிட்டபடி துபாயில் இருந்து இந்தியாவுக்கு வந்து சேர்ந்தார்களா.. இல்லையா.. இவர்களுக்கும் ஷாரூக்கானுக்கும் என்ன நட்பு.. டாப்ஸி இந்தியா வர வேண்டும் என்று துடிப்பது ஏன் என்ற கேள்விக்கெல்லாம் விடைதான் இந்த டங்கி படத்தின் திரைக்கதை.

ஹார்டியாக வேடமேற்றிருக்கும் ஷாருக்கான் தனது இயல்பான நடிப்பால் மொத்தப் படத்தையும் தன் தோளில் சுமந்திருக்கிறார். பரோட்டா செய்வது எப்படி என்பதை ஆங்கிலத்தில் சொல்லத் தடுமாறும் இடம் உட்பட ஒவ்வொரு இடத்திலும் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்துகிறார் அவர்.

ராணுவ வீரராக நடித்திருக்கும் ஷாருக்கின் கதாப்பாத்திரத்தின் மூலமாக தேச பக்தியையும் ஊட்டியிருக்கிறார் இயக்குநர்.  ஒகு ராணுவ வீரர் எந்த இடத்திலும் தனது தேசத்தை விட்டுக் கொடுக்க மாட்டார் என்பதை ஷாரூக்கானின் கதாப்பாத்திரம் மூலமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

எமோஷனல் காட்சிகளில் மட்டுமின்றி நகைச்சுவை காட்சிகளிலும் ஷாருக் தனது திறமையை சரியாக வெளிப்படுத்தி அமர்க்களப்படுத்தியுள்ளார். நீதிமன்ற காட்சியிலும், கிளைமாக்ஸில் டாப்ஸியின் முடிவு தெரிந்து அதிர்ச்சியாகும் காட்சியிலும் ஷாருக்கின் நடிப்பு மிகச் சிறப்பு.

ஷாருக்கின் திரையுலக வாழ்க்கையில் இந்தப் படத்தில் அவர் ஏற்றிருக்கும் ஹார்டி என்ற இந்தக் கதாப்பாத்திரம் அவரது ரசிகர்களுக்கு என்றும் நினைவில் இருக்கும்.

மனு கேரக்டரில் நடித்திருக்கும் டாப்ஸி தனது ஒட்டு மொத்த நடிப்பையும் இந்தப் படத்தில் கொட்டியுள்ளார். இதுவரை டாப்ஸி நடித்த கதாப்பாத்திரங்களிலேயே மிகவும் உணர்வுபூர்வமான பாத்திரம் இதுவாகத்தான் இருக்கும்.

தன்னைப் பற்றியே கவலைப்படாமல் கடன் கொடுத்தவர் கையில் இருக்கும் தனது வீட்டை மீட்க பெரும் பணம் சம்பாதிக்கத் துடிக்கும் அந்த வேகத்துடன் முதற்பாதியில் அவருடைய முனைப்பும், அதற்கேற்ற நடிப்பும் ரசிக்க வைத்திருக்கிறது.

வேலை செய்யும் ஹோட்டல் உரிமையாளரிடத்தில் வேலையைவிட்டு நின்றுவிட்டதாகச் சொல்லிவிட்டு தானே கஸ்டமரை போல சேரில் அமர்ந்து டேபிளில் காலைத் தூக்கிப் போட்டு ஸ்டைல் காட்டும் காட்சியில் சொக்க வைத்திருக்கிறார் டாப்ஸி. அதே நேரம் “ஊர்ல எனக்குன்னு ஒரு வீடு இல்லாததால்தான் இங்கு வந்தேன்” என்று ஷாரூக்கிடம் சொல்லும் காட்சியில் நம் மனதைத் தொட்டுவிட்டார் டாப்ஸி.

கிளைமாக்ஸில் ஷாரூக்கும் தன்னைப் போலவே கல்யாணம் செய்து கொள்ளாமலேயேவிட்டுவிட்டார் என்பதை அறிந்தவுடன் அவர் காட்டும் ரியாக்ஷனும் நடிப்பும், அந்தக் காட்சியை வெகுவாக உயர்த்திவிட்டது.

விக்கி கௌஷல் சின்னக் கதாபாத்திரமாக இருந்தாலும் போமன் இராணியிடம் சண்டையிட்டு பாடத்தை நடத்தச் சொல்லுவதும், எப்படியாவது லண்டன் போயே ஆக வேண்டும் என்ற வெறியைக் காட்டுமிடத்திலும் இறுதியில் சோக முடிவைத் தான் எடுத்துக் கொள்ளும்போதும் மனதைத் தொட்டுவிட்டார்.

புக்கு வேடத்தில் நடித்திருக்கும் விக்ரமும், பாலி வேடத்தில் அனில் குரோவரும்கூட அசத்தியுள்ளனர். கல்யாண மாப்பிள்ளையாகப் போய் ஒரு பெண்ணுக்கு 10 மாப்பிள்ளையா என்று அலறியடித்து வரும் காட்சியில் வயிறு வலிக்கும் அளவுக்கு சிரிக்க வைத்திருக்கிறார் விக்ரம்.

லண்டனில் ஏதோ பெரிய வேலையில் இருப்பதாகப் பொய் சொல்லிவிட்டு பிச்சையெடுக்கும் பாலி தனது நடிப்பால் நம்மைக் கண் கலங்க வைத்திருக்கிறார்.

ஆங்கில ஆசிரியராக நடித்திருக்கும் போமன் இரானி தனது அனுபவ நடிப்பால் தனது கதாப்பாத்திரத்தை ரசிக்க வைத்திருக்கிறார். லாவட்டரியை மையமாக வைத்து அவர் சொல்லிக் கொடுக்கும் பாடலும், வரிகளும் மிக சுவையானவை.

பின்னணி இசையும், பாடல்களும் சிறப்பாக வந்துள்ளன. படத்தை இயக்குநரே சிறப்பாக எடிட் செய்துள்ளார். மூன்று ஒளிப்பதிவாளர்களும் தங்களது பணியை செவ்வனே செய்திருக்கிறார்கள். லண்டன், துபாய், பஞ்சாப் என்று மூன்றுவிதமான வெளிச்சங்களை உள் வாங்கினாலும் மூன்று இடங்களுமே திரையில் ஜொலிக்கின்றன.

ஐந்து வருடங்களுக்குப் பிறகு படம் இயக்கியிருக்கும் ஹிரானி, தனது ‘சிக்னேச்சர் ஸ்டைலை’ இந்தப் படத்திலும் தொடர்ந்திருக்கிறார் .

சட்ட விரோதமாக நாடு கடந்து செல்பவர்களின் கொடூரமான திகில் பயணத்தை வேதனையோடு சொல்லியிருக்கும் இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி, எந்த நாட்டுக்குப் பிழைக்கச் சென்றாலும் சொந்த நாடு கொடுக்கும் மனவோட்டத்தை எந்த நாடும் தராது என்பதை பொட்டில் அடித்தாற்போல் சொல்லியிருக்கிறார்,

லண்டன் போயே ஆக வேண்டும் என்ற முனைப்போடு செயல்படுபவர்களுக்கான நேர்மையான வழிகள் அனைத்தும் அடைபட்ட பிறகுதான் குறுக்கு வழியை நாடுகிறார்கள் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறது திரைக்கதை.

இதற்காக திருட்டுக் கல்யாணம் செய்யப் போவதில் துவங்கி.. ஆங்கிலம் கற்க ஆரம்பித்து, அதன் வழியாக தப்புத் தப்பாக பேசி விசா பெற முனையும் காட்சிகளை  நகைச்சுவையாகவும், எமோஷனலாகவும் சொல்லியிருக்கிறார்கள்.

‘நீங்க ஒரு சப்ஜெட்டை கொடுங்க.. 2 நிமிஷம் இங்கிலீஷ்ல எப்படி பேசறேன்னு மட்டும் பாருங்க’ என்று ஒவ்வொருவரும் ஒரே சப்ஜெக்ட்டை எடுத்துக் கொடுத்து பேசும் காட்சிகளில் சிரிப்பலையில் தியேட்டரே அதிர்கிறது.

லண்டனில் காத்திருக்கும் காதலியைக் காண விசாவுக்கு ஏங்கித் தவிக்கும் விக்கி கவுசல் அது தேவையில்லை என்றபோது தற்கொலை செய்து கொள்ள.. இதுதான் திரைக்கதையில் தீயைப் பற்ற வைத்திருக்கிறது.

தேச பக்தியால் குறுக்கு வழியில் போக விடாமல் தடுத்த ஷாரூக்கையே அந்தத் தற்கொலைதான் மாற்றுப் பாதைக்குள் தள்ளுகிறது. அந்த அளவுக்கு உயிரை பணயம் வைத்து, நாடுகள் பல கடந்து… லண்டன் மண்ணை மிதித்ததை அறிந்ததும் அவர்கள் படும் மகிழ்ச்சியும், உற்சாகமும் நம்மையும் தொற்றிக் கொள்கிறது.

பொய்யான கல்யாணத்திற்காக தேவாலயத்தில் நுழைந்து சண்டையாகி, இதனால் அவர்கள் அனைவரும் போலீஸில் மாட்டிக் கொள்ளும் அடுத்த நொடியில் அவர்களின் வாழ்க்கை தவிடுபொடியாகும்போது நமக்கே பாவ உணர்ச்சியைக் காட்டிவிட்டது.

தாங்கள் கனவு கண்ட வாழ்க்கையை அங்கே வாழ முடியாது என்ற யதார்த்த நிலைமை அவர்களது முகத்தில் தயவு தாட்சண்யமே இல்லாமல் அறையும்போது,  இத்தனை போராட்டமும் வீணாப் போச்சே என்ற பச்சாபத உணர்வை நமக்கும் தந்திருக்கிறது திரைக்கதை.

கிளைமாக்ஸில் உலகம் முழுவதும் சட்ட விரோதமாக நாடு கடந்து செல்லும் அகதி மக்களின் உண்மை நிலையை புகைப்படங்களாகக் காண்பிக்கும்போது நமக்குப் பரிதாபமாகத்தான் இருக்கிறது.

“வெள்ளைக்காரன் இந்தியா வரும்போது “ஒனக்கு இந்தி தெரியுமா கிராமர் தெரியுமா?”ன்னு நாம கேட்டோமா?” என்பது போன்ற பல வசனங்கள் கவனிக்க வைக்கின்றன.

வேற்று நாட்டவர்கள் சொந்த நாட்டைவிட்டு வேறொரு நாட்டில் குடியேற வரும்போது பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்கும் என்று இரண்டுவிதமான அளவு கோலை வைத்து செயல்படும் அந்தந்த நாடுகளின் சட்டங்களை விமர்சித்திருக்கிறார் இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி.

அவரின் முந்தைய படங்களான ‘3 இடியட்ஸ்’, ‘பி.கே’ போன்ற படங்கள் தந்த பாதிப்பை  இந்த ‘டங்கி’ தரவில்லை என்றாலும் ஒரு மன நிறைவைத் தருகிறது.