தனுஷின் ‘ராயன்’ ஜூனில் ரிலீஸ்

தனுஷின் ‘ராயன்’ திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முதல் சிங்கிள் மே 9-ம் தேதி வெளியாகிறது.
தனுஷின் 50-வது படமாக உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்தில், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடித்துள்ளனர். படம் வட சென்னையை கதைக்களமாக கொண்டு உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக தனுஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்திருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் சிங்கிள் வரும் 9-ம் தேதி வெளியாக உள்ளது. படம் வரும் ஜூன் மாதம் திரைக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ படமும் ஜூன் மாத வெளியீடு என தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலுக்குப் பின் நட்சத்திர நடிகர்களின் படங்கள் அடுத்தடுத்து திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.