டீமன் – திரைப்பட விமர்சனம்

திகில் திரைப்படம் எடுக்க நினைக்கும் இயக்குநர் வாழ்க்கையிலேயே திகில் அனுபவங்கள் ஏற்பட்டால் எப்படி இருக்கும்? டீமன் படத்தின் ஒருவரி திரைக்கதை இதுதான்.

இதற்குள் ஓர் உண்மை நிகழ்வு அதையொட்டிய சில கற்பனைகள் ஆகியனவற்றைக் கலந்து திரைக்கதை எழுதப்பட்டிருக்கிறது.

படத்தின் நாயகன் சச்சின், திகில் படமெடுக்கவிருக்கும் நிலையில் அடுக்குமாடிக் குடியிருப்பு வீடொன்றில் குடியேறுகிறார். அங்கு அவருக்குப் பல திகில் நிகழ்வுகள்.

அந்த வீட்டிலிருந்து வெளியேறினாலும் மீண்டும் அங்கேயே போய்விடும் நிலை. அவர் என்னவாகிறார்? அந்த வீட்டின் கதை என்ன? ஆகியனவற்றுக்குப் பயம் கலந்து விடை சொல்கிறது படம்.

நாயகனாக நடித்திருக்கும் சச்சின், தானும் பயப்பட்டு படம் பார்க்கிறவர்களையும் பயப்பட வைக்கிறார். திரைப்பட இயக்குநர் என்கிற வேடம் அவருக்குப் பலமாக அமைந்திருக்கிறது.

திகில் படங்களில் நாயகிகளுக்கு கூடுதல் இடம் இருக்கும்.இந்தப்பட நாயகி அபர்ணதிக்கு அவ்வளவு வாய்ப்பு இல்லை.ஆனால் கிடைத்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தி இருக்கிறார்.

இணை இயக்குநர் வேடத்தில் நடித்திருக்கும் சோமசுந்தரம், நகைச்சுவைக்காக இருக்கும் அஸ்வின் உள்ளிட்ட பலர் படத்தில் இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் எஸ்.ஆனந்தகுமார் படத்தின் தரத்தை உயர்த்தப் பாடுபட்டிருக்கிறார். திகில் பட இலக்கணங்களை மீறாமல் படமாக்கியிருக்கிறார்.

ரோனிரபெல் இசையில் பாடல்கள் கேட்கலாம்.கதையில் இருக்கும் பயத்தை பின்னணி இசையிலும் வெளிப்படுத்திக் கூடுதலாகப் பயப்பட வைக்கிறார்.

இயக்குநர் ரமேஷ்பழனிவேல், ஒரு தெளிவான கதை அதற்கேற்ற திரைக்கதை பொருத்தமான நாயகன் என எல்லாவற்றையும் சரிவிகிதமாகக் கலந்து ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார்