கால்டாக்ஸி டிரைவராக இருக்கும் அப்பா தேர்தல் அரசியல் காரணமாக கூலிப்படைகளால் கொலை செய்யப்படுகிறார் அந்த அதிர்ச்சியில் அம்மாபக்கவாத நோயால் பாதிக்கப்படுகிறார். தம்பி வேலை கிடைத்து வெளியூர் சென்றுவிடுகிறான். இந்தச் சூழலில் அப்பா ஓட்டிய வண்டியை ஓட்டத் தொடங்குகிறார் ஐஸ்வர்யாராஜேஷ்.
ஒருநாள் அவருடைய வண்டியில் கூலிப்படையினர் ஏறுகிறார்கள். அவர்களைக் காவல்துறை துரத்துகிறது.கூலிப்படையினர் ஐஸ்வர்யாராஜேஷை பணயக்கைதி போல் பயன்படுத்துகின்றனர் அதன்பின் என்னவெல்லாம் நடக்கிறது? என்பதை விறுவிறுப்புடன் காட்சிப்படுத்தி இருக்கும் படம் டிரைவர் ஜமுனா.
மிகப்பாந்தமாக அம்மாவைக் கவனிப்பதும் அதேஅளவு வாஞ்சையுடன் வண்டியைக் கழுவி தயார்ப்படுத்துவது, திருமணத்துக்கு வற்புறுத்தும் அத்தையிடம் தவித்து நிற்பது என அறிமுகக்காட்சிகளிலேயே தன் நடிப்பு முத்திரையை பதிக்கிறார் ஐஸ்வர்யாராஜேஷ்.
அதன்பின் ஓடுகிற வண்டிக்குள் கூலிப்படையினரால் நடத்தப்படுகிற பதட்டமான சூழலை அவர் எதிர்கொள்கிற விதம் சிறப்பு. இளம்பெண்களுக்கு எடுத்துக்காட்டாக அமைந்திருக்கும் அந்த வேடத்தின் பொறுப்புணர்ந்து நடித்து வரவேற்பைப் பெறுகிறார்.
அரசியல்வாதிகளாக வரும் ஆடுகளம் நரேன்,மணிகண்டன் ராஜேஷ்,கவிதாபாரதி,
இசையமைப்பாளராக நடிக்கும் அபிஷேக்,ஐஸ்வர்யாராஜேஷின் அம்மாவாக வரும் ஸ்ரீரஞ்சனி, அப்பாவாக வரும் பாண்டியன் ஆகியோர் இயல்பாக நடித்திருக்கிறார்கள்.கோகுல்பினாயின் ஒளிப்பதிவில் வேகமாக சாலையில் செல்லும் கார்போன்ற
திரைக்கதையில் படம் ஓடுகிறது
ஜிப்ரானின் பின்னணி இசை நெடுஞ்சாலை துரத்தல் காட்சிகளில் மட்டுமின்றி அம்மாவுடன் ஐஸ்வர்யாராஜேஷ் உரையாடும் காட்சிகளிலும் உயர்ந்து நிற்கிறது.
அதிகாரம் பணபலம் ஆகியனவற்றால் பாதிக்கப்படுகிற எளிய குடும்பத்தைச் சேர்ந்த இளம்பெண் தன் மன உறுதியை மட்டுமே துணையாகக் கொண்டு போராடி வெற்றி பெறுகிறார் என்கிற வலிமையான ஒருவரிக்கதையை பரபரப்பான திரைக்கதையாக்கியிருக்கிறார் இயக்குநர் பா.கின்ஸ்லின்.
இறுதிக்காட்சிகளில்
நடக்கும் திருப்பங்கள் வியப்பூட்டுகின்றன.கடைசி கொஞ்சநேரத்தில் ஒவ்வொரு காட்சியிலும் வெளிப்படும் ரகசியங்கள் படத்துக்குப் பலம் சேர்க்கிறது
வலிமையான, அழுத்தமான
கதாபாத்திரத்தை இயல்பாகச் செய்து படத்தை ரசிக்க வைத்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.